Header Ads



மதுஷ், ஸ்பெஷல் ரிப்போர்ட் 12

- Siva Ramasamy -

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த 70 ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளில் சுமார் 20 பேர் அமைச்சர்கள் - பிரதியமைச்சர்கள் மட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அமைச்சர்மார் மற்றும் எம் பிக்களின் பெயர் விபரங்கள் இருந்தாலும் அவற்றை பகிரங்கமாக சொல்ல முடியாதுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் டுபாய்க்கு சென்றுள்ளார். அங்கு அவர் மதுஷை ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார். அது தொடர்பான விபரங்கள் ஆதாரங்களுடன் பொலிசாரிடம் கிடைத்துள்ளது.
கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட எம் பி ஒருவரும் மதுஷ் தரப்புடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனவும் அவர் நேரடியாக அல்லாமல் இன்னுமொரு தரப்பின் ஊடாக தொடர்புகளை வைத்திருந்தாரென்றும் அறியப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் முக்கியஸ்தர்..!

மத்திய மலைநாட்டின் அரசியல் கட்சியொன்றின் முக்கிய தலைவர் குறித்து நேற்று கூறியிருந்தேன். தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த எவரும் அல்ல.

ஆனால் இதர கட்சியொன்றின் தலைவரான அவர் டுபாய்க்கு அடிக்கடி கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டும் தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டும் சென்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த தலைவருக்கு ஓமானில் உறவினர்கள் இருப்பதாகவும் அந்த உறவினர்கள் பெயரில் சொகுசு வீடு இருப்பதால் அது எப்படி வந்தது என்பது பற்றியும் தீவிரமாக ஆராயப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட அவர் ஓமானுக்கு சென்று வந்திருக்கிறார்.

இந்த தமிழ் அரசியல் தலைவரின் மிக நெருங்கிய சகா எனப்படும் ஒருவர் - அதாவது தலைவரின் பணியாளர் குழாமில் கடமையாற்றும் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வீடு வாங்கியமை எப்படி என்பது குறித்தும் பொலிஸாரின் கவனம் திரும்பியுள்ளது...
முக்கிய பல விடயங்களுக்கு இந்த தலைவரின் கைத்தொலைபேசியை பாவித்துள்ள அவரின் நெருக்கமான சகாக்கள் தலைவருக்கு தினமும் “வேண்டிய” சிலவற்றையும் டுபாய் நெருக்கத்தை பயன்படுத்தி பெற்றுக் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
மதுஷ் கைது செய்யப்பட்ட கையோடு பல விடயங்களை மூடிமறைத்துள்ள தலைவரின் சகாக்கள் , சமூக ஊடகங்களில் தலைவரின் டுபாய் பயண படங்களையும் அகற்றியுள்ளதாக அறியமுடிகின்றது..
தலைவரின் இந்த சகாக்கள் எவரும் மலையகத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பது இன்னுமொரு விசேட அம்சமாகும்..
மதுஷை தொடர்பு கொண்ட அரசியல் பிரமுகர்கள் எல்லோரும் “இமோ” தொடர்பு ஊடாகவே பேசியுள்ளமை தெரியவந்துள்ளது.
மதுஷின் பல விடயங்கள் அம்பலம்...
மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்திய விசாரணைகளில் அவரின் மிகப்பெரிய கொள்ளைச்சம்பவம் ஒன்றும் வெளிவந்துள்ளது.
பன்னிப்பிட்டியவில் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி தமிழ் சினிமா படப்பாணியில் கொள்ளையிடப்பட்ட 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுஷின் அனைத்து கொள்ளைச் சம்பவங்களும் பாதுகாப்பு படையினரின் சீருடையில் தான் நடந்துள்ளன. இதுவும் அப்படித்தான் பொலிஸ் சீருடையில் வந்தவர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இரத்தினக்கல்லை கொள்வனவு செய்யும் ஒருவராக நடித்து - இலங்கை வந்தவர் அவுஸ்திரேலிய பிரஜையாவார். அவர் அதற்காகவே இலங்கை வந்துள்ளார். இந்த சீனுக்காக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் கொடுக்கல்வாங்கல் நடந்துகொண்டிருந்தபோது ,மதுஷின் நெருங்கிய சகாவான மாத்தறை மல்லி உட்பட்ட ரீம் பொலிஸ் சீருடையில் புகுந்து இரத்தினக்கல்லை கொள்ளையிட்டு பறந்தது. பின்னர் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய பிரஜை ஏழாம் திகதி இங்கிருந்து புறப்பட்டு சென்றார். மதுஷ் தொலைபேசி ஊடாக இந்த கொள்ளைக்கான ஓடர்களை கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
இதில் உள்ள இன்னுமொரு முக்கிய மேட்டர் இந்த இரத்தினக்கல்லை இங்கிருந்து டுபாய்க்கு கொண்டு சென்று மதுஷ் கையில் கொடுத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர் யார் தெரியுமா?
அண்மையில் டுபாயில் சிக்கிய நடிகர் ரயன் தான் அவர். ஏனெனில் நவம்பர் எட்டாம் திகதி டுபாய்க்கு சென்றுள்ளார் ரயன் . அப்போது இந்த கொள்ளை தொடர்பில் இலங்கையில் மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவால் நடந்த விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டபோது மதுஷ் யாரென்றே தெரியாது என மறுத்திருந்த ரயன் இப்போது பொறுத்த நேரத்தில் சிக்கியுள்ளார்..அப்போது அவர் டுபாய்க்கு வந்து சென்ற இடங்களை டுபாய் பொலிஸ் தற்போது புட்டுப்புட்டு வைத்திருப்பதால் ரயன் செய்வதறியாதுள்ளரென சொல்லப்படுகிறது. பாடகர் அமல் பெரேராவும் இதில் சிறிது சம்பந்தப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது..
அதேபோல பல இரத்தினக்கல் வியாபாரிகளிடம் பல கொள்ளைகளும் கப்பம் கோரல்களும் இடம்பெற்றுள்ளமை அறியவந்துள்ளது.
இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு இரத்தினக்கல் வர்த்தகர் கொழும்பில் தஞ்சமடைந்து பாதுகாப்புடன் வாழ்க்கை நடத்தி வருவது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்போது என்ன நடக்கிறது..
கைது செய்யப்பட்டுள்ள மதுஷ் மற்றும் சகாக்கள் அனைவரின் தலைமயிர் கட்டையாக வெட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இலங்கையில் இருக்கும் அவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச சிறிது நேரம் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அவை கண்காணிக்கப்படுகின்றன. என்ன பேசப்படுகிறது என்பதை நுணுக்கமாக ஆராயும் டுபாய் அதிகாரிகள் மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக அவை தொடர்பில் அறிக்கையை பெறுகின்றனரென சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டுள்ள ஜனாதிபதி மைத்ரி - இலங்கைக்கான டுபாய் தூதுவருடன் இதுபற்றி நீண்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். தூதுவர் நாட்டில் இல்லாதபடியால் இவ்வாறு தொலைபேசி ஊடாக பேசியுள்ள மைத்ரி , டுபாய் விவகாரம் மற்றும் இதர விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். தூதுவர் நாடு திரும்பியவுடன் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ளது.
“டுபாய் குற்றத் தடுப்பு பணிப்பாளர் அந்நாட்டின் 1995 ஆம் இலக்க 14 ஆவது சட்டப்பிரிவின் 39 ஆம் சரத்துக்களின் கீழ் விசாரணை நடத்துகிறார்.மதுஷ் அல்லது அவரது சகாக்கள் போதைப்பொருள் பாவித்திருந்தது அறியப்பட்டால் மரணதண்டனை தான். ஆனால் அப்படியில்லாமல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தால் அது முடிந்த பின்னரே அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்..” என்று ஜனாதிபதியிடம் டுபாய் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் தனது தாய் தந்தை நினைவாக கோடிக்கணக்கில் பெறுமதியான நினைவு மண்டபம் ஒன்றை தென்னிலங்கையில் கட்டிக்கொடுத்துள்ளார் மதுஷ்.. அதேபோல் தனது தந்தையின் இறுதிக்கிரியை நடந்தபோது ஹெலிகொப்டரில் மலர் தூவிய காட்சி முதல் பூதவுடல் தகனம் செய்யப்படும் வரை நவீன தொழிநுட்ப வசதிகளை கொண்டு நேரலையில் பார்வையிட்டாராம் மதுஷ்...
இப்போது அவற்றை ஒழுங்கு செய்தவர்களை தேடுகிறது பொலிஸ்...
அதேபோல் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் 20 ற்கும் மேற்பட்டோர் மதுஷுடன் தொடர்பில் இருந்து சிக்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.