Header Ads



`39 வயதில் 39 சிக்ஸர்கள்!’ - உலகச் சாதனை குறித்து நெகிழும் கிறிஸ் கெய்ல்


இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 39 சிக்ஸர்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், இருநாடுகள் இடையிலான ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலகச் சாதனை படைத்தார். 

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி க்ராஸ் ஐஸ்லெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 28.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்கவீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒசேன் தாமஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

114 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவர் 27 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி, 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டேரன் பிராவோ 7 ரன்களுடனும் ஹெட்மெயர் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 227 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரை 2-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்தது. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தாமஸ் ஆட்டநாயகனாகவும் தொடரில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

உலகக் கோப்பை தொடருடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், இந்தத் தொடரில் 39 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இரு நாடுகள் இடையிலான ஒருநாள் தொடரில் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவே. இந்த சாதனை குறித்து பேசிய கிறிஸ் கெய்ல், `வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இதுவே எனது கடைசி ஒருநாள் தொடர். அதனால், ரசிகர்களுக்கு விருந்து படைக்க நினைத்தேன். தொடர் முழுவதும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஜமைக்கா ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது சிறப்பான அனுபவத்தை அளிக்கக் கூடியது. ரசிகர்கள் எப்பொழுதும் நமக்கு ஊக்கமளித்துக்  கொண்டே இருப்பார்கள். 

வெஸ்ட் இண்டீஸ் ஜெர்ஸியை அணிந்துகொண்டு சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மிகச்சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. நான் சமீபத்தில் பங்கேற்ற டி20 தொடர்களில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஆனால், இந்தத் தொடரில் ஃபார்முக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த மண்ணில் இதுதான் எனது சிறப்பான ஆட்டம் என நினைக்கிறேன். 
நான் சிறப்பாக விளையாடுவது குறித்தோ, சிக்ஸர்கள் விளாசுவது குறித்தோ ஆச்சர்யப்படவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது இயல்பாகவே வருவது. டி20 தொடர்களில் நான் நிறைய சிக்ஸர்கள் விளாசியிருக்கிறேன். ஆனால், ஒருநாள் தொடரில் இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். 39 வயதில் 39 சிக்ஸர்கள் அடித்ததை பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றார். 

No comments

Powered by Blogger.