February 24, 2019

இன்று பிறந்தநாள் கொண்டாடவிருந்த மதுஷ், டுபாயில் மரண தண்டனை விதிக்கப்படுமா..? ரிப்போர்ட் 19

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன..
சில அரச அதிகாரிகளை நேரடியாக டீல் பண்ணிய மதுஷின் சகாக்கள் காணி அபகரிப்பு மற்றும் இதர பல சட்டவிரோத செயற்பாடுகளுக்காக அந்த அதிகாரிகளை மிரட்டியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன...
அதுவும் இலேசான மிரட்டல்கள் அல்ல...
ஒரு அதிகாரியிடம் அனுமதி ஏதும் கிடைக்காதபட்சத்தில் அவரின் குடும்ப விபரங்களை திரட்டி அதனை சொல்லி அவரை மிரட்டுவது இவர்களின் வேலையாக இருந்திருக்கிறது.
காணி விவகாரம் ஒன்றில் கடும்போக்கை கடைப்பிடித்த அதிகாரி ஒருவரை மிரட்டிய மதுஷின் சகாக்கள் - அவரின் மனைவி வேலைக்கு செல்வது முதல் பிள்ளைகள் பாடசாலை சென்றுவருவது வரை அனைத்து விபரங்களையும் சொல்லி - குறிப்பிட்ட விடயத்துக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் பல விளைவுகளை சந்திக்க வேண்டி வருமென எச்சரித்துள்ளனர்.
இப்படி பல விடயங்கள் பொலிஸ் விசாரணைகளில் வெளிவந்துள்ளன.
முரண்பாடான தகவல்கள் !
மதுஷ் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அரச உயர்மட்டத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்போது நடக்கும் விசாரணைகளை குழப்பும் நோக்கம் - பதவியுயர்வு பிரச்சினைகள் - மற்றும் முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சிகள் இதன் பின்னணியாக இருக்குமென அரசு கருதுவதாக தெரிகிறது...
மதுஷிடம் ஆயிரம் கோடி ரூபா பணம் இருந்தமை - டுபாய் செல்ல அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்பட்டமை - டீ ஐ ஜி லத்தீப் டுபாய் சென்றமை உட்பட்ட விடயங்கள் அப்படியான பின்னணியில் வந்த போலி செய்திகளே... இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் இருப்பதாக ஜனாதிபதிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
டுபாய் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை சொல்லும் வரை மதுஷ் விடயத்தில் இலங்கை ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நடத்தும் விசாரணைகளின் போது கிடைக்கும் சில தகவல்களை பரிமாறுகின்றபோது - தொலைபேசி அழைப்பு விபரங்களை வைத்து இலங்கை இப்போது விசாரணைகளை செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை தான். அப்படியில்லாமல் போதைப்பொருள் பாவித்திருப்பது தெரியவந்தால் நீண்ட கால சிறைத்தண்டனை கிடைக்கும். அந்த காலப்பகுதி முடிந்து அல்லது அந்த காலப்பகுதிக்குள் பொது மன்னிப்பு கிடைத்தால் இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள். இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதன் பின்னர் இலங்கை தனது விசாரணைகளை தொடரலாம்.
மதுஷின் கெட்டகாலம் !
மாக்கந்துர மதுஷின் பிறந்த தினம் இன்றாகும் . 1979 ஆம் ஆண்டு அவர் பிறந்தார். பிறந்த நாளையொட்டி இன்றும் அவர் விசேட விருந்துபசாரம் ஒன்றை டுபாயில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரின் கைதை ஒட்டி எல்லாமே புஷ்வாணம் ஆகியது.
உண்மையில் இந்த பிறந்த நாள் நிகழ்வில் இலங்கையில் இருந்து சென்று பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவிருந்தனர். இந்த விருந்து நிகழ்வினை இலக்கு வைத்தே இலங்கை அரச புலனாய்வுத்துறை செயற்பட்டு வந்தது. ஆனால் அதற்குள் எல்லாரும் ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டதால் தாமதிக்காமல் முன்கூட்டி டுபாய்க்கு அறிவித்து வலையில் சிக்க வைத்தது இலங்கை.
தனுசு ராசி கும்ப லக்கினத்தினை கொண்ட மதுஷுக்கு கடந்த பல மாத காலங்கள் முதலாக நேர காலம் சரியில்லை என்று அவரது சோதிடர்கள் தெரிவித்திருந்ததால் அதற்கமைய பரிகார பூஜைகள் கூட நடந்திருக்கின்றன. அதற்கு மேல் அவரது நண்பர்கள் கதிர்காமத்தில் விசேட பூஜைகளையும் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது.
நேற்றைய பதிவில் கணனி விற்பன்னர் ஒருவரின் உதவியுடன் இரத்தினக்கல் கொள்ளை நுட்பமாக நடந்தது பற்றி எழுதி இருந்தேன். மதுஷின் தந்தை இறந்த பின்னர் முழு இறுதிக்கிரியையும் நேரடியாக ஒளிபரப்பு செய்து மதுஸுக்கு காட்ட ஏற்பாடு செய்தவரும் இவர்தான்.
இரத்தினக்கல் கொள்ளையை மொரட்டுவயில் இருந்து மொபைல் செயலி ( ஆப் ) மூலம் பார்த்து இரத்தினக்கல் மிஸ் ஆகி எங்கும் சென்றுவிடக் கூடாதென நேரடியாக இவர் கவனித்துக் கொண்டிருந்ததையும் விசாரணைகளில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளதை குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ் முக்கியஸ்தர்கள் !
மதுஷ் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி சென்று பின்னரே டுபாய் செல்கிறார்.
இந்தியாவில் இருந்து ரகு என்பவர் அனுப்பிய படகில் மதுஷ் இந்தியா சென்றுள்ளார். அந்த படகில் செல்லும் வரை அரசியல்வாதி ஒருவரின் வாகனத்தில் மதுஷ் சென்றுள்ளமை அறியப்பட்டுள்ளது. அந்த அரசியல்வாதி பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மறுபுறம் மாக்கந்துர மதுஷின் வட மாகாணத்திற்கான போதைப்பொருள் விநியோகத்திற்கு பொறுப்பாக செயற்பட்டவர் என்று கூறப்படும் துஷி எனப்படுபவர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொட்டு அம்மானின் உறவினர் என்று சொல்லியே மாக்கந்துர மதுஷிடம் நெருங்கியுள்ள இவர் அரச புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளமையும் - ஜனாதிபதி மைத்திரியின் வடக்கு பிரதேச பயணங்களின் போது அவற்றில் கலந்து கொள்ள முயன்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கொக்கெய்ன் போதைப்பொருள் பாவித்த அரசியல்வாதிகள் பலர் இப்போது அவற்றை உடம்பில் இருந்து நீக்கும் வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக தகவல்.
அதிலும் தமிழ் அரசியல்கட்சி ஒன்றின் தலைவர் தமிழ்நாட்டின் சித்த மருத்துவத்தை நாடி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன.
அப்படி செய்த பின்னர் - மருத்துவ பரிசோதனை ஒன்றை இலங்கையில் செய்து போதைப்பொருள் பாவனையில் தாம் ஈடுபடுவதில்லை என்பதை நிருபிக்கவே அவர் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. Sivaraja0 கருத்துரைகள்:

Post a comment