Header Ads



சவுதியில் இலங்கையர் மரணம் - உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்க உறவினர்கள் கோரிக்கை


சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த கந்தசாமி நேசராசாவின் உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு – செங்கலடி – மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி நேசராசா, குடும்ப வறுமை காரணமாக 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.

நான்கு ஆண் பிள்ளைகளின் தந்தையான நேசராசா, கடன்பெற்றே தொழிலுக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

ஜித்தாவிலுள்ள நிறுவனமொன்றில் அவர் பணியாற்றி வந்துள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ரியாத்தில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி நேசராசாவின் 15 வயது மூத்த மகன் குடும்ப வறுமை காரணமாக ஆடு மேய்த்து வருவதோடு, 3 வயது இளைய மகன் விசேட தேவையுடையவராகக் காணப்படுகின்றார்.

13 வயது மகன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 9 ஆம் தரத்திலும் 12 வயது மகன் மாவடிவேம்பு சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்திலும் கல்வி கற்கின்றனர்.

நான்கு மகன்கள், மனைவி, தாய் மற்றும் மனைவியின் பாட்டி ஆகியோரை இதுவரை காலமும் கந்தசாமி நேசராசாவே பராமரித்து வந்துள்ளார்.

நேசராசாவின் திடீர் இறப்பால் தற்போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த குடும்பத்தினர், அவரின் உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

சவுதி அரசாங்கத்தின் அரச நடவடிக்கைகள் நிறைவடையாத காரணத்தினால் உடலை இலங்கைக்கு கொண்டுவர முடியாதுள்ளதாக பணியகம் குறிப்பிட்டது.

1 comment:

  1. Please provide us the home details of this poor person/family. InshaAllah we can do some help for them.

    ReplyDelete

Powered by Blogger.