Header Ads



ஷமிமாவின் 3 வது குழந்தையும் உயிரிழப்பு - பிரிட்டன் அமைச்சர் சஜித் ஜாவித் மீது விமர்சனங்கள்

பிரிட்டனில் இருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம்.

அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித்.

ஷமிமாவின் குடும்ப நண்பர் ஒருவர், "பிரிட்டன் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற தவறிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தொழிற்கட்சி, "இது ஒரு மனிதாபிமானமற்ற செயல்" என்று தெரிவித்துள்ளது.

பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர், எந்த ஒரு குழந்தையின் இறப்பும் துயரம் நிறைந்த ஒன்றே என்று தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஷமிமா பேகம், கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்று ஐஎஸ் இயக்கத்தில் இணைந்தார். தற்சமயம் சிரியாவிலுள்ள அகதிகள் முகாமொன்றில் வசித்து வரும் அவருக்கு சில வாரங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்நிலையில், பிபிசியுடனான நேர்காணலின்போது பேசிய ஷமிமா, தான் சிரியாவுக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை என்றும், ஐஎஸ் இயக்கத்தினர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் 22 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை நடத்தியது ஐஎஸ் இயக்கத்தினர் என்பதை அறிந்து தான் "அதிர்ச்சிக்குள்ளானதாக" ஷமிமா பேகம் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஷமிமாவின் கருத்துக்கள் பிரிட்டன் குடிமக்களை பிரதிபலிக்கும் கருத்துகள் அல்ல என்று ஷமிமாவின் தங்கை தெரிவித்திருந்தார்.

டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''இது குறித்து நான் தெளிவாகவும், உறுதியாகவும் கூறுகிறேன். வெளிநாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்த ஒருவர் நாடு திரும்ப நினைத்தால் அவரது முயற்சி தடுத்து நிறுத்தப்படும்'' என்று பிரிட்டனின் உள்நாட்டுதுறை செயலரான சஜித் ஜாவிட் தெரிவித்திருந்தார்.

இரண்டு குழந்தைகளின் இறப்பு

போதிய மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் தமது முதல் இரு குழந்தைகளும் இறந்ததால், தனது மூன்றாவது குழந்தை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருந்தார் ஷமீமா.

"போர்க்களத்தில் தங்கி இருக்கும் கொடுமைகளை நான் மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை. பிரிட்டன் திரும்பினால் என் குழந்தைக்கு குறைந்தபட்சம் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என நம்புகிறேன். என் குழந்தையுடன் அமைதியான ஒரு வாழ்க்கை வாழ எதையும் செய்யத் தயாராக உள்ளேன், " என்று டைம்ஸ் இதழிடம் ஷமிமா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் ஷமிமாவின் மூன்றாவது குழந்தையும் உயிரிழந்துள்ளது.

No comments

Powered by Blogger.