Header Ads



கல்முனை நகரில் 90 வீதம் தமிழர்களே வாழ்கிறார்கள் என்ற, கோடீஸ்வரனுடன் வாக்குவாதப்பட்ட ஹரீஸ்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்குப் பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், அதனைத் தடுக்க ஹரீஸ் எம்.பி முயற்சி செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறுக்கீடு செய்ததால் இருவருக்கும் இடையில் கடுமையான வாதம் ஏற்பட்டது. இதனைப் பிரதி சபாநாயகர் தலையீடு செய்து தடுத்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கோடீஸ்வரன் எம்.பி, கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதாக பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார்.ஆனால், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என ஹரிஸ் எம்.பி கூறியுள்ளார். இதனால், தமிழ் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் நிர்வாக ரீதியான அலகை பெற விரும்புகிறார்கள். 29 தமிழ் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இந்தப் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது.1999 ஆம் ஆண்டு முதல் இந்த பிரசே செயலகம் செயற்படுகிறது. உப பிரதேச செயலகமாக இருக்கும் இதற்கு தேவையான ஆளணி வழங்கப்பட்டுள்ளதோடு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது.

தனியாக உள்ளக இடமாற்ற அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை தரமுயர்த்துவதற்கு இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இதன் ​போது குறுக்கீடு செய்த பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு சகல அதிகாரங்களும் காணப்படுவதை அவர் ஏற்கிறார். நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்காக அன்றிக் காணி தொடர்பான பிரச்சினையே இங்கிருக்கிறது.இங்கு இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய கோடீஸ்வரன் எம்.பி,

தமது வங்குரோத்து அரசியலுக்காகவே இவர் கல்முனை வடக்கு பிரசேத செயலகத்திற்குத் தடையாக இருக்கிறார். இதற்கு யார் இவருக்கு அதிகாரம் வழங்கினார்கள்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தைப் பிரிக்கக் கூடாது என அரசியல் நெருக்கடி சமயத்தில் இவர் பிரதமரிடம் ​கோரியிருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும். கல்முனை நகரில் 90 வீதம் தமிழ் மக்களே வாழ்கிறார்கள். ஆனால், இவர் வங்குரோத்து அரசியல் செய்கிறார்.தேசிய நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவதை கண்டிக்கிறேன் என்றார்.

வடக்கு கிழக்கில் வாழும் நலிவுற்ற மக்களுக்கு சில வரப்பிரசாதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2500 மில்லியனும் அடுத்த வருடம் 2500 மில்லியனும் ஒதுக்கப்படுகிறது.

இது போதுமானதல்ல. பனை நிதியத்திற்கு இந்த வருடம் 5000 மில்லியன் ரூபா ஒதுக்க வேண்டும்.எதிர்காலத்தை மையமாக வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.எமது உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.