Header Ads



என். ஏ. கபூர் டிரஸ்டின் சொத்துக்கள், குத்தகைக்கே வழங்கப்பட்டன

கபூரியாவின் அமானிதச் சொத்து சுலைமான் ஹொஸ்பிடல் காப்பாற்றப் படுமா என்ற கட்டுரை பார்த்தேன்.  அதில் முன்னுக்குப் பின் முரண் பாடான தகவல்கள் வழங்கப் பட்டுள்ளது. 

இந்த காணி சம்பந்தமாக சில பிரச்சினைகள் உள்ளன.  அது அவர்களின் நிர்வாகப் பிரச்சினை.  ஆனால் அதனை வேறுவகையில் இங்கு எழுதி மக்கள் குழப்பத்தில் ஆக்கப் பட்டுள்ளனர். 

கட்டுரையின் பதினோராவது பந்தியில்  நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர் என்று கூறி விட்டு 17 வது பந்தியில் சுலைமான் மருத்துவமனை மூடப் பட்ட பின்னர் நம்பிக்கை பொறுப்புச் சொத்து என்று கருத்தில் கொள்ளப் படாமல் நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு கைமாற்றப் பட்டுள்ளது என்று எழுதப் பட்டுள்ளது. 

குத்தகைக்கு வழங்கும் போது அதனை அனுபவிப்பவர் அந்தச் சொத்தின் உரிமையாளராக ஒரு போதும் ஆக மாட்டார். ஆனால் அவர் அந்த சொத்தை உபயோகப் படுத்தி தான் வருமானம் ஈட்டுவதுடன் அதில் ஒரு பகுதியை வாடகையாக (குத்தகை கட்டணம்) டிரஸ்டுக்கு வழங்கி வருவார். இந்த உடன்படிக்கையில் எந்த தவறும் இல்லை. 

மேலும் டிரஸ்டின் இறுதி வருமானம் 750,000 ரூபா என தெரிவிக்கப் பட்டுள்ளது. சுலைமான் ஹொஸ்பிடல் அதை விட குறைந்த தொகையையே செலுத்தி வந்துள்ளது. 

வக்ப் சொத்துக்களை சும்மா வைத்திருக்க முடியாது. அவற்றின் மூலம் வருமானங்கள் பெறப் பட்டு அந்த வக்பில் தெரிவிக்கப் பட்டுள்ள பயனாளி நிறுவனத்துக்கு அது வழங்கப் பட்டால் அந்த வக்ப் இன் நிபந்தனை பூர்த்தியாகிவிடும். 

ஒரு கட்டிடத்தை வக்ப் சொத்தில் கட்டுபவர் 15 அல்லது 20 வருடங்களுக்கு அதை தான் பயன்படுத்தும் விதமாகவே ஒப்பந்தங்கள் எழுதுவார். ஏனெனில் வக்ப் சொத்தில் கட்டப் படும் கட்டிடம் அவருக்கு உரியது அல்ல.  

ஆனால் அந்தக் கட்டிடத்தைக் கட்ட ஒரு முதலீட்டாளருக்கு ஏற்படும் மூலதனச் செலவை ஈடு செய்ய அவர் குறிப்பிட்ட வருடங்கள் அந்தச் சொத்தை வைத்து தனது வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்டாலே அவருக்கு அந்த கட்டிடத்துக்கான செலவை மீளப்பெறம்முடியும். அந்த அடிப்படையிலேயே இந்த உடன்படிக்கை செய்யப் பட்டுள்ளது. 

ஏனைய பிரச்சினைகள் அப்துல் கபூர் டிரஸ்டுக்கும் அதன் இரண்டு சொத்துக்களான கபூரியா அரபிக் கல்லூரிக்கும் சுலைமான் ஹொஸ்பிடல் காணிக்கும் இடையிலானதே அல்லாமல் வேறு எதுவும் இல்லை. இதை அவர்கள் வக்ப் சபை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். 

குத்தகை என்பது வாடகையை ஒத்தது என்பதாலும் அது ஒரு விற்பனை நடவடிக்கையோ அல்லது உரிமை மாற்றும் செயற்பாடோ அல்ல என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை எழுதப் படுகின்றது. 

குறிப்பு: மேற்படி ஹெட்டி ரம்ஸி எழுதிய கட்டுரையில் கபூரியா காணி சம்பந்தமான விபரங்கள் வழங்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் மிகவும் இரகசியமாக வக்ப் சபை ஊடாக தீர்க்கப் பட வேண்டும். இப்படி பகிரங்கத்துக்கு விட்டால் ஜெய்லானியின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம். முஸ்லிம்கள் விபரமாக இருப்பதுடன் விவேகமாகவும் நடந்து நம்மைச் சுற்றி நடப்பவற்றை பற்றி எச்சரிக்கையுடல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். 

அப்துல்லாஹ்

No comments

Powered by Blogger.