Header Ads



மைத்திரி ஒரு பாம்பு, 5 சதத்திற்கும் நம்பக்கூடிய மனிதரல்ல - ஹிருணிக்கா

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை பாம்பு (மைத்திரி) பாம்புதான் என்று புரிந்துக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் அந்த பாம்பை ஒக்டோபர் 26 ஆம் திகதி அறிந்துக்கொண்டோம். எதிர்க்கட்சியினர் அது பாம்பு என்று முன்கூட்டியே அறிந்தும் நேற்றும் நம்பி ஏமாற்றமடைந்தனர். அதுதான் கவலைக்குரிய விடயம். எதிர்க்கட்சியினர் ஒன்றில் எதிர்த்து வாக்களியுங்கள் இல்லாவிட்டால் எழுந்து சென்று விடுங்கள்.

காரணம்  மைத்திரிபால சிறிசேன 5 சதத்திற்கும் நம்பக் கூடிய மனிதர் அல்ல. இந்த நபரை ஜனாதிபதியாகவோ, நபர் என்ற வகையிலோ நம்ப முடியாது. எதிர்க்கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில் முன்னரே எவரையாவது நிறுத்த தீர்மானித்திருந்தால், அந்த தீர்மானத்திலேயே இருங்கள். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக மீண்டும் பதவிக்கு கொண்டு வந்து நாங்கள் விழுந்த குழியில் நீங்கள் விழுந்து விடாதீர்கள்.

மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட விடயங்களை தவிர பொதுவான விடயங்களுக்கு என்றும் குரல் கொடுத்ததில்லை. தனது வேலைகளை செய்துகொள்ள மற்றவர்களை பயன்படுத்திக்கொள்வார். எதிர்காலத்திலும் அவர் அதனையே செய்வார்.

எதிர்க்கட்சிக்கு 71 உறுப்பினர்களின் ஆதரவே இருக்கின்றது என்பதை நீங்கள் நேற்று அறிந்துக்கொண்டிருப்பீர்கள். 71 பேரை வைத்துக்கொண்டே ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து கயிற்றை கொடுத்தார். மொட்டுகட்சியின் தலைவர் என்ற முறையில் மகிந்த ராஜபக்சவுக்கு சிறந்த எதிர்காலம் இருந்தது. அவரை பிரதமராக நியமித்து, சேற்றில் தள்ளி, எதிர்காலத்தை அழித்தார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசி ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 கோடி 500 கோடி என விலை பேசப்பட்டதாக கூறினார். அந்த நிலைமை ஏற்படுத்தியது யார். மைத்திரிபால சிறிசேன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்தால் அரசாங்கத்தை அமைக்க முடியாது போனதாக கூறினார். அந்த பந்தையும் மகிந்த ராஜபக்ச பக்கமே வீசினார்.

ஜனாதிபதி பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில் தன்னை நெல்சன் மண்டேலா எனக் கூறிக்கொண்டார். நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளில் இப்படி செய்ததை பார்த்தோமா?. திடீரென இரவில் நித்திரையில் எழுந்து எனக்கு ரணில் வேண்டாம். மகிந்த சிறந்தவர் யார் என்ன சொன்னாலும் அவரை பிரதமராக நியமிப்பேன் என கூறுவார்.

நெல்சன் மண்டேலா என்பவர் ஜனநாயகத்தின் தந்தை. இவர் பல்லேவத்த கமராளாகே மைத்திரிபால சிறிசேன மட்டுமே. இவரால் நெல்சன் மண்டேலாவாக மாற முடியாது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயற்படும் இவருக்கு நெல்சன் மண்டேலாவை நெருங்கக் கூட முடியாது.

கடந்த காலங்களில் நோபல் பரிசு கிடைக்கப் போகிறது என்று பிரசாரம் முன்னெடுத்தனர். நோபல் பரிசு அல்ல. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட டிக்கட் கிடைக்குமோ தெரியாது எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.