Header Ads



இன்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு, தேவைப்படும் அவசர நிவாரணி

- சுஐப். எம். காசிம் -

முஸ்லிம் சமூகத்திலுள்ள சில இளைஞர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் ,அவதானிக்கப்படுவதாக தெரிகின்றது.இது வன்முறைகளை வெறுத்து அமைதியை விரும்புகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.நாட்டின் அமைதி,ஸ்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளில் சில இளைஞர்கள் இறங்கியதால் வந்துள்ள புதுவகை அச்சமே இது.

இதனாலே இந்த இளைஞர்கள் பாதுகாப்புப் பிரிவின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .இந்த இளைஞர்களை திசை திருப்புவது யார்? இதன் பின்னணியிலுள்ள சக்திகள் எவை? என்பது பற்றிய தேடுதல்களைத் துருவி ஆராயும் பாதுகாப்புப் பிரிவு,தாங்கள் சந்தேகிக்கும் விடயங்களுக்கான ஆதாரங்களைத் தேடி அலைந்து திரிகின்றது..

இந்த இளைஞர்கள் இயக்கப்படுவது அரசியல் நோக்கிற்கா?அல்லது மதவாத நோக்கிற்கா? என்பதைக் கண்டறிவதும்,இதற்குப் பின்னாலுள்ளவை வெளி நாட்டு சக்திகளா? அல்லது உள்ளுர் அமைப்புக்களா? என்பதைத் தெரிந்து கொள்வதுமே பாதுகாப்புபடையின் முதல் நோக்கமாக இருக்கலாம்..எனினும் இவ்விளைஞர்களின் செயற்பாடுகளில் அரசியல் நோக்கத்தை காணக் கடினமாக உள்ளது.அடிப்படை வாதத்தில் திளைத்த மத அமைப்புக்களின் தொடர்புகளே இவர்களை இயக்கலாம் என்ற சந்தேகமே இது வரைக்கும் வலுத்து வருகிறது. அதுவும் மதவாதத்தை அடிப்படையாக வைத்து வெளிநாடுகளில் இயங்கும் சில அமைப்புக்களின் தொடர்புகள் இவர்களுக்கு இருக்கக்கூடுமென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

 என்னவானாலும் மதவாதம் இல்லாவிட்டால் இவ்விளைஞர்களின் விடயத்தை இலகுவாக சரிப்படுத்தலாம்,மதவாதமே இவர்களின் குறிக்கோளாக இருந்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் சல்லடை போடப்படுவர். ஏனெனில் எந்த அரசியல் கட்சிகளையும் சாராத முஸ்லிம்கள் அதிகளவானோர் இருக்கின்றனர்.தேர்தல் காலத்தில் மட்டும் வாக்களிப்பதைப் பற்றியே இவர்கள் சிந்திப்பதுண்டு.ஆனால் மதம் என்பது முஸ்லிம்களைப் பொறுத்த வரை உயிர் மூச்சு. ஆத்ம மீட்சிக்கும்,மறுவுலக ஈடேற்றத்திற்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் வழி காட்டல்களை அடியொற்றிப் பின்பற்றுகின்றனர். துரதிஷ்ட வசமாக இஸ்லாமிய அமைப்புக்கள் அதிகரித்து, ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் இன்றைய நிலையில் ஐந்து கடமைகளையும் பாரம்பரியமாகப் பின்பற்றி வந்த முறைகளை தொடர்ந்தும் பின்பற்றும் முஸ்லிம்களே நூற்றுக்குத் தொண்ணூறு வீதமுள்ளனர்.எஞ்சியுள்ள முஸ்லிம்களே வெவ்வேறு அமைப்புக்களாகப் பிளவு பட்டுள்ளனர்.நோன்பு காலங்களிலும், பெருநாள் தினங்களிலும் இதை அவதானிக்க முடிகின்றன.எனவே எஞ்சியுள்ள பத்து வீதத்தில், ஒரு சில அமைப்புக்களில் உள்ள இளைஞர்களுக்கு தீவிரப்போக்கில் மதத்தை நிலைநாட்டும் மூளைச்சலவை செய்வது யார்?இதன் நோக்கம் குறுகியதா?சர்வதேச மட்டத்திலா னதா?மத்திய கிழக்கிலும் இவ்வாறான தீவிர முயற்சிகள் தீடீரென முளைத்து இலக்கை அடைய முடியாமல் தடுமாறுவதும் திசை மாறுவதும் எமது கவனங்களை ஈர்க்காமல் இல்லை.இந்தப்பிழையான அணுகுமுறைகளால் இன்று உலகில் இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்கள் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் முஸ்லிம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப் பட்டுள்ளன. இதற்கும் மேலாக எத்தனையோ முஸ்லிம் அரசுகள்  படையெடுப்புக்களால் கவிழ்க்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இதில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

பெற்ற குற்றத்திற்காக,இன்று ஒரு தந்தை சிறையில் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மாவனல்லை சிலை உடைப்பில் சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தை என்ன பாவம் செய்தார்? மூளைச்சலவைக்கு உள்ளாகி மதவாதத்தில் திளைத்த மகனால் வந்த வினையாலே அவர் சிறைச் சோறு சாப்பிட நேரிட்டுள்ளது.எனினும் இத்தந்தையின் கடந்த கால தீவிரப்போக்ககளில் அதிருப்தி அடைந்த முஸ்லிம் அமைப்பு ஒன்று அவரை இடைநிறுத்தியமை பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

 பள்ளிவாசலில் தொழக்கூடாது,அல்லது நோன்பு நோற்கக் கூடாது என்று அரசாங்கம் பிறப்பித்த கட்டளையை எதிர்த்தா இவ்விளைஞர்கள் போராடினர்? இல்லையே.ஐந்து கடமைகளையும் செய்வதற்கு அனுமதித்து இதற்கும் மேலான சில சலுகைகளையும் தந்துள்ள எமது அரசாங்கத்தை அல்லது இந்த நாட்டின் தேசிய மதத்தை எதிர்ப்பதற்கான தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதும் இல்லை. இனிமேல் ஏற்படப் போவதும் இல்லை. இந்நிலையில் எதற்கு இந்நாட்டில் மதவாதம்? பள்ளிவாசல்களில் மாத்திரமன்றி வானொலிகளிலும் அல்லாஹ்வைத் தொழுவதற்கான பாங்கோசை ஒலிப்பதை விடவும் என்ன மதச் சுதந்திரம் இந்த இளைஞர்களுக்கு வேண்டி உள்ளது. ஹராம், ஹலால்,பர்தா பிரச்சினைகள் ஏனைய சமூகத்தினரின் பார்வைக்கு புலப்பட வைத்ததும் இஸ்லாமிய அமைப்புக்களின் மோதல்களே.அறிவுக்கு வேலை கொடுக்காது அடிப்படைவாதத்துக்கு முக்கியத்துவம் வழங்கிய அரபு நாடுகளின் கடந்தகால நிலைமைகள் எவ்வாறு இருந்தன.இத்தனை பொருளாதாரம்,மனித வளம் இருந்தும் சின்னஞ்சிறிய இஸ்ரேலுக்கு முழு மத்திய கிழக்கும் அச்சமடைவது ஏன்?அடிப்படைவாத அம்சங்கள் தலைதூக்கியதே முதற்காரணம். தொப்பி போடுவதா?தாடி வைப்பதா?,முகத்தை மூடுவதா அல்லது திறப்பதா?, பர்தாவா, ஹிஜாபா, புர்காவா? தறாவீஹ்,தஸ்பீஹ் தொழுகைகள் எத்தனை ரக்ஆத்துக்கள்? பிறை பார்த்தா,பார்க்காமலா நோன்பு நோற்பது? பெருநாள் கொண்டாடுவது? விரலை நீட்டுவதா, ஆட்டுவதா? தக்பீர் கட்டுவது இடுப்பிலா, நெஞ்சிலா?  இவைதானே எம்மைப் பிளவு படுத்தின.இந்தப்பிளவுகள்தானே அமைப்புக்களை தோற்றுவித்தன.அமைப்புக் களால்தானே அடிப்படைவாதம் தலைதூக்கின. இந்த அடிப்படைவாதம்தானே அறிவுக்குத் தடைபோட்டு அழிவுக்கு வித்திட்டது.

இஸ்லாம் என்றாலே சாந்தி எனப்பொருள். இந்த மார்க்கத்தில் ஏது வன்முறை,எங்கிருந்து முளைத்தது தீவிரவாதம்?.மக்கா வெற்றியின் போது பெருமானார் நினைத்திருந்தால் சகல இறை நிராகரிப்பாளர்களையும் கொன்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அனைவரையும் நபியவர்கள் மன்னித்தார். கருணை, காருண்யம்,தனிப்பட்ட மதச்சுதந்திரம் என்பவற்றுக்கு முக்கியமளித்து வரலாற்றுச் சாதனை படைத்த,இச்சரித்திரத்தை இந்த இளைஞர்களின் அறிவிலிருந்து விலக்கிய மூளைச் சலவையாளிகளின் பின்புலத்தை அறிவதில் அரசாங்கம் மட்டுமன்றி முழு முஸ்லிம்களும் ஆர்வமாயுள்ளனர்.அரபு நாடுகளில் நிலவும் பரம்பரை மன்னர் ஆட்சியைக் கவிழ்க்க மதவாதம் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதா?அங்கிருந்து இயங்கும் சில அமைப்புக்களின் வாடைகளால் இவ் விளைஞர்கள் கவரப்பட்டனரா? அல்லது கவர வைக்கப்படுகின்றனரா? இவற்றைத் தெளிவு படுத்தி உலமாக்கள் ஜும்ஆப் பிரசாரங்கள் செய்ய வேண்டும்.சிங்கள ஊடகங்களில் கட்டுரைகள் எழுத வேண்டும். இல்லாவிட்டால் சிங்களத்தில் முஸ்லிம்களுக்கு தனியான பத்திரிகைகள் வெளியாக வேண்டும். இதுவே இன்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்குத் தேவைப்படும் அவசர நிவாரணி.முக்கியமாக அரசியலுக்காக முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் கிளறும் முஸ்லிம் கட்சிகளின் இன உணர்வுக் கோஷங்களும் கைவிடப்பட வேண்டும்.

2 comments:

  1. Mashallah. We written article . This is 100% true that we have repeatedly over step the limits in Sri Lanka. Islamic groups failed to appreciate our freedom. We began to fight and talk as if we live in a Muslim country.. know our limits and know our context before we speak about Islamic teaching.. Islam of Saudi is not 100% fitting to our context.. we can not fight for minor issue like this brother mentions.

    ReplyDelete
  2. Well written article. Some of our ulemas are so short sighted and work with inferior agendas. If ACJU doesn't contain them actively, (not on words only) this will lead to worse situations

    ReplyDelete

Powered by Blogger.