Header Ads



மதூஷின் துப்பாக்கிதாரியின் வீடு சுற்றிவளைப்பு - 700 கோடி ரூபாய் மாணிக்கக்கல்லை கொள்ளையிட சென்றவர்

துபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதூஷின் குற்றச்செயல்களில் துப்பாக்கிதாரியாக செயற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரின் வீடு, மாத்தறை பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஹக்மன பாதெனிய பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் லொக்கு ஹக்குரகே சாந்தவை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு நடாத்தப்பட்ட சந்தரப்பத்தில் சந்தேகநபர் வீட்டில் இருக்கவில்லை.

சமந்த புஷ்பகுமார எனப்படும் குறித்த சந்தேகநபர் சப்புகஸ்கந்த இராணுவ முகாமுடன் இணைந்த வகையில் சேவையாற்றினார்.

பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பில் குறித்த வீட்டில் இருந்த இராணுவ சீருடைகளும் ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 21 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, வீட்டிலிருந்த சமந்த புஷ்பகுமாரவின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாய் வௌிநாடு செல்வதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

மாகந்துரே மதூஷின் உதவியாளரான அவர், பன்னிப்பிட்டியவில் 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை கொள்ளையிடுவதற்காக சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இராணுவச் சிப்பாயின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கைவிலங்கு பன்னிப்பிட்டியவில் வர்த்தகர் ஒருவரை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.