Header Ads



யார் இந்த கெலுமா..? விசேட யுக்திகளை கையாண்டது அம்பலம், மதுஷ் ரிப்போர்ட் 28

மதுஷின் நிதிப் பொறுப்பாளர் என்று சொல்லப்படும் - பன்னிப்பிட்டி இரத்தினக்கல் கொள்ளையினை வழிநடத்தி அந்த கல்லை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட கெலுமா என்பவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று 11-03-2019  ஹெரோயின் 150 கிலோ மீட்கப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கி மற்றும் ஒருதொகை துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யார் இந்த கெலுமா?

கெலுமா என்பவருக்கும் மதுஷுக்கும் இடையிலான தொடர்பு சிறைச்சாலையில் இருந்தே ஆரம்பிக்கிறது. ஆரம்ப காலத்தில் தொழில் இல்லாத காலத்தில் ஊரில் பஸ் வண்டி ஒன்றின் சாரதியாக தொழில்புரிந்தார் மதுஷ். அந்த பஸ்ஸின் நடத்துனராக சிலகாலம் பணி புரிந்தார் கெலும் இந்திக்க எனப்படும் கெலுமா. பின்னர் அவர்கள் சில காலத்தின் பின்னர் சந்தித்து கொண்டது சிறையில் தான்.

விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டில் மதுஷின் வலதுகையாக செயற்பட்ட திலக் எனப்படும் லொக்கு ஐயா இறந்த பின்னர், நிதி நடவடிக்கைகள் அனைத்தையும் கெலுமாவிடம் ஒப்படைத்தார் மதுஷ். அந்த வகையில் மதுஷின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டார் கெலுமா .

விசேட யுக்திகள் !

கெலுமா இந்த வியாபாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்பட்ட ஒருவரல்ல என்கிறது பொலிஸ் . பொறியியலாளர் என்கிற பெயரில் வீடு ஒன்றை வாடகைக்கு மொறட்டுவயில் எடுத்த அவர் அந்த வீட்டு உரிமையாளருக்கு எந்த சந்தேகமும் வராதபடியே நடந்துள்ளார்..

வாடகை வாகனங்கள் மூலம் சென்றால் வீட்டுக்கு முன் இறங்குவதில்லை.பல மீற்றர்கள் இருக்க இறங்குவது இவரின் வழக்கம்.மதுஷ் அனுப்பும் போதைப்பொருட்கள் சம்பந்தமான பணத்தை பெற மொறட்டுவையின் ஒரு பூங்காவுக்கு ஒவ்வொரு வாரமும் செல்லும் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நபர் ஒருவரிடம் இருந்தே பணத்தை பெற்று மதுஷின் கணக்கில் இடுவது வழக்கம்.

போதைப்பொருள் விற்பனைக்காக ஒருவருடன் பேசிய தொலைபேசி மற்றும் சிம் அட்டையை அந்த டீல் முடிந்த கையோடு வீசிவிடுவது கெலுமாவின் முதல் வேலையாக இருந்தது.அவர் சொந்தப் பெயரில் வாகனங்கள் வாங்கியதில்லை.சொத்துக்கள் வாங்கியதில்லை. ஏன் தொலைபேசி சிம் அட்டையை கூட அவர் தனது பெயரில் வைத்ததில்லை.

இப்படியான பல யுக்திகளை வைத்திருந்த கெலுமா சைட் விசிட் பண்ணுகிறேன் என்று கூறியே வெளியில் செல்வது வழக்கம்.சமையல் மற்றும் ஆடைகளை கழுவி செல்ல ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருந்த கெலுமா சுத்த சைவ உணவுகளையே சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார்.அதனால் தான் 37 லட்ச ரூபா செலவில் தாயத்து ஒன்றை அணிந்து பாதுகாப்புடன் இருக்க முயன்றுள்ளார்.

ஆனால் இந்த தாயத்து செய்து கொடுத்த மாந்திரீகரை பொலிஸார் விசாரித்தபோது இதில் ஆப்பிரிக்காவில் இருந்து எந்த சக்தியான பொருட்களும் சேர்க்கப்படவில்லை எனவும் இதற்கு சுமார் 2 லட்ச ரூபாவே செலவானதாக கூறியுள்ளார்...அதிகமான பணம் கெலுமாவிடம் புழங்குவதை அறிந்தே மாந்திரீகரும் அவரிடம் கறந்துள்ளார் ...

இன்று கெலுமாவின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான படங்களை இணைத்துள்ளேன்...




No comments

Powered by Blogger.