Header Ads



இலங்கையில் தயாராகியுள்ள அதி நவீன ஆயுதம் - சுதந்திரதின அணிவகுப்பில் முதற்தடவையாக காண்பிப்பு (படங்கள்)


இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பல்குழல் பீரங்கி நேற்றுமுன்தினம் காலிமுகத்திடலில் நடந்த சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.

இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

“இராணுவத்தைச் சேர்ந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நிபுணர்கள் குழுவும், உள்ளூர் பல்கலைக்கழகங்களும், கலாநிதி சந்தன பெரேராவுடன் இணைந்து, 7 மில்லியன் ரூபா செலவில், இந்த பல்குழல் பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்குழல் பீரங்கி அனைத்துலக தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் கொண்டும் இந்தப் பீரங்கியினால் சுட முடியும்.

10 மில்லியன் ரூபா செலவில், 40 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கிகளையும் தயாரிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளது. எனினும்,  முதற்கட்டமாக, 20 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கியைத் தயாரிப்பதில் தான் கவனம் செலுத்துகிறோம்.

சுடு தூரம் பற்றிய திருத்தங்களைச் செய்த பின்னர், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பல்குழல் பீரங்கி, சிறிலங்கா இராணுவத்தின் பயிற்சிக்காக கையளிக்கப்படும்.

இதன் சுடுதொலைவை 1 கிலோ மீற்றராக குறைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், பயிற்சித் தேவைகளுக்காக, 20 கிலோ மீற்றர் இலக்கை சுட முடியாது.

அத்துடன் குறுந்தூர ஏவுகணை ஒன்றையும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் தயாரித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.


1 comment:

Powered by Blogger.