January 03, 2019

ஒரு குடம் தண்ணீருக்காக போராடும், உடதலவின்ன ரடகஹவத்த மக்கள்

எனது மயிர்கள் நரைத்தும், 65 வயதாகியும் நடையாகவே சென்று ஒரு குடம் தண்ணீரைப் பெறவேண்டிய அவலம் என் மரணத்திற்கு முன்னாவது மாறுமா? இதற்கான  தீர்வுதான் என்ன? என்று உடதலவின்ன ரடகஹவத்தையைச்   சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான  “உம்மு ஜிஹான்” வருந்துகிறார்.

நீர் இணைப்பைப் பெறுவதற்காக ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் தலா 10,000 ரூபா வீதம் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபைக்குச் செலுத்துவதற்காக அக்கிராமத்தின் சங்கங்களில் ஒன்றான ‘தியவர பிரஜாமுல சங்விதான’ என்ற சங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

அது சம்பந்தமாக அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவ்வமைப் பின் தலைவர் ஜீ. வீரசிங்க தெரிவிக்கையில்,  “வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்கால இலங்கையின் அரசியல் சீரற்றதன்மை காரணமாக இவ்வேலைத் திட்டம் நடைபெறவில்லை. மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பணத்தின் மூலம் தேவையான நீர்க் குழாய்கள், கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் ஆரம்பிக்கவிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

குடிப்பதற்கு மட்டும் ஒரு குடம் தண்ணீரைப் பெறுவதற்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று இதே போல் ஏழு தடவை நீரைப் பெற நடக்க வேண்டிய அவல நிலை உம்மு ஜஹானுக்குப் போலவே ஏனைய ரடகஹவத்தை மக்களும் தண்ணீரைப் பெற அவதிப்படுகின்றனர். மற்றும் மழை நீரையும் வீணாக்காமல் சேமித்து அன்றாடத் தேவைகளுக்கு உபயோகப் படுத்துகின்றனர்.

இவ்வூரிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அயல் கிராமங்களான மீகமன சந்தி மற்றும் வியனமுல்ல போன்ற கிராமங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் தமக்கான நீர் கிடைக்கவில்லையென இக்கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

மேலும் குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கான நீர் கொஸ்வத்த சமுர்த்தி கிணற்றிலிருந்து பெறப்பட்டு ஒரு குழாய் மூலமே முழுக் கிராம மக்களுக்கும் நீர் விநியோகிக்கப்படுகின்றது என அக்கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜானியா கூறினார்.

இது குறித்து கலதெனிய பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவகரிடம் தொடர்பு கொண்டபோது, “ஐம்பது குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் ரடகஹவத்த எனும் பிரதேசத்திற்கு பொல்கொல்ல அணையிலிருந்து தொரகமுவ வீதி வழியாகவே நீர் விநியோகிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், அப்பகுதி மேடாக இருப்பதனால் நீர் மேல்நோக்கிச் செல்வது சிரமமாக இருக்கின்றது. அத்துடன் எமது பிரதேச சபை உறுப்பினர் அ.M.ஒ.M. நவ்பர் அவர்களிடமும் இது குறித்து முறையிட்டிருந்தோம். அவரும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். இருப்பினும் எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் சுகாதார மத்திய நிலையம் மற்றும் கல்விக் காரியாலயம் சார்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து “கொட்டாஸ தினய” என பிரதேச சபையில் கலந்து ரையாடல் நடைபெறும் சந்தர்ப்பத்தில் நீரில்லாத பிரச்சினைகள் பற்றிப் பேசிய போது நீர் விநியோக வண்டி மூலம் மட்டுமே அக்கிராமத்திற்கு நீர் பெற்றுக் கொடுத்தனர்” என அவர் தெரிவித்தார்.

குழாய் நீர் மற்றும் தண்ணீர் தாங்கியிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு குடும்பத் திற்கு ஆறு கொள்கலன்களில் மட்டுமே நீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என திருமதி ஜானியா கூறுகிறார்.

இது தொடர்பாக பிரதேச சபை உறுப்பினரான அ.M.ஒ.M. நவ்பர் என்பவ ருடன் தொடர்பு கொண்டபோது அவர் இது குறித்து விளக்கமளிக்கையில், “நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பிடம் மனுத்தாக்கல் செய்திருந்தேன். 2016 ஆம் ஆண்டு ரடகஹவத்த பிரதேசத் திற்கு நீர் விநியோகிப்பதற்காக மதிப்பீடு செய்திருந்தனர். இருப்பினும் அப்பிர தேசம் மேடாகக் காணப்படுவதால் நிதி ஒதுக்கீடு பற்றாக் குறையாக இருக்கின்றது. மேலும் மீண்டும் ஒரு மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் தற்கால அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இத்திட்டம் நடைபெறுவது பற்றி நம்பிக்கை குறைவாகக் காணப்படுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இலங்கையின் மத்திய மாகாணத்தில் ஊடகத்துறையை வளர்க்கும் நோக்கில் அமெரிக்க நிதி உதவியுடன் நடத்தப்பட்ட பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை.

பங்களித்தோர் – எம்.எம்.ஏப் ஸீனியா, எம்.வை.ரிகாஸ், பீ.டப். சதர்ஷினி,எம்.ஜே.எம்.ஸூபியான், என்.ரசிகுமார், பஸ்னா பாயிஸ், அப்துல் ரஹீம்

0 கருத்துரைகள்:

Post a Comment