Header Ads



500 கோடி ரூபா பெறுமதியான, வைரத்தின் கதை - உரிமையாளர் கூறுவது என்ன...?

அந்த வைரம் ஐந்நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி உடையது. இத்தனை பெரிய தொகையால் எனக்கு எந்தப் பிரயோசனமுமில்லை. எனது பிள்ளைகள் இருவருக்கும் எந்த நன்மையும் இல்லை. அவர்களின் எதிர்கால வாழ்விற்குத் தேவையான அளவு வைப்பு செய்த பின்னர் மிகுதிப் பணத்தை எமது நாட்டில் புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக நோய் என்பவற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிறு பிள்ளைகள், முதியோர்கள் தங்கியுள்ள  இல்லங்களுக்கும் வழங்க எண்ணியிருந்தேன். அந்தப் பணத்தை இந்த நாட்டிலேயே முதலீடு செய்யவே நினைத்திருந்தேன்" என அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பல கோடி ரூபா பெறுமதியான வைரத்துக்குச் சொந்தக்காரரான பன்னிப்பிட்டிய எரவ்வலவில் வசிக்கும் வியாபாரியான கிறிஷான் டேவிட் என்பவர் கூறினார். 

"இந்தப் பணம் இந்த நாட்டிலேயே முதலீடு செய்யப்பட வேண்டும். அது அந்நிய நாட்டுக்குச் செல்ல வழிவகுக்கக் கூடாது" என்று உறுதியுடன் கூறுகிறார் அவர். 

"இந்த வைரத்தை நான் 1994ம் ஆண்டு இந்நாட்டுக்குக் கொண்டு வந்தேன். அது போன்ற பல கற்களையும் இதனுடன் நான் கொண்டு வந்தேன். அதற்குக் காரணம் பலவிதமான கற்களைச் சேகரிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதேபோல் இரத்தினக்கற்கள் பற்றியும் பல விடயங்களை அறிந்து வைத்திருந்தேன். அதனால் எங்கேயாவது வித்தியாசமான கற்களைக் கண்டால் அவற்றை நான் எடுத்து வந்து சேமிப்பேன். இவ்வாறு நான் சேகரித்த பலவிதமான கற்கள் என்னிடமுள்ளன. இந்த வைரக்கல் 25 வருட சரித்திரத்தை உடையது. நான் அந்த நாட்களில் சவூதியில் பணிபுரிந்தேன். சவூதியின் மூன்றாவது பணக்காரரின் வீட்டிலேயே நான் பணிபுரிந்தேன். நான் சவூதிக்கு 'கேட்டரிங்' சேவைக்காகவே சென்றேன். ஏனென்றால் நான் ஹோட்டல் முகாமைத்துவம் பற்றி பயிற்சி பெற்றிருந்தேன்.  

பின்னர் இந்த ஹோட்டலில் அச்சேவை மூடப்பட்டதால் அந்த கோடீஸ்வரரின் வீட்டில் பலவிதமான வேலைகளிலும் ஈடுபட்டேன். சவூதியிலுள்ள கோடீஸ்வரர்களின் வீட்டில் தோட்ட அலங்காரங்களுக்குத் தேவையான வளங்கள் அந்நாட்டில் இல்லை. அவற்றை வெளிநாடுகளிலிருந்தே கொண்டு வருவார்கள். அந்த வகையில் இந்தக் கோடீஸ்வரரின் வீட்டின் தோட்ட அலங்காரத்துக்காக மணல் ஹொங்கொங் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த மண் வகைகளைப் பாவித்து நான் தோட்டத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டேன்.

அதேநேரம் வீட்டில் ஒரு நாள் விழாவொன்று நடந்தது. அந்த விழாவின் போது நான் வீட்டுக்கு வெளியே வந்த போது மண் குவிக்கப்பட்டிருந்த பற்றைக்கருகில் மின்னியபடி பொருளொன்று கிடப்பதைக் கண்டேன். மறுநாள் காலையில் சென்று பார்த்த போது, இந்தக் கல்லைக் கண்டேன். நான் இலங்கைக்குப் போகும் போது கொண்டு செல்வதற்காக சேகரித்த கற்களுடன் அதையும் வைத்திருந்தேன். நான் 1994ம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினேன். எனது பொருட்களை 'கார்கோ' மூலம் இங்கு கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தேன்.

பின்னர் எனது பொருட்களை சுங்கத்திலிருந்து எடுக்கச் சென்ற போது அவர்கள் எல்லாக் கற்களையும் பரிசோதித்த பின்னர் அவற்றை வெளியே கொண்டுவர அனுமதித்தார்கள்.

பின்னர் அந்தக் கற்கள் அனைத்தையும் எனது வீட்டில் உள்ள கற்குவியலில் சேகரித்து வைத்தேன். 

இதேவேளை நான் சிறியளவில் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தேன்.

எமது நண்பர்களுக்கு இடையேயும் இன்னொருவரின் கல்லைப் பெற்று இலாபத்திற்கு விற்பதுண்டு. இருபத்தைந்து வருடங்கள் எனது வீட்டில் இந்தக் கல் இருந்தது.

எனது நண்பரான பேராசிரியர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது என்னிடம் இருந்த கற்களை ஆய்வு செயதார். மூன்று மணி நேரம் ஆய்வுக்குப் பின்னர் அது பல கோடி ரூபா பெறுமதியான வைரக்கல் என்று அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் இன்னும் சிலரும் அதனை உறுதி செய்தார்கள்.   அதன் பின்னரே இந்தக் கல்லை நான் விற்க முடிவு செய்தேன். விற்பதற்கு முன்னர் இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தில் அதனை பரிசோதனை செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர்கள் அதனை 'பெறுமதியற்ற கல்' எனக் குறிப்பிட்டார்கள். நான் பின்னர் தனியார் நிறுவனமொன்றுக்குச் சென்று பரிசோதித்தேன். அவர்கள் பெறுமதியானது என உறுதி செய்தார்கள். 

நான் அந்த வைரத்தை இலங்கையில் விற்பதற்கே விரும்பினேன். அதற்காக பல தரகர்களும் முன்வந்தார்கள். பல விலைகளுக்கு அவர்கள் கேட்டார்கள். இதேவேளை கடந்த வருடம் நவம்பர் ஐந்தாம் திகதி மாக்கந்துரே மதுஷின் அடியாட்கள் மூன்று குழுவினராக மிகவும் திட்டமிட்டு அதனைக் கொள்ளையடித்தனர்.

அவர்கள் கொள்ளையிட்டுச் செல்வதற்கு முன்னர் வெளிநாட்டு நபரொருவரும் அவ்வைரத்தை விலைக்கு வாங்க வருவதாகக் கூறினார். அவர் தனது பரீட்சிக்கும் இயந்திரம் பழுதடைந்ததால் குறிப்பிட்ட திகதியில் வரவில்லை.

இப்படியிருக்க, ஐந்தாம் திகதி வந்தவர்களிடம் வைரக்கல்லைக் கொடுத்த போது அதனை பரிசோதிக்க இரத்தினக் கல்லொன்றைக் கேட்டனர். கட்டிலில் அந்தக் கற்களைக் கொட்டிய போது அவர்கள் என்னைத் தாக்கி விட்டு எல்லாக் கற்களையும் எடுத்துச் சென்று விட்டார்கள்". இவ்வாறு விபரித்தார் டேவிட்.

அத்தாக்குதலில் காயமடைந்த டேவிட்டின் தலையில் எட்டுத் தையல்கள் போடப்பட்டுள்ளன. அதேவேளை வைரக்கல் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி அதனை தேட வேண்டாமெனவும் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.  

எவ்வாறாயினும் வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதாக உறுதியாக பத்திரிகைகள் கூட தெரிவித்திருந்த நிலையில் இந்த வைரத்தை பொலிஸார் தம் திறமையால் இந்நாட்டிலேயே கண்டுபிடித்துள்ளார்கள். களனி குற்ற விசாரணை பிரிவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் கண்காணிப்பின் கீழ் அந்தப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லின்டன் த சில்வா உள்ளிட்ட குழுவினரால் மிகவும் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அது கண்டுபிடிக்கப்பட்டது அதன் மூலம் மீண்டும் வைரத்தை தன் கண்ணால் அதன் உரமையாளர் கிருஷான் டேவிட்டால் காணக் கூடியதாகவுள்ளது. அவர் அரசுக்கும் பொலிஸாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.  

1 comment:

  1. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். All of these stories are nothing but fabrication and far from truth.

    ReplyDelete

Powered by Blogger.