Header Ads



சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு,, என்று உணர்ந்தவரின் வரலாறு இது

மெலிந்த தேகம், எளிய தோற்றம், நடுத்தர உயரம், வெண்ணிற ஆடை, மெல்லிய குரல், அமைதியான நடை, உடலின் வயது 72. உள்ளத்தின் வயது 17. பாசங்கற்ற பணிவு. ஆணவமற்ற துணிவு. இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் எங்கள் அன்புக்குரிய “ஜக்கரிய்யா பாய்” என்ற அல்ஹாஜ் - முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள்.

பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் சிக்கல் நாயக்கன் பேட்டை என்ற கிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஏழைத்தாய் ஆச்சிக் கண்ணுவின் மகனாகப் பிறந்தவர் கண்ணையன்.

மாடு மேய்ப்பவராக, சாணி அள்ளுபவராக வாழ்க்கையைத் தொடங்கி பண்ணை வேலை செய்து பிறகு தினக் கூலியாக ஆகி பின்னர் தி.மு.க.வின் மேடைப் பாடகர், பேச்சாளர் என்று வளர்ந்து, போராட்டம் சிறை தண்டனை என்று பொது வாழ்வில் முத்திரை பதித்து தலித்களின் விடுதலைக்காகப் பாடுபட்டார் என்பதற்காக கூலிப்படையால் கொலை வெறியுடன் துரத்தி வளைக்கப்பட்டு தப்பித்து, உடைமைகளை இழந்து, வெறுங்கையுடன் போராடி இறுதியில் சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு என்று உணர்ந்து இறைமார்க்கம் இஸ்லாத்தை இனிதுறத் தழுவிய ஓர் இனியவரின் வரலாறு இது.

கொண்ட கொள்கைக்காக வாழ்வது ஒரு சுகம். அதில் எதிர் வரும் இன்னல்களை இன் முகத்தோடு ஏற்பது ஆனந்தம். அதில் இழப்புக்களை சந்திக்க நேர்வது பேரானந்தம். தன் வாழ்வு நெடுகிலும் இவற்றை அனுபவித்தார் ஜக்கரிய்யா பாய்.

இன்றிலிருந்து சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய இவர் ஆசையூட்டல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ அடிபணியாமல் அல்லாஹ்வின் பாதையில் பயணித்தும் பணி செய்தும் வருகிறார்.

இஸ்லாத்தை ஏற்றதால் தாம் பெற்ற சமத்துவத்தையும் உயர்வையும் எடுத்துரைக்கும் போதெல்லாம் கரைந்து கண்ணீர் சிந்தும் இவர் இரும்பையொத்த இதயத்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார் களப்பணிகளில்.

சாரதாம்பாள் - நூர்ஜஹான், ராஜேந்திரன் - அப்துல் மாலிக், திரவியராஜ் - அப்துல் சலீம், ராஜெந்திரன் - முஹம்மது சுல்தான், கலியபெருமாள் - கலீலுர் ரஹ்மான், கோதண்டபாணி - அப்துல்லாஹ் என்றெல்லாம் இந்நூலில் இடம் பெறும் நபர்கள் ஒவ்வொருவரும் தீண்டாமையின் தீய கரங்களால் காயம் பட்டவர்கள். இந்தக் காயத்துக்கு அருமருந்து இஸ்லாம் ஒன்றே என்று புரிந்தவர்கள். இறைவனை விரும்பியவர்கள். இறைவனால் விரும்பப் பட்டவர்கள் என்பதை ஜக்கரிய்யா பாய் இந்நூலில் சொல்லாமல் சொல்கிறார்.

“தீண்டாமை ஒழிந்திட நாம் செய்ய வேண்டியது ஒருங்கிணைந்த புரட்சியா? ஒட்டு மொத்த மதமாற்றமா?” என்ற கேள்விக்கு விடை தேடிய நூலாசிரியர் 29.06.1986 இல் பந்த நல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் பட்டிமன்றம் நடத்தி அதில் கூறப்பட்ட தீர்ப்பையே தீண்டாமைக்கான தீர்வாக ஏற்கிறார். “ஒட்டு மொத்த மதமாற்றமே” என்ற நடுவரின் தீர்ப்பை ஏற்று மதம் மாற முற்பட்டவர் ஏன் மிகப்பெரும் மக்கள் கூட்ட்த்தை உலகளாவிய அளவில் கொண்ட கிறிஸ்தவத்துக்குப் போகவில்லை? அம்பேத்கர் ஏற்ற புத்த மதத்தை ஏன் இவர் ஏற்கவில்லை? என்பனவற்றுக்கான விடையையும் கூறுகிறார்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஆற்றிய முதல் உரையிலேயே முத்திரை பதிக்கிறார். தன் போராட்ட வாழ்வுக்கும் சமுதாயப் பணிக்கும் தலைவராக வரித்துக் கொண்ட டி.எம். மணி அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே இப்படிப் பேசுகிறார்.

“இதுவரை டி.எம். அவர்களை தலைவராக ஏற்று செயல்பட்டு வந்தேன். இன்றிலிருந்து டி.எம். அவர்களை அண்ணனாகவும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தலைவராகவும் ஏற்றுக் கொண்டு செயல்படுவேன்” (பக்கம்: 46) என்று பேசி அரங்கத்தையே தக்பீர் முழக்கத்தால் அதிர வைக்கிறார்.
இந்த வரிகளை வாசிக்கும் எவரும் ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்ற மகிழ்வுடன் ஒப்பிட்டு சிந்திக்க தவற மாட்டார்.

தனக்கு வழிகாட்டிய டி.எம். மணி அவர்களும் இஸ்லாத்தை தழுவிட வேண்டும் என்ற பேரவாவை இதயத்துனுள்ளேயே வைத்திருக்க அந்த பேரவா நிறைவேறிய நாளையும் அழகு படச் சொல்கிறார்.
நூலின் முற்பகுதி, தீண்டாமை போராட்டம், கொலை மிரட்டல், வன்முறை, ஆயுதம், விடுதலை, சூழ்ச்சி என்று பயணிக்கிறது. பிற்பகுதி சமத்துவம், உபசரிப்பு, மரியாதை, உயர்வு என்று போகிறது.

நூலாசிரியர் அல்ஹாஜ் ஜக்கரிய்யா அவர்கள் ஓர் எழுத்தாளர் அல்ல. அழகு தமிழில் பேசும் அடுக்கு மொழிப் பேச்சாளருமல்ல. எளிய தமிழில் எதார்த்தமாக பேசுபவர். ஆடம்பரமற்ற சொற்களால் உரையாடுபவர். நூலின் நடையும் இப்படித்தான் இருக்கிறது. இதுதான் இந்த நூலின் சிறப்பு.

நூலை வாசிக்கும் போது தோன்றும் உணர்வுகள்:

01. தலிதகள் உணவிலும், உடையிலும் வேலையிலும் அரசுப் பணியிடங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் தனித்துக் காண்பிக்கப்படுகின்றனர். சாதி இந்துக்களால். (பக்கம்:8,10,12)
02. தலித் விடுதலைக்காக உழைப்பவர்களை ஒழித்துக் கட்ட தலித்களையே பயன்படுத்துவர் பிற சாதியினர்.( பக்கம்: 22)
03. பொதுக்கட்சிகள் தலித்களைப் பயன்படுத்தி வளர்கின்றன. பதவிகளை பிற சாதியினருக்கே வழங்குகின்றன. (பக்கம்:33)
04. தலித்கள் இஸ்லாத்தைத் தவிற வேறு மதங்களுள் ஒன்றைத் தழுவினால் அவர்கள் இயல்பாக வாழ்ந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இஸ்லாத்தை ஏற்றால் அரசு இயந்திரங்களை இவர்களுக்கு எதிராக திருப்பி விட பத்திரிக்கைகளே வேலை செய்யும். (பக்கம்: 56)
05. இஸ்லாத்தை தழுவிடுவோரிடம் பரம்பரை முஸ்லிம்கள் சம்பந்த உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள பழைய சாதி முறைகளை ஒரு தடையாகக் கருதுவதில்லை. (பக்கம்: 52)
06. இஸ்லாத்தை தழுவிடுவோர் இஸ்லாமியப் பிரச்சாரகர்களாக மாறினால் அவர்களை இந்துத்துவ ஃபாசிஸக் கும்பல் கொலை செய்யும் ஆபத்து உண்டு. (பக்கம்: 55)
07. ஹஜ் எனும் புனிதப் பயணம் இஸ்லாத்தைத் தழுவியோரிடம் ஒரு புதிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் உருவாக்குகிறது. இஸ்லாத்தின் மீதான புரிதலையும் பார்வையையும் விசாலப்படுத்துகிறது. (பக்கம்: 62 - 78)
08. ஒரு தலித் எவ்வளவுதான் நற்பண்புகளுடன் வாழ்ந்தாலும் நன்னட்த்தையைக் காட்டினாலும் அவர் ஒரு தலித் என்பதே போதுமானதாகி விடுகிறது அவரை அற்பமானவராகக் கருதிட.(பக்கம்: 12)
இப்படியான சமூக அவலங்களை விவரிக்கிறது இந்நூல்.
தஃவா பணியில் முப்பதாண்டுகளாக நம்மோடு இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜக்கரிய்யா ஹாஜியார் அவர்கள், தன் பிரச்சார அனுபவங்களையும் நூலாக தர வேண்டும். அது அழைப்பாளர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் வரலாற்று ஆவணமாகவும் இருக்கும். இந்நூல் போலவே.

சிறப்பான இந்நூல் ஒரு போராளியில் வரலாறு மட்டுமல்ல. ஒரு போராட்டத்தின் வரலாறும் கூட. அதனால் அனைவரும் அவசியம் படித்திட வேண்டிய நூல்.

2 comments:

  1. இந்த நூல் எங்கே கிகை்கும்

    ReplyDelete
  2. Here comes the solution for the cast problem from the Fast Sermon of Prophet Muhammad (sallallaahu alaihi wasallam = Allah sent His Peace and Blessings upon him)

    "...All mankind is from Adam and Eve. 

    An Arab has no superiority over a non-Arab, nor does a non-Arab have any superiority over an Arab; a white has no superiority over a black, nor does a black have any superiority over a white; [none have superiority over another] except by piety and good action. 

    Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood. 

    Nothing shall be legitimate to a Muslim which belongs to a fellow Muslim unless it was given freely and willingly.  Do not, therefore, do injustice to yourselves.

     ...All those who listen to me shall pass on my words to others and those to others again; and it may be that the last ones understand my words better than those who listen to me directly.  Be my witness, O God, that I have conveyed your message to your people."

    Thus the beloved Prophet completed his Final Sermon, and upon it, near the summit of Arafat, the revelation came down:

    "…This day have I perfected your religion for you, completed My Grace upon you, and have chosen Islam for you as your religion…" (Quran 5:3)

    ReplyDelete

Powered by Blogger.