Header Ads



கடற்படை முகாமுக்குள் செல்ல, ரணிலுக்கு அனுமதி மறுப்பு - மைத்திரியுடனான முறுகல் நீடிப்பு

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினருக்கு கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை: மைத்திரி - ரணில் முறுகல் மேலும் தீவிரம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவம் 6 தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு நாளை செல்லவுள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பலாலி விமானத் தளத்தையும் சென்று பார்வையிடவுள்ளார்.

பிரதமர் செல்லவுள்ள இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவரது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும். அதற்காக அந்த இடங்களுக்கு முற்கூட்டியே சென்று நிலைமைகளை ஆராய்வது பிரதமர் பாதுகாப்புப் பிரிவின் வழமையான நடவடிக்கையாகும்.

அதற்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பிரதமர் பாதுகாப்புப் பிரிவினர் 6 நாட்களுக்கு முன்னர் சென்றுள்ளனர். முகாமுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதேபோன்று, பலாலி விமான நிலைய விமானப் படையினருக்கும், பிரதமர் நாளை வியாழக்கிழமை செல்லவுள்ள விவகாரம் தெரிவிக்கப்படவில்லை. பலாலி விமான நிலையத்துக்குப் பிரதமர் வரவுள்ளாரா என்று வான் படையினர் பிரதமர் அலுவலகத்திடம் வினவியுள்ளனர்.

இதன்பின்னரே, பிரதமரின் யாழ். பயணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதையடுத்து பிரதமரின் நிகழ்ச்சி நிரல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.