February 25, 2019

மதுஷ் குரூப்புடன் முஸ்லிம் அரசியல்வாதிக்கு தொடர்பா..? ஸ்பெஷல் ரிப்போர்ட் -20

மதுஷ் குரூப்புடன் கொழும்பில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. அவர் பற்றி ஆராயப்படுவதால் மேலும் விபரங்களை வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் விரைவில் ஒரு க்ளூ தருவேன்...
இதற்கிடையில் டுபாயில் கைது செய்யப்பட்ட மதுஷின் சகாக்கள் பலர் சிறையில் இருந்து உறவினர்களிடம் பேச வேண்டுமென கூறி அவர்களின் சகாக்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளமையும் இப்போது அறியக்கிடைத்துள்ளது.
அப்படி பல முக்கியஸ்தர்கள் தமது சகாக்கள் பலருடன் பேசினாலும் மாக்கந்துர மதுஷ் அப்படி தொடர்பு கொண்டதாக தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தேடிய பொலிஸாருக்கு இன்னுமொரு தகவல் கிடைத்தது.
அதாவது , மாக்கந்துர மதுஷ் எப்போதும் யாரின் தொலைபேசி இலக்கங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல் புத்தகம் ஒன்றின் உதவியுடன் தான் தொலைபேசி எண்களை அதில் குறிப்பிட்டு தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்..
கைத்தொலைபேசியில் விபரங்களை சேமித்து வைத்து அது பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் ஆபத்து - அடிக்கடி புதிய புதிய தொலைபேசி இலக்கங்களை தனது சகாக்கள் பயன்படுத்துவதால் புத்தகம் ஒன்றில் குறிப்பிடுவது நல்லது - புத்தகத்தில் தொலைபேசி இலக்கங்களை எழுதும்போது தனக்கு மட்டுமே விளங்கும் பல குறியீடுகளை வைத்து எழுதிக் கொள்வது - பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் கூட அவர்கள் இதனை பெரிதாக எடுக்க மாட்டார்கள் - 
போன்ற பல காரணங்களினால் மதுஷ் அப்படி எழுதிவைப்பதாக தெரியவந்துள்ளது...
அதனால் முக்கியமான பல நபர்களின் தொலைபேசி இலக்கங்களை மதுஷினால் நினைவு கொள்ள முடியாமல் இருக்கலாமென பாதுகாப்பு தரப்பு கருதுகிறது.
ஆனால் அவர் சிலரின் இலக்கங்களை நினைவு வைத்திருந்தாலும் தனது நெட்வெர்க்கை பாதுகாக்க இப்படி பேசாமல் இருக்கலாமென இன்னொரு பாதுகாப்பு தரப்பு கருதுகிறது . உண்மை பொய் பின்னரே தெரியவரலாம்...
நேற்றைய கைது !
நேற்று கொழும்பில் 294 கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டதல்லவா? அது டுபாயில் இருந்து அனுப்பப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அது மதுஷ் தரப்பினால் அனுப்பப்பட்டதா என்பது பற்றி ஆராயப்படுகிறது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் டுபாயில் இருந்து தனது உறவினர் ஒருவரே இதனை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
சொகுசு வர்த்தக கட்டிடங்களின் வாகன தரிப்பிடத்தில் டுபாய் உறவினர் சொல்லும் வாகனங்களை கொண்டு போய் தரித்துவிட்டு வருவதுமட்டுமே தனது வேலை என்றும் அதற்காக பணம் கிடைக்கிறதேயொழிய அதற்கப்பால் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாதென அந்த கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மதுஸுக்கு எதிரான கோஷ்டி இதனை திட்டமிட்டு அனுப்பி இதனை மதுஷ் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அவரை மேலும் இறுக்கும் பொறியாகவும் இருக்கலாமென இன்னுமொரு தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது..
பாகிஸ்தான் தாவூத் இப்ராகீம் தரப்புடன் கொடுக்கல் வாங்கல் காரணமாக மதுஷ் கொண்ட பகைமையே அவருக்கு இப்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது..
இப்போதைய நிலைமை !
மதுஷ் மற்றும் சகாக்கள் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுவும் டுபாய் பொலிஸில் உள்ள நீதிமன்ற தொடர்பாடல் அதிகாரி தீர்மானித்தால் மட்டும். ஏனெனில் விசாரணைகள் - மருத்துவ ஆய்வு அறிக்கைகள் எல்லாம் சரியாக வந்துள்ளதா என்பதை அவர் பூரணமாக ஆராய்ந்த பின்னரே அதனை தீர்மானிப்பார்.
மறுபுறம் அன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தங்களது நிலைப்பாட்டை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும். அங்கு சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதிக்கடிதம் மற்றும் இலங்கையில் உள்ள டுபாய் தூதரகத்தில் அதனை உறுதிப்படுத்தும் கடிதம் என்பன தேவை.. இப்போதைக்கு அமல் மற்றும் அவரது மகன் நதிமாலுக்கு மட்டுமே அந்த அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளது.
ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை . ஏனெனில் ஏற்கனவே டுபாய் சிறைகளில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 600 பேர் நீண்டகாலம் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. யாரின் அவசரத்துக்கும் ஏன் இலங்கை அரசின் அவசரத்துக்கு கூட தனது விசாரணைகளை டுபாய் துரிதப்படுத்தாது .
போதைப்பொருள் தட்டுப்பாடு..!
இவ்வருடம் இதுவரை 520 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதால் இலங்கை போதைப்பொருள் சந்தையில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கொழும்பில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. இவர்களில் வி வி ஐ பிக்கள் பலர் அடக்கம்.
டுபாயில் கைது செய்யப்பட்ட ஒருவரின் கொழும்பு வீட்டுக்கு சென்ற விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் - சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் உள்ளதை கண்டறிந்து கவலைப்பட்டதாக தகவல்...
இதுதான் இன்றைய நிலைமை...!

-sivaraja-

0 கருத்துரைகள்:

Post a comment