Header Ads



இலங்கையில் ஓமான் முதலிடுமா...? வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துக்கள்


இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக தமது நாட்டின் நிறுவனம் ஒன்று முதலிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஓமான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் முதலீட்டு சபையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின் பண்டார, அம்பாந்தோட்டை – மரிஜ்ஜவில ஏற்றுமதி உருவாக்க வலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம் முதலீட்டு சபை வரலாற்றில் பாரிய முதலீடு என தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த முதலீட்டில் நூற்றுக்கு 30 சதவீதம் ஓமான் நிறுவனம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்திருந்த நிலையில், ஓமான் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொடர்பான அமைச்சின் பிரதி செயலாளர் சலீம் அல் அவுபி, இந்த முதலீடு தொடர்பில் தமது தரப்புக்கு எந்த விடயமும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவையிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த முதலீடு குறித்த காசோலையில் யார் கையெழுத்திட்டார் என்பதும் தமக்கு தெரியாது என அந்த செய்தி சேவைக்கு ஓமான் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொடர்பான அமைச்சின் பிரதி செயலாளர் சலீம் அல் அவுபி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை முதலீட்டு சபையும், ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படும் இந்த திட்டம் தொடர்பில் இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் ஓமான் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொடர்பான அமைச்சிற்கும் சில்வர் பார்க் சர்வதேச நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓமான் அரசாங்கம் இது தொடர்பில் ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதற்காக நூற்றுக்கு 30 சதவீத பங்களிப்பை வழங்க அந்த நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.