Header Ads



பெண்களுக்கு ரயிலில், தனிப்பெட்டி அறிமுகம்

ரயில் பயணங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளார். இதன் முதற் கட்ட நடவடிக்கை பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 08ஆம் திகதி முன்னெடுக்கப்படும். 

வியாங்கொடை ரயில் நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக நேரில் சென்றிருந்த அமைச்சர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.  பெண்களுக்கென தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யும் வேலைத் திட்டம் முதற்கட்டமாக பாரிய நகரங்களை நோக்கிச் செல்லும் ஐந்து ரயில்களில் குறிப்பாக வேலை நேரங்களில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.  

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சர், ரயிலில் பயணிக்கும் பெண்கள் செளகரியமாக செல்ல வேண்டுமென்றும் கூறினார். 

மேலும் ரயில் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப் படுமென்றும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார். 


அத்துடன் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அவசியமான வசதிகள் ரயில் நிலையங்களில் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரயில் நிலையங்களின் முகாமைத்துவத்தை தரமுயர்த்தும் நோக்கில் அதன் சுத்திகரிப்பில் தனியார் அமைப்புக்களை ஈடுபடுத்த தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக ரயில்வே திணைக்களம் தனியார்மயப் படுத்தப்பட்டிருப்பதாக தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

(லக்ஷ்மி பரசுராமன்) 

No comments

Powered by Blogger.