Header Ads



மதுசின் தற்போதைய நிலை என்ன...? சிக்கித்தவிக்கும் ரத்தினக்கல் - ரிப்போர்ட் 30

மாக்கந்துர மதுஷின் சகாக்கள் கொள்ளையிட்ட இரத்தினக்கல்லின் உரிமையாளர் இப்பொது பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்..
என் தெரியுமா...?
இந்த இரத்தினக்கல்லை சவூதியில் தொழில்புரிந்தபோது அங்கு குப்பைமேட்டில் இருந்து கண்டெடுத்ததாக இவர் சொன்னாரல்லவா..
சரி.. இதனை எப்படி நாட்டுக்குள் கொண்டுவந்தீர்கள் என்று கேட்டு துருவி விசாரித்தபோதே பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
இதன்படி தென்னாப்பிரிக்கர் ஒருவருக்கு சொந்தமானது தான் இந்த இரத்தினக்கல்..
தென்னாபிரிக்காவில் உள்ள இரத்தினக்கல் அகழ்வு இடத்தில் இந்த கல்லை கண்டெடுத்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவர் இதன் சரியான மதிப்பை தெரிந்துகொள்ள சில வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவந்திருக்கிறார்..
முறையான அனுமதி இல்லாமல் கொண்டுவந்த காரணத்தினால் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார் இந்த தென்னாபிரிக்க வாசி.
சுங்க அதிகாரிகளிடம் பேசி எதுவும் சாதிக்க முடியாததால் ஒரு முடிவுக்கு வந்த தென்னாபிரிக்கர் ஒரு யோசனையை முன்வைத்தார். சுங்க அதிகாரி ஒருவரிடம் சென்ற அவர் , இந்தக் கல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் - தாம் தென்னாபிரிக்கா திரும்பி கொஞ்சம் பணத்துடன் வந்து இதனை மீட்பதாகவும் கூறியுள்ளார்.
அதனை ஏற்ற சுங்க அதிகாரி இரத்தினக்கல்லை அரசுடைமையாக்காமல் தன்னகத்தே வைத்துள்ளார். அத்துடன் தென்னாப்பிரிக்கரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த இடைவெளிக்குள் பன்னிப்பிட்டிய வர்த்தகரை தனது நண்பர் ஒருவர் மூலம் தொடர்புகொண்ட சுங்க அதிகாரி அதனை குறைந்த விலையில் விற்றுள்ளார்.
அதன்பின்னர் தான் கதையே ஆரம்பித்திருக்கிறது...
சுங்க அதிகாரியின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டு சென்றார் அல்லவா தென்னாபிரிக்க பிரஜை..
தனது கல்லை மீட்க பணத்தை செய்து சுங்க அதிகாரியை தொலைபேசியில் அழைத்திருக்கிறார் அவர். ஆனால் கல்லை அதற்குள் விற்றுவிட்ட கதையைக் கூறி அது ஒன்றும் பெரிய பெறுமதியில்லாத கல் என்று சாடியிருக்கிறார் சுங்க அதிகாரி.
இதனையடுத்து தனது நெருக்கமான நண்பர்கள் ஊடாக மாக்கந்துர மதுஷை தொடர்பு கொண்ட தென்னாப்பிரிக்கர் - இந்தக் கல்லை எப்படியாவது மீட்டு - அதனை விற்று ஒரு பகுதியை தருமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்தே மதுஷ் இந்த கொள்ளையை நடத்தியுள்ளார்.
கல்லை பறிகொடுத்த பன்னிப்பிட்டிய வர்த்தகரிடம் நடந்த நீண்ட விசாரணைகளையடுத்து இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த தென்னாப்பிரிக்கரை இப்போது பொலிஸார் தேடிவருகின்றனர்
இரத்தினக்கல் எங்கே ?
இப்போது அந்த இரத்தினக்கல் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.
இந்தக் கல்லை தேசிய இரத்தினக்கல் பாதுகாப்பு அதிகாரசபையின் பரிசோதனைக்காக கொண்டுசெல்ல பொலிஸார் முயன்றனர் என்றும் அப்படி சோதனை செய்ய கல்லின் பெறுமதியில் ஒரு வீதம் தமக்கு வேண்டுமென அதிகாரசபை தரப்பு சொல்லியதாகவும் தகவல்..
இதனால் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கல்லை கடந்த வாரம் சோதனையிட முயற்சிகள் செய்யப்பட்டபோதும் சோதனை செய்யும் இயந்திரத்தின் பற்றரி பழுதடைந்ததாக சொல்லப்படுகிறது.
பொலிஸாருக்கும் - அதிகாரசபையினருக்கும் இடையில் இதுவிடயத்தில் பரஸ்பர முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது.
கெவுமாவின் நிலை..!
இரத்தினக்கல் கொள்ளையில் முக்கிய பங்குவகித்த மதுஷின் வியாபாரத்தை கவனித்த கெவுமா இப்போது சிறையில் இருக்கிறார் அல்லவா..
தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவர் தன்னை வேறு ஒரு சிறைச்சாலைக்கு இடமாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்.
மதுஷின் எதிரிகள் பலர் சிறைக்குள் இருப்பதால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கெவுமா கூறியிருப்பதாக தகவல்.
இதேவேளை டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களின் நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை. இன்னமும் அங்கு விசாரணைகள் நடக்கின்றன.
மதுஷின் மனைவி மட்டும் மதுஷை பார்வையிட்டு வருகிறார். பிணையில் இவர்களை வெளியில் எடுக்க முயற்சிகள் செய்யப்பட்டாலும் அது இன்னும் சாத்தியப்படவில்லை.

-sivaraja

No comments

Powered by Blogger.