February 24, 2019

"சுத்தம் என்பது ஈமானின் பாதியாகும்" என்ற நபிமொழியும், இன்றைய விஞ்ஞானம் சொல்கின்ற உண்மையும்

நாம் வாழும் இன்றைய நவீன உலகு எதிர் கொள்கின்ற மிகப்பெரும் சவால்களில் ஒன்றுதான் கொல்லும் தொற்று நோய்கள் (deadly infectious disease). இந்த நோய்கள் வரலாறு நெடுகிலும் மனிதனுக்கு சவாலாகவே இருந்து வருகின்றன.  உலகம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்தாலும்  இந்த சவாலை சமாளிக்க முடியாமல் விஞ்ஞானம், மருத்துவம் என்பன இன்னும் திணறிக் கொண்டு தான் இருக்கின்றன. இது போதாது என்று காலத்துக்குக் காலம் வரும் ஒவ்வொரு புதுவகை தொற்று நோய்களும் நன்றாக பீதியை கிளப்பிக் கொண்டுதானிருக்கின்றன. பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சார்ஸ், இன்பளுவன்சா, டெங்கு, ஷிகா ...., என அச்சமடையவைக்கும்  இந்த தொற்றுக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இப்படியான ஆட்கொல்லி தொற்று நோய்கள் வருவதற்கான காரணிகள் யாவை? இவைகள்  எவ்வாறு பரவுகின்றன? இவற்றை  எப்படி கட்டுப்படுத்துவது?  என்பதைப் பற்றி கவலைகள் விஞ்ஞானிகள் முதல் நாட்டாமை வரை எல்லோரிடமும் பரவலாக இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒற்றைப் பதில் "சுத்தம் சுகம் தரும்" என்பதிலே  இருக்கிறது.

“சுத்தம் என்பது ஈமானின் பாதியாகும்” என்ற நபி மொழியை தெரிந்த மக்கள் நோயில்லா வாழ்வின் பெரும் பகுதியை தீர்மானிப்பது இந்த சுத்தம் தான் என்பதை தெரிந்தோ தெரியாமலோ வசதியாக மறந்து விடுகின்றனர். இதே போலவே ஒன்றில் கவனமாகவும், மற்றொன்றில் அசிரத்தையாவும் இருந்தும் விடுகின்றனர். தமது வாழ்வில் அன்றாட சுத்தத்தை மிக சிரத்தையாக பேணும் பலர் தாம் வாழும் சூழல்சார் சுத்தத்தைப் பேண முயற்சிக்காமல், அது பற்றிய கவலைகள் இல்லாமல்  இருப்பது தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணியாக இருக்கின்றது.  நாம் சுத்தமாக இருப்பது மட்டும் போதாது,  நமது சூழலையும் சுத்தமாக வைத்திருப்பது தான் தொற்றும் நோய்களில் இருந்து நம்மையும் நமது குழந்தைகளையும் பாதுகாக்கும் மிகப் பெரும் கேடயம் என்பதை தெரிந்து கொண்டால் நிறைய சிக்கல்கள் இலேசாக முடிந்து விடும்.

தனி மனித சுத்தம் போலவே சுற்றுச் சூழல் சுத்தமும் மிக முக்கியமானது. கழிவுகளை நேர்த்தியான முறையில் முகாமைத்துவம் செய்தல், வடிகான்களை உரிய முறையில் துப்பரவு செய்தல், பராமரித்தல் என்பன நமது மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனிக்கப்படாத பொதுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது போலவே இயற்கை வளங்களை, மரங்களை பாதுகாத்தல் தொடர்பிலும் நமது அக்கறை பூச்சியத்துக்கு கிட்டவாகவே காணப்படுகின்றது. இதுவே நுளம்புகளின், அது போன்ற நோய்க் காவிகளின் பெருக்கம் அதிகரித்து ஆட்கொல்லித் தொற்று நோய்களின் தாக்கம், பரவுகை என்பன நம்மவர்களின் மத்தியில்  அதிகரிப்பதற்கான அடிப்படை  காரணமாக அமைந்தது விடுகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் டெங்குகாய்ச்சல். அது காலியாகவோ, கொழும்பாகவோ, கண்டியாகவோ, மட்டக்களப்பாகவோ, இருக்கட்டும், எங்கு பார்த்தாலும் நமது அபாயா, சல்வார் அணிந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வைத்தியசாலைகளில் அல்லோல கல்லோலப்படுவது தினம் தினம் காண்கின்ற கவலையான காட்சியாக இருக்கிறது. சில வேளைகளில் அதிதீவிர ICU சிகிச்சைப் பிரிவில் உள்ள எல்லாக் குழந்தைகளுமே, அப்துல்லாஹ்வாகவோ, பாத்திமாவாகவோ, அல்லது முகம்மதாகவோ இருக்கின்றனர். பல வேளைகளில் நோயாளர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நம்மவர் குழந்தைகளின் தொகை நாம் தான் இந்த நாட்டின் பெரும்பான்மை இனமாக இருக்கிறோமோ எனும் விகிதத்தில் இருக்கிறது.

வைத்தியசாலைகளில் சாதாரண காய்ச்சலுடன் ஒரு குழந்தை வரும் போது கூட  அந்தக் குழந்தை வருகின்ற ஏரியா நம்மவர்கள் செறிந்து வாழும் இடமா என்பதை முதலில் வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உறுதி செய்துகொள்கிறார்கள். ஏனெனில் அக்குழந்தை நம்மவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இருந்து வருமானால் அக்காய்ச்சல் டெங்கு காய்ச்சலாக அதுவும் குருதிப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய டெங்கு காய்ச்சலாக இருப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது வைத்திய சாலைகளில் எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. அது போலவே வயிற்றோட்டத்துடன் நமது ஒரு குழந்தை வந்தால் தாதியர்கள் கொஞ்சம்  முன்னெச்சரிக்கையாக  நடந்து கொள்கிறார்கள் ஏனெனில் அந்த வயிற்றோட்டத்தை இவர்கள் வாட்டு முழுக்க பரப்பிவிடுவார்களோ என்ற இனம் புரியாத பயம் அவர்களிடம் புரையோடிப் போயுள்ளது. இவைகளுக்கு காரணம் தொற்று நோய் பற்றியோ, அது நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும்  என்பது பற்றியோ நமது சமூகத்தில் யாரும் குறிப்பாக தாய்மார்கள் அலட்டிக்கொள்ளாமல் கவனயீனமாக  இருப்பது தான். தங்களை மட்டுமே பார்த்தால் சரி, தங்களது குழந்தைகளின்  நோய் குணமடைந்தால் சரி என்ற மனோ நிலை நம்மவர்களிடம் சற்று அதிகமாகவே காணப்படுவது தான்  இந்த கவனயீனமான செயற்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கிறது. அதன் நீட்சியாக  குப்பைகளை, டயபர்களை உரிய முறையில் அகற்றாமல்  கண்ட கண்ட  இடங்களில் வீசிவிட்டு செல்லுதல் என்பதும் நமது அடையாளமாகவே வைத்தியசாலைகளில்  காண்பிக்கப்பட்டிருக்கிறது.

ஏன் நமக்கு இந்த இழி நிலை? சுத்தமும் சுகாதாரமும் ஈமானின், வாழ்வின் மிக முக்கிய பகுதியாக  சொல்லித் தந்த மார்க்கத்தின் சொந்தங்களான நமக்கு ஏன் இந்த பராமுகம்? அசிரத்தை? கவனயீனம்?  

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள் பற்றி நாம் ஒவ்வொருவரும் சற்று சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இதற்குரிய தீர்வுகளை நாம் ஒவ்வொரும் தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ செய்ய வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது மார்க்கத்தின் கடமையும் கூட .

நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும்,  காற்றோட்டமான, வெளிச்சமான வீட்டு அமைப்புக்கள், சிறிய வீடாக இருந்தாலும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பேணும் ஒழுங்கு முறை என்பன நோய்க்காவிகளின்  பெருக்கத்தை தடுக்கக்கூடியனவாக உள்ளன. குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கும், வீட்டு வாசல் தோட்டத்தை உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்துவதற்கும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். நமது வளவினுள் உள்ள நீர் தேங்கும் பண்டங்களை அப்புறப்படுத்துவது, வீட்டுக்கூரைகளை சுத்தப்படுத்துவது போன்று நமது வீட்டின் முன்னால் உள்ள வடிகாண்களை, வீதியை, அயலவர்களின் வெற்று காணிகளையும்  நாம் கவனமெடுத்து சுத்தப்படுத்தினால் மாத்திரமே நாம் முழுமையாக சுத்தமானவர்கள் என மார்பு தட்ட முடியும்.   அப்போது தான் இந்த தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெறவும் முடியும். அது போலவே நாம் பிரயாணம் செய்யும் இடங்கள், தங்கி இருக்கும் பொது இடங்கள், பொது வாகனங்கள் போன்றவற்றின் சுத்தத்தை, நேர்த்தியை பேணுவது நாம் செய்யும் சமூகக் கடமை என்பதை மனதில் வைக்க வேண்டும். இவைகளையெல்லாம் விட்டு விட்டு பூச்சி மருந்து அடித்தால் நோய்க் காவிகள் இல்லாமல்  ஆகிவிடும்  என்று வாழாவிருப்பது ஜெயமோகனத்தனமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

கைகளை கழுவிக்கொள்ளுதல் நோய்த்தடுப்பின் முதற்படி என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கின்ற உண்மையை நமது மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு கற்றுத் தந்திருக்கின்றது. எங்காவது தொற்று நோய் பரவுவதைக் கேள்வியுற்றால் நீங்கள் அவ்விடத்துக்கு செல்லாதீர்கள். அதுபோல் தொற்று உங்கள் பிரதேசத்தில் ஏற்பட்டால் அதை விட்டும் விரண்டு வேறு பிரதேசத்திற்கு செல்லாதீர்கள். (புஹாரி 5728) என்ற பிரபலமான நபி மொழி நவீன மருத்துவத்தின் நோய்க்காப்பு முறையான (Isolation & Quarantine) பற்றி தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இதுதான் நமது மார்க்கம் நமக்கு சொல்லித்தருகின்ற சமூகப் பொறுப்புணர்வு. சமூக வாழ்வின் ஒழுங்கு முறை. அது போலவே நோயாளிகளாக இருப்பவர்கள் நோய் குணமடையும் வரை வீட்டில் இருப்பதும் , பொது  ஹவ்ழ், தண்ணீர் தொட்டி, swimming pool  போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் சாலச் சிறந்தது .  

தொற்றக்கூடிய நோய் உள்ளவர்கள் மற்றைய தேகாரோக்கியமான மனிதர்களிடத்தில் செல்ல வேண்டாம் (முஸ்லிம் 2221) என்ற இந்த அறிவுரையினை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் நிறைய நோய்கள் பரவுவதை தடுக்க முடியும். அதே சமயம்  தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை , tissue , போன்றவற்றை பாவிப்பதை அதிலும் விஷேடமாக நோயாளிகளாக உள்ளவர்கள் தாம் இருமும் போதும் தும்மும் போதும் வாயை அல்லது  முகத்தை மூடிக்கொள்வதை  பழக்கப்படுத்திக் கொண்டால் நோய்தொற்றுக் கிருமிகள் வெளிச்சூழலில் விடுவிக்கப்படுவதை நாம் தடுத்துக்கொள்ள முடியும். 

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பது போல வரு முன் காப்பதே மிகச்சிறந்தது. எனவே தொற்றுநோய் வருவதை தடுப்பதற்கு முன்னால் அது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகின்றது. தொற்று நோய்கள் என்றால் என்ன, அவை எப்படி தொற்றுகின்றன? இதன் அடிப்படைகள் எவ்வாறானவை ? தொற்றைத் தடுப்பது எவ்வாறு? தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றிய நமது அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அவைகள் எல்லாவற்றையும்  இந்த பத்தியில் விளக்குவது இயலாத காரியம். நவீன கணணி யுகத்திலே இது தொடர்பான தகவல்களை மிக மிக இலகுவாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். 

தொற்று நோய்கள், அதன் தடுப்பு முறைகள்  பற்றி நமது ஆலிம்கள், மத குருக்கள்,  ஆசிரியர்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறும் தரப்பினரும் தமது முயற்சிகளை முன்னெடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

Dr PM Arshath Ahamed MBBS MD PEAD 
Senior Registrar in Peadiatric 
Lady Ridgeway Hospital for Childrenent 

0 கருத்துரைகள்:

Post a Comment