Header Ads



CTJ பெண்கள் அணியின் முக்கிய 4 தீர்மானங்கள்

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தேசிய பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்றைய தினம் (16.02.2019) கம்பலை, வைட் விங்க் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் சகோ. ரிஸான் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் மாத்திரமே அமைய வேண்டும் என்றும் நபி வழிக்கு மாற்றமாக அமையப்பெரும் எந்தத் திருத்தத்தையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெண்கள் அணி அறிவித்தது.

இந்நிகழ்வில் அமைப்பின் துணை தலைவர் சில்மி ரஷீதி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி உரையாற்றியதுடன், அமைப்பின் பெண்கள் பிரிவு பேச்சாளர் சகோ. ஷப்னா கலீல், இஸ்லாத்தின் நிழலில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்.

அமைப்பின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் சிங்கள மொழியில் உரையாற்றியதுடன், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் தொடர்பில் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் சிறப்புரையாற்றினார்.

குழந்தை வளர்ப்பில் அதிக பங்களிப்பு தாய்க்குறியதா? தந்தைக்கானதா? என்ற தலைப்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் அணி சார்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் நபி வழிப்படி மாத்திரமே அமையப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் அத்தனை பேரும் கையெழுத்திட்டதுடன், நபிவழிக்கு மாற்றமாக திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம் என்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் அணி தெரிவித்தது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.

வெளிநாடுகளின் தேவைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை முஸ்லிம்களுக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றான முஸ்லிம் தனியார் சட்டத்தை வெளிநாடுகளின் தேவைக்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கோஇ மாற்றியமைப்பதற்கோ இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் இலங்கை முஸ்லிம்களின் தேவைக்காக நமது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முறையான கலந்துரையாடல்களின் பின் திருத்தப்பட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் நபிவழிக்கு மாற்றமான எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக அமைந்திருக்கும் சில சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. குறித்த திருத்தங்கள் கண்டிப்பாக திருமறைக் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் அடிப்படையிலேயே அமையப் பெற வேண்டும். குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கு மாற்றமாக அமையப் பெரும் எந்தவொரு திருத்தத்தையும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில், திருமறைக் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளை பூரணமாக கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய கருத்துரைகள் பற்றிய இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாத குறித்த திருத்த கருத்துரைகளுக்கு எக்காரணம் கொண்டும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

முஸ்லிம் பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் இஸ்லாமிய ஆடை முறைக்கு எதிரான இனவாதம் நிறுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் ஆடை முறைக்கு எதிரான இனவாத கருத்துக்களை தொடர்ந்தும் சிலர் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் இனவாதத்தை உண்டாக்கி அரசியல் ஆதாயம் பெறும் அற்ப்ப நோக்கம் மாத்திரமே அவர்களுக்குள் அடங்கியுள்ளது. ஒரு சமுதாயத்தின் நடைமுறை, கலாசாரம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை இன்னொரு சாரார் கையிலெடுப்பதையோ, விமர்சனத்திற்குள்ளாக்குவதையோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனவாதத்தை உண்டாக்குவதற்கு முயற்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசை இந்த மாநாடு வேண்டிக் கொள்கிறது.

முஸ்லிம் பாடசாலை மாணவிகளின் ஆடை விவகாரத்தில் பாடசாலை மட்டத்தில் சிலர் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதுடன், முஸ்லிம் பெண் ஆசிரியர்களின் முகம், கை தவிர்ந்த முழு உடலை மறைக்கும் விதமான இஸ்லாமிய ஆடை முறைக்கு எதிராகவும் கடுமையான இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை பரப்பி வருவதுடன், மாற்று இன பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் முழு உடலை மறைத்து ஆடை அணிந்து பாடசாலை செல்வதற்கு பாடசாலை நிர்வாகங்கள் தன்னிச்சையாக தடை விதிக்கின்றன. இலங்கை அரசியல் சாதனத்திலேயே அனுமதிக்கப்பட்ட விவகாரங்களில் பாடசாலை நிர்வாகங்கள் தடை விதிக்கும் தன்னிச்சையான செயல்பாடுகளை இந்த மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன், இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு அரசை வேண்டிக் கொள்கிறது.

பெண்களுக்கு எதிரான சீதனக் கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

திருமணம் முடிக்கும் போது, ஆண்கள் பெண்களிடம் பணமாகவும், பொருளாகவும் சீதனம் பெரும் நடைமுறை காணப்படுகிறது. இது பெண்களுக்கு எதிரான மிகப் பெரும் வன்கொடுமையாகும். இந்த சீதன கொடுமை காரணமாக திருமணம் முடிக்க வசதியற்று முதிர் கண்ணிகளாக தம் வாழ்வை கழிப்போர் ஏராளம் பேர் இருக்கிறார்கள். அதே போல் சீதனத்தை காரணம் காட்டி மனப்பெண்களை கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற அநியாயங்களை தடுக்க வேண்டும் என்றால் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு இக்கொடுமைகளில் ஈடுபடுவோர் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

திருமணத்தின் போது பெண்களிடம் சீதனம் பெரும் ஆண்கள் மீதும், அதற்கு துணை போவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கும் விதமாக அரசு உடனடியாக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த மாநாடு இலங்கை அரசை வேண்டிக் கொள்கிறது.

முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் உலமா சபையினால் நீதியமைச்சரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்ட திருத்த கருத்துரை தொகுப்பிலும் சீதனத்திற்கு ஆதரவளிக்கும் விதமான பரிந்துரைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத, பெண்களுக்கு மிகப்பெரும் அநியாயத்தை இழைக்கும் சீதனத்திற்கு ஆதரவளிக்கும் குறித்த தீர்மானங்களை இரு தரப்பினரும் உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இது போன்ற பெண் கொடுமைக்கு யாரும் துணை நிற்க்கக் கூடாது. உலக வரலாற்றில் பெண்களுக்கு மிகப் பெரும் கண்ணியம் வழங்கிய இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் இது போன்ற தீர்மானங்களை இவர்கள் எடுக்கும் நிலை ஏற்படுகிறது. சீதனத்தை ஆதரித்து, சீதனத்திற்கு துணை போகும் யாராக இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

4 comments:

  1. Who is CTJ? Is that little DAJJAL'S companians. *

    ReplyDelete
  2. இவர்களுக்கு மத்தியில் முதலில் ஒற்றுமை வேண்டும்
    4 பிரிவுகள் ஏன்?

    ReplyDelete
  3. கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம்;
    கற்பதைக் கடமையாக்கிய காருண்யனின்
    கலிமாவின் பெயரால் ஒன்றிணைவோம்!

    ReplyDelete
  4. Good decisions were taken at CTJ conference. Also make sure that unity is of paramount importance in Islam. Be on good terms with all other factions including ACJU.

    ReplyDelete

Powered by Blogger.