Header Ads



இளவரசரின் காரை வாங்கிய மதுஷ், கஞ்சிப்பானயின் டுபாய் வீட்டில் பெருந்தொகை பணம் மீட்பு

டுபாய் மதீனாத் ஜூமெய்ரா ஹோட்டலில் ( ஆறு நட்சத்திர ஹோட்டல் ) வைத்து கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களின் இரத்த பரிசோதனை அறிக்கை நாளை கிடைத்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படுமென அந்நாட்டு காவல்துறை இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இங்கு சிக்கிய களுத்துறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி சிறைச்சாலைகள் திணைக்களத்தில் விடுமுறை பெற்றே இந்த பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். கால் உபாதை காரணமாக அவர் ஓய்வில் இருந்தபடி மதுஷின் அழைப்பின் பேரில் ஊன்றுகோலின் உதவியுடன் அவர் டுபாய் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

மதுஷ் பாவித்த அதிசொகுசு லிமோசின் கார் டுபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. டுபாய் இளவரசர் ஒருவர் பாவித்த காரையே அவர் ஏலத்தில் வாங்கியுள்ளதாக தகவல் அறியப்பட்டுள்ளது.

டுபாயில் கஞ்சிப்பான இம்ரானின் வீட்டில் நடத்திய சோதனையில் பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு பொலிஸார் , கைது நடவடிக்கை இடம்பெறும்போது விடுதலை செய்ய தமக்கு லஞ்சம் வழங்க முயன்ற இரண்டு முக்கியஸ்தர்களை தனியே விசாரித்து வருவதாக அறிவித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு தீவிரமாக முயல்கிறது.

மதுஷ் ஏற்கனவே இப்படி பல நிகழ்வுகளை நடத்தியுள்ளதாகவும் அதில் பல முக்கிய புள்ளிகள் இலங்கையில் இருந்து கலந்து கொண்டதாகவும் இன்னுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிறந்த நாள் நிகழ்வுக்கு சுமார் மூன்று கோடி ரூபாவை மதுஷ் செலவிட்டிருப்பதாக விசாரணைகளில் அறியக் கிடைத்துள்ளது.

-Siva-

No comments

Powered by Blogger.