Header Ads



கோட்டாபயவுக்கு ஏமாற்றம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதென அறிவித்த மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம், இது தொடர்பில் கோட்டாபய தரப்பால் தாக்கல் செய்திருந்த மனுவை, நிராகரித்தது.

குறித்த விசேட மேல் நீதிமன்றத்தின் தலைவர் சம்பத் விஜேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழுவினாலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் போது, மெதமுலன - வீரகெட்டிய பிரதேசத்தில், டீ.ஏ.ராஜபக்‌ஷ அரும்பொருட் காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக, அரச நிதியிலிருந்து சுமார் 34 மில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, கோட்டாபய உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, ஏற்கெனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நீதிமன்றத்துக்கு, குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லையெனக் கூறி, கோட்டாபய சார்பில், அவரது சட்டத்தரணி ரொமேஸ் டீ சில்வாவினால், கடந்த 22ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில், சட்ட மா அதிபர் சார்பில், கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த நீதிமன்றம், அரசமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்ட உத்தி​யோகபூர்வ நீதித்துறை சார் நிறுவனமென்றும் இதில், நேரடியாக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் சட்ட மா அதிபருக்கு இல்லாவிடினும், பிரதம நீதியரசரின் அனுமதியுடன் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்றும் கூறினார்.

அவ்வாறே, இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இதனை விசாரித்து தீர்ப்பளிக்க, இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர், இந்த ஆட்சேபனை மனு தொடர்பான தீர்ப்பை, இன்றைய தினம் (11) வழங்குவதாக, நீதிபதிகள் குழு அறிவித்த நிலையிலேயே, கோட்டாபய தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதென அறிவித்தது.

No comments

Powered by Blogger.