Header Ads



நீண்ட இடைவேளைக்கு பின் ஒன்றாக சேர்ந்த அரசியல்வாதிகள்


அரசியல்வாதிகள் நீண்டகாலமாக அரசியலில் தாக்குப்பிடிப்பதற்கு மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதும் மக்களின் நன்மதிப்பை பெறுவதும் அவசியம் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (27) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சுற்றாடல் அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விழாவில் கருத்துத் தெரிவிக்கின்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல்வாதி என்ற வகையில் மக்கள் நேய பணிகளில் ஈடுபட்டு தனது பணியை சிறப்பாக ஆற்றிவரும் ஜோன் அமரதுங்க, நீண்ட கால அனுபவமுடைய சிறந்த அரசியல்வாதி என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் வழங்கிய ஒத்துழைப்பையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், நினைவுப் பரிசில் ஒன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணியான ஜோன் அமரதுங்க 1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வத்தளை தொகுதியின் பிரதான ஒருங்கிணைப்பாளராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்ததுடன், இராஜாங்க அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் என்று பல முக்கியமான பொறுப்புக்களை வகித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, விசேட அதிதிகள் உள்ளிட்ட அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் குடும்ப உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.