Header Ads



மதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்

- Sivarajah -

மதுஷ் நாடுகடத்தப்படுவாரா?

மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் எல்லோரும் மது அருந்தி – கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் பாவித்து இருந்தமை கண்டிபிடிக்கப்பட்டது.

ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஒன்று உள்ளது. அதாவது புதிய தகவல்களின்படி மதுஷ் – மதுவோ போதைப்பொருளோ அருந்தியிருக்கவில்லையென அறிய முடிகிறது. மது மற்றும் எந்த போதைப்பொருளையும் மதுஷ் இப்போது பாவிப்பதில்லையென்பது கூடுதல் தகவல்.

பாடகர் அமலின் மகன் – மதுஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் மனைவிமார் உட்பட ஆறு பேர் இதனால்தான் விடுவிக்கப்பட்டனர்.

அப்படியானால் மதுஷ் ஏன் விடுவிக்கப்படவில்லை என்று யாரும் கேட்கலாம். அங்குதான் மேட்டரே உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள துபாயில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போதைப்பொருள் இருந்தாலே தண்டனைதான்.

மதுஷ் அந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர். மேலும் போதைப்பொருள் வர்த்தகருமாவார் அங்கு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவும் பெரிது என்பதால், மதுஷ் பிரதான குற்றவாளியாக வட்டமிடப்பட்டுள்ளார்.

எனவே அவர் மீதான விசாரணை நடந்து முடியும்வரை, அவர் நாடுகடத்தப்படும் சாத்தியம் குறைவு என்கின்றன தகவல்கள்.

கறுப்பு ஆடு 

மதுஷின் விருந்து நிகழ்வில் அவர்களுக்கு தெரியாமல், பெரும் அளவிலான ஹெரோயின் உள்ளே வந்தது எப்படி என்பது அவர்களுக்கே தெரியவில்லை. துபாய்  பொலிஸார் அவர்களின் கண்முன் கைப்பற்றியபோதுதான், தங்களுக்குள் இருந்த ஒரு கறுப்பு ஆடு அதனை திட்டமிட்டு வைத்திருந்தது மதுஷ் ரீம் உணர்ந்தது. அப்போது எல்லாமே லேட்.

மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட தினமன்று அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அப்படி கூடுவார்கள் என்று, அவர்களுக்குள் இருந்த புலனாய்வுப் புள்ளி நினைக்கவில்லை.

பிறந்த நாள் நிகழ்வு என்ற பெயரில் எஸ்.ரீ.எஃப் – டீஐஜி லத்தீப்பின் ஓய்வை கொண்டாடுவதே, அவர்களின் மறைமுக திட்டமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

எஸ்.ரி.எஃப் காட்டிய ‘படம்’

எப்படியோ மதுஷ் மற்றும் சகாக்களின் ஒன்றுகூடலை கண்காணித்த புலனாய்வாளர் உடனடியாக கொழும்புக்கு தகவல் கொடுக்க திட்டங்கள் மாறின. முன்னதாக ஒருவரை அல்லது இருவரை துபாய் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யலாம் என நினைத்த இலங்கை விசேட அதிரடிப்படை, தனது திட்டத்தை மாற்றி, இதைப்பற்றி பெரிய ‘படம்’ ஒன்றை துபாய் பொலிஸாருக்கு காட்ட தீர்மானித்தது.

அதற்கமைய அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அந்த இலங்கை புலனாய்வாளர், துபாய் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, சர்வதேச பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரை கூறி – அந்த அமைப்பின் ரகசியக் கூட்டம் ஒன்று நடப்பதாக அறிவித்திருக்கிறார்.

உடனடியாக ‘அலெர்ட்’ ஆகி சுமார் பத்து நிமிட இடைவெளிக்குள், அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அனைவரையும் முற்றுகையிட்டனர். “ஆயுதங்கள் இருந்தால் கீழே வைத்து விடுங்கள்… யாரும் அசையக்  கூடாது” என  உத்தரவிட்டு தேடுதல் நடத்தியபோதே, இவர்கள் தீவிரவாதிகள் அல்லர், ஆனால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என உணர்ந்தனர் துபாய் பொலிஸார்.

உடனடியாக எல்லோரையும் முழந்தாளிடச்  செய்து படம் எடுத்த கையோடு, அனைவரும் தனி அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒருவருடன் ஒருவர் பேச அனுமதிக்கப்படவில்லை. சிலர் விளக்கங்களை கூற முற்பட்டபோதும் அது மறுக்கப்பட்டது. துபாய் பொலிஸ் பிடியில் தானும் தனது சகாக்களும் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள மதுஷுக்கு சில நிமிடங்கள் சென்றதாக, அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு – இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்துள்ளது.

10 மில்லியன் டொலர் பேரம்

மதுஷ் மற்றும் சகாக்களை மீட்க பல நாடுகளில் இருந்தும் பிரபல சட்ட நிறுவனங்களும் சட்டத்தரணிகளும் முயற்சிகளை எடுத்துள்ளன.

அதற்றுக்கிடையில் இவர்களை வெளியில் கொண்டுவர பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 178 கோடி ரூபாய்) ஒரு தரப்பு துபாய் பொலிஸாருக்கு வழங்க முயன்று மாட்டிக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்

இதற்கிடையில் துபாயில் கைது செய்யப்பட்ட ஜங்காவின் தந்தையின் சகோதரியின் மகனான விசேட அதிரடிப்படையின் சிப்பாய் ஒருவர், அண்மையில் கைது செய்யப்பட்டார் அல்லவா? அவரிடம் இருந்து சீருடைகள் பலவும் மீட்கப்பட்டதே. அவரின் இல்லத்தில் இருந்து பல புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளன. நவீன துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது பற்றி அரபு மொழியில் உள்ள அந்த புத்தகம் துபாயில் இருந்து வந்ததாக அறியப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த நவீன ஆயுதங்கள் எங்கே என்று தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

கப்பம் கொடுத்த வர்த்தகர்கள்

“மதுஷ் பெயரில் கப்பம் கேட்பார்கள். மாதாந்தம் ஐந்து முதல் பத்து லட்சம் வரை கொடுத்து வந்துள்ளோம். உயிர்ப்பயம் காரணமாக வெளியில் சொல்லவில்லை. முறையிடவில்லை” என்று, அந்த வர்த்தகர்கள் பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

துபாயில் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் இந்திக்க குமார குறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதுஷின் இரண்டாவது மனைவி பெயரில் இலங்கையில் உள்ள சொத்துக்கள் மற்றும் அவற்றை பராமரிக்கும் பினாமிகள் குறித்தும் பல விபரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்.

No comments

Powered by Blogger.