Header Ads



ஜனாதிபதித் தேர்தல் களம் - 2020

-நஜீப் பின் கபூர்-

2020ல் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பலர் தாமும் அதில் போட்டியிட இருப்பதாக முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள். இதில் முக்கிய அரசியல் செயல்பாட்டுக்காரர்கள் சிலரும் சில்லரைகள் பலரும் ஒரு சில ஜோக்கர்களும் அடங்குகின்றனர்.

தற்போது நமது நாட்டைப் பொறுத்தவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸா தரப்பு, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி, சிறுபான்மைக் கட்சிகள் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் என்ற குழுக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருக்கப்போகின்றன. ஆனாலும் இவற்றின் பலம் பலயீனங்கள் செல்வாக்குகள் செயல்பாடுகள் என்பன  பல்வேறு மட்டங்களில் இருந்து வருகின்றன.

பிரதமருடன் கடுமையான முரண்பாட்டில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி தற்போது ராஜபக்ஸாக்களுடன் நெருக்கமாக செயலாற்ற முற்படுவது பகிரங்க இரகசியம். என்றாலும் இருதரப்பினரும் ஒரு கூட்டுக்குள் வருவதற்கு அங்குள்ள சிலரால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துகள் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் வெற்றி பெறப்போகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் தங்களது ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிதான் என்று பிரகடனம் செய்து வருகின்றார்கள். அதே போன்று ராஜபக்ஸா தலைமையிலான அணியினர் தற்போது நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தி நாங்கள். எனவே யாருடன் கூட்டு அமைத்தாலும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகின்றார்கள்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் தமது தரப்பு வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபே ராஜபக்ஸாதான் என்று மஹிந்த அணி அறிவிப்புச் செய்திருந்தது. இதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான சம்மதத்தை வழங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் சொல்லி இருந்தன. எம்மைப் பொறுத்தவரை கோத்தாபே ராஜபக்ஸாதான் தமது தரப்பு வேட்பாளர் என்ற சமிக்ஞை ஒரு நாடிபிடிக்கின்ற வேலை.

உள்நாட்டில் கோத்தாவுக்கு என்னதான் பெரும்பான்மை சிங்கள மக்களின் அங்கிகாரம் இருந்தாலும் சர்வதேச அரங்கில் அவர் ஒரு சந்தேகப் பேர்வலி என்பதுதான் யதார்த்தம். போர்காலக் குற்றங்கள் ஊடக்காரர்கள் மீதான படுகொலைகள் இன்னும் பல குற்றச் செயல்கள் தொடர்பில் அவர் மீது இந்த சந்தேகப் பார்வை இருந்து வருகின்றது.

இப்படி ஒரு அறிவிப்பைச் செய்துபார்த்தால் அதற்கு சர்வதேச சமூகம் எப்படிப்பதிலளிக்கும் என்பதற்காகத்தான் இந்த அறிவிப்பை அவர்கள் முன்கூட்டிச் சொல்லிப் பார்க்கின்றார்கள். இந்த அறிவிப்புக்கு வித்தியாசமான ஒரு கருத்தை ஊடகச் சந்திப்பொன்றில் சொல்லி இருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸா. 

தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரைப் பொறுத்துத்தான் தமது வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கப்படும். நாம் இது விடயத்தில் அவசரப்பட மாட்டோம் அதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கின்றதே என்று கூறுகின்றார் அவர். 

தமது தரப்பு வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க தான் நாடு பூராவும் சென்று  மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வருவதாகவும் மஹிந்த  அங்கு குறிப்பிட்டார். இதன் மூலம் அவர் சொல்லவர நினைக்கின்ற செய்தி எண்ணவென்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

பெரும்பான்மை மக்களிடத்து இது பற்றிய கருத்துக் கோரப்படுகின்ற போது அவர்கள் எதிர்பார்ப்பு கோத்தாவாகத்தான் இருக்கும். அவர்கள் சர்வதேச சமூகத்தைப் பற்றியோ நாட்டின் அரசியல் எதிர் காலத்தைப்பற்றியோ சற்றும் சிந்திக்க மாட்டார்கள். கடும்போக்கு பௌத்த துறவிகளின் விருப்பும் இதுதான்.   எனவே  கோத்தாதான் மஹிந்த தரப்பு நிறுத்துகின்ற ஜனாதிபதி வேட்பாளர் என்பது தெளிவு. 

ஆனால் மஹிந்த தரப்பு சர்வதேசத்துடனும் உள்நாட்டில் சிறுபான்மை சமூகங்களுடனும் நல்லுறவைப் பேணி தமது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினால் அவர்களின் குடும்பத்திலிருந்து நிறுத்தக்கூடிய ஒரே வேட்பாளர் பசில் ராஜபக்ஸாவாகத்தான்  இருக்க வேண்டும் என்பது கட்டுரையாளன் கருத்து.இதற்கிடையில் கோத்தாபே ராஜபக்ஸா ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்கு தனது அமொரிக்க குடியுரிமை இரத்துச் செய்கின்ற முயற்சியில் தற்போது இறங்கி இருக்கின்றார்.

மஹிந்த தரப்பு வேட்பாளர் யார் என்ற விடயத்தில் அந்த அணியில் உள்ள பல குழுக்களிடையே முரன்பாடுகள் இருந்து வருகின்றன. மஹிந்த ராஜபக்ஸா உடனிருந்த ஊடகச் சந்திப்பொன்றில் வசுதேவ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கியப்படாமல் தமது அணியினருக்கு அரசியல் எதிர்காலம் ஒன்றில்லை. 

நாம் சுதந்திரக் கட்சியுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் அரோக்கியமானது என்று வாசு கூறி இருக்கின்றார். தம்மை மஹிந்த தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் என்று யார் அடையாளப்படுத்திக் கொண்டாலும் அந்த அணிசார்பில் யார் வேட்பாளர் என்பதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே தீர்மானிப்பார்.


இதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஒரு சந்திப்பில் மஹிந்த பேசும் போது சுதந்திரக் கட்சியுடன் நாம் நெருக்கமாக செயலாற்றுவது தமது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வு ஏற்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது என்று கூறி இருந்தார். எனவே சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச்சேர்வது என்ற விடயம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்ற கேள்வி எழுகின்றது.

அடுத்து தற்போது நாட்டில் இரண்டாவது பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனைப் பார்ப்போம். 

அந்தக் கட்சியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ விசுவாசிகள் சிலர் தமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான் என்று கூறுவதுடன் ரணிலின் மாமனார் ஜே.ஆர். ஜெயவர்தனா 71 வயதில்தான் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனவே அடுத்த வருடம் ரணிலுக்கு 71 வயதாகின்றது எனவே அவர் 2020 நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது அவர்கள் நம்பிக்கை.

ரணிலை விட இந்தத் தேர்தலில் தமது கட்சி சார்பில் மிகவும் பொறுத்தமான வேட்பாளர் சஜித் பிரேமதாசதான் எனவே அவரே தமது கட்சி சார்பில் களமிறக்க வேண்டும் என்று அதிகமான எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றது. ஆனாலும் அந்தக் கட்சியிலுள்ள சிலர் அவருக்கு ஆப்பு வைக்கின்றவகையிலும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

சஜித் என்னதான் செயல்பாட்டுக்காரராக இருந்தாலும் அவரது அரசியல் செயல்பாடுகளும் கருத்துக்களும் இன்னும் தேசிய சர்வதேச மட்டங்களை அடையவில்லை என்று கட்சியிலுள்ள சஜித் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர். ரணில், மஹிந்த தரப்பு வேட்பாளருக்கு முகம் கொடுக்க கனதி போதாது என்று எண்ணுக்கிறவர்கள் சபாநாயகர் கருவை நிறுத்துவதுதான் பொறுத்தம் என்று கருதுகின்றார்கள்.

மஹிந்த தரப்பில் கோத்தாதான் வேட்பாளர் என்று உறுதியானால் கடும் போக்கு சிங்கள வாக்குகளைப் பொறுவதற்கு தமது கட்சியிலிருந்து ஹெல உறுமைய தலைவர் சம்பிக்கவை நிறுத்துவதுதான் நல்லது என்று சிலர் கருதுகின்றார்கள்.

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக கட்சி அறிவிக்குமானால் இந்தத் தேர்தலின் எப்படி ஜெயிப்பது என்பது தனக்குத்தெரியும் என்று அமைச்சர் ராஜித குறிப்பிடுக்கின்றார்.

ஆனால் எமக்குத் வருகின்ற தகவல்களின்படி ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யார் என்ற விடயத்தில் ரணில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார். இது விடயத்தில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னாவில் காய்நகர்த்தல் முக்கியமாக இருந்துவருகின்றது. எண்ணதான் தனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது என்று முன்னாள் ஜனரஞ்சக கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார கருத்துக்களைத் தெரிவித்தாலும் அவர் விடயத்தில் மிகுந்த எதிர் பார்ப்புக்கள் இருந்து வருகின்றது.

இந்த குமார் சங்கக்காரவின் தந்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மிகமுக்கிய செயல்பாட்டுக்காரர் மட்டுமல்லாது ரணிலின் நெருக்கிய சகாக்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார். அவர் கண்டியிலுள்ள முக்கிய சட்டத்தரணிகளில் ஒருவரும் கூட. மேலும் குமார் சங்கக்காரவும் சட்டத்துரையில் முதுமாணிப் பட்டத்தை முடிதும் இருக்கின்றார் என்று தெரிகின்றது. அத்துடன் கிரிக்கட் காரணமாக சர்வதேச மட்டத்தில் நன்கு அறியப்பட்டவர்.

சங்காவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது என்ற விமர்சனங்களுக்கு இடமிருக்கின்றது. ஆனால் அரசியல் அரங்கில் உள் நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்குகளிலும் அரசியலுக்கு அனுபவம் என்பது அவசியமில்லை என்பதற்கு நிறையவே உதாரணங்கள் இருந்து வருகின்றன. 

பண்டாரநாயக்கா படுகொலைக்குப் பின்னர் சமயலறையில் இருந்து வெளியே வந்து களத்தில் இறங்கிய ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க பிரதமராகி கூட்டுச்சேர அமைப்பில் தலைமைப் பதவிக்கு வந்து உலகில் ஜனரஞ்சகமான ஒரு தலைவராக மிளிர முடியுமாக இருந்தால் நாள் முழுதும் ஆடுகளத்தில் நின்று சட்டத்துரையிலும் முதுமாணிப்பட்டத்தை பெற்றுள்ள சங்கா ஏன் ஐ.தே.க. வேட்பளராக வரமுடியாது என்று கேட்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற தமது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு சங்கா நல்லதொரு பதிலாக இருக்க முடியும். மேலும் பாகிஸ்தானில் இம்ரான்கானின் வெற்றியும் சங்காவுக்கு வாய்பாக இருக்கலாம். அத்துடன் அண்டைய நாடான இந்தியாவுடன் நல்லறவுகளை வளர்க்கவும் மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கிப் பேகவும் சங்க நல்ல தெரிவாகவும் இருக்க முடியும் என்பது எமது கருத்து.

அமைச்சர் ராஜித சேனாரத்தன இந்த குமார் சங்கக்காரவுடன் பல சுற்றுப் பேச்சுக்களை ஏற்கெனவே நடாத்தி இருக்கின்றார். இது தொடர்பான செய்திகள் கசிந்த போது அது தனிப்பட்ட மற்றும் சகாதார அமைச்சு செயல்பாடுகள் தொடர்பான சந்திப்பு என்று ராஜித ஒரு முறை ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார். 

சங்கா அது பற்றி எதுவுமே பேசவில்லை. எமக்குத் தகவல் தருகின்ற வட்டாரங்கள் கூற்றுப்பபாடி அரசியல் செயல்பாடுகள் தொடர்பான பயிற்சியில் தற்போது சங்கா ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. இந்தத் தகவல் உண்மையானால் அவர்தான் ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர்.

இதற்கிடையில்  ஜேவிப்பியும் தாமும் இந்த முறை தனியாக ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றது. இதனை ஊடகங்களுக்குச் சொன்னார் லால் காந்தா. இந்த அறிவிப்பு அவர்களில் ஒரு அரசியல் யுக்தி மட்டுமல்லாது ஒரு பொது வேட்பாளரை முன்நிறுத்துவதற்கான அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற பேரமாகவே நாம் பார்க்கின்றோம். 

நாம் முன்சொன்ன ஜனாதிபதியைத் தெரிவு செய்கின்ற தீர்க்கமான பங்காளிகளில் சிறுபான்மைக் கட்சிகளில் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம். கோத்ததான் ராஜபக்ஸா தரப்பு வேட்பாளர் என்று வந்தால் இந்த சிறுபான்மைக காட்சிகள் என்னதான் தீர்மானங்களை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அந்த சமூகங்களின் வாக்குகள் கோத்தாவுக்கு எதிராக பாவிக்கப்படுவதை தடுக்க முடியாது.

எனவே சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகங்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற தீர்மானங்களையே வருகின்ற ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எடுக்க முடியும். இது கடந்த தேர்தலில் மக்கள் தமது தீர்மானங்களை எடுத்து பின்னர் மு.கா.ஹக்கீம் மைத்திரிக்கு ஆதரவு என்ற அறிவிப்பைச் செய்தது போன்றதாகவே இருக்கும். நாட்டிலுள்ள ராஜபக்ஸாக்களுக்கு எதிரான வெகுஜன இயக்கங்களும் ஜனாதிபதித் தோர்தலில் ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்கின்ற விடயத்திலேயே ஆர்வமாக இருக்கும்.

நன்றி:- ஞாயிறு தினக்குரல் (31.03.2019)

No comments

Powered by Blogger.