Header Ads



புத்தளத்து குப்பைகளையே, முதலில் மீள்சுழற்சிக்குட்படுத்துவோம் - 15 ஆம் திகதி பணிகள் ஆரம்பம்

அறுவைக்காடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவகற்றல் திட்டத்தில் முதற்கட்டமாக புத்தளம் பிரதேசத்திலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.   

முதலாவது கட்டமாக நாளொன்றுக்கு 600 மெற்றிக்தொன் குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியும். இதற்கமைய எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி தொடக்கம் முதல்கட்டமாக குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.   

முதற்கட்டமாக புத்தளத்திலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கு மீள்சுழற்சிக்கு உட்படுத்துவோம். அறுவைக்காடு திண்மக்கழிவகற்றல் பொறிமுறையால் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது என எழுப்பப்படும் சந்தேகங்களை இதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். முதற்கட்டமாக புத்தளத்திலிருந்து சேகரிக்கும் குப்பைகளை அங்கு மீள்சுழற்சிக்கு உட்படுத்திப் பார்த்த பின்னர் அதன் உண்மை நிலைமைகளை அறிய முடியும் என்றும் குறிப்பிட்டார்.   

பத்தரமுல்லையிலுள்ள அமைச்சு கட்டடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.   

அறுவைக்காடு திண்மக்கழிவகற்றல் தொகுதியானது உரிய சுற்றாடல் ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் உரிய அனுமதிகளைப் பெற்றே அமைக்கப்பட்டுள்ளது. சீமெந்து தயாரிப்புக்காக சுண்ணாம்புக் கற்கள் அகழப்பட்ட கிடங்குகளை மூடும் வகையிலேயே அங்கு திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும்.   

அங்கு அமைக்கப்பட்டுள்ள தொகுதியால் களப்பு நீர் மாசுபடுவதாக சிலர் போலியான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். சுற்றாடல் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டே அத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளதால்  இப்பகுதிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.   

அறுவைக்காடு திண்மக்கழிவுத் தொகுதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் புத்தளத்திலிருந்து நூறு, இருநூறு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ளவர்களே. இவர்களே சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இதனால் தான் முதற்கட்டமாக புத்தளத்தில் சேகரிக்கும் குப்பைகளை அங்கு மீள்சுழற்சிக்கு உட்படுத்திப்பார்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.   

இரண்டாம் கட்டம் பூர்த்தியடைந்ததும் நாளொன்றுக்கு 1,200 மெ.தொன் குப்பைகளைப் பெற்று மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியும். ரயில் தொடர்புள்ள எந்தப் பகுதியிலிருந்தும் இங்கு குப்பைகளைக் கொண்டுவர முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

No comments

Powered by Blogger.