Header Ads



71 பேரை வைத்துக்கொண்டு, என்ன செய்யப்போகின்றீர்கள் - ரணில் கேள்வி

அரசாங்கத்தை தோற்கடிக்க வந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை. 71 பேரை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியைகூட வகிக்க முடியாத நிலையே இருக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தமை தொடர்பாகவும் கேட்கின்றார்கள். கடந்த முறை நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கும் கூட்டமைப்பினர் வாக்களித்திருந்தனர். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. மக்கள் விடுதலை முன்னணியின் வாக்குகள் இன்றி பார்த்தால் 71 வாக்குகளே இவர்களிடம் இருக்கின்றன. மூன்றில் ஒன்றுகூட கிடையாது. இப்போது கூச்சலிட்டு பயனில்லை. கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்ததில் அரைவாசிகூட நேற்று (நேற்று முன்தினம்) சபையில் இருக்கவில்லை. 

மக்கள் வழங்கிய ஆணைக்கமையவே செயற்பட வேண்டும். மேலும் இன்று உயர் நீதிமன்றம்  சுயாதீனமானது என்பதனை காட்டி இருக்கின்றது கடந்த 10 வருடத்தில் நீதிமன்றம் சுயாதீனம் இல்லாமல் இருந்தது. 

பாராளுமன்றத்தில் 225 பேர் இருக்கின்றனர். ஆனால் 71 பேர் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 71 பேரை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை மாத்திரமல்ல இவர்களுக்கு எதிர்க்கட்சி பதவியையும் பெற்றுக்கொள்ள முடியாது. 

அரசியலமைப்பு பேரவை , சுயாதீன ஆணைக்குழுக்கள் இருப்பதனாலேயே எமக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க  முடியுமாக இருக்கின்றது. இப்போது மக்களின் விருப்பம் எங்கே இருக்கின்றது என கேட்கின்றனர். மக்கள் எங்களுடனேயே இருக்கின்றனர். பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். அதன் பெறுபேறுகள் தற்போது கிடைத்துவருகின்றன என்றார்.

No comments

Powered by Blogger.