Header Ads



நல்லாட்சியின் முதல் 4 வருடங்களில் 1,142 முறைகேடுகள்

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சாட்சிப் பதிவுகளுக்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, சட்டமா அதிபரால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விசாரணைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேரை நியமிக்குமாறும் பொலிஸ்மா அதிபரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு போதுமான அதிகாரிகள் இன்மையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளரினால் இழைக்கப்பட்ட முறைகேடு தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் இந்த காலப்பகுதியில் 1,142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 48 முறைபாடுகள் பொலிஸ் விசேட பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாக பயன்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. What about the SLC (Sri lanka Cricket)?????
    not at all bcs of the Peramuna regime there????

    ReplyDelete

Powered by Blogger.