Header Ads



மனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்

மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாக்கும் முகமாகவே எழுத்துமூலமான அறிவிப்பு வழங்கப்பட்டது. 

தவிரவும் எழுத்துமூல அறிவிப்பு நேர்மையாக மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றல்ல. தனிப்பட்ட ரீதியில் சு.கவில் மஹிந்த அணியினர் தற்போதும் உள்ளனர் என வலியுறுத்திக் குறிப்பிட்டு தான் முட்டாளாக முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஒக்டோபர் 26 ஆம் திகதி உங்களது கட்சித்தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவை பற்றிக் கூறுங்கள்?

பதில்:- கட்சி ரீதியான முடிவைக் கேட்கிறீர்களா? இல்லை தனிப்பட்ட ரீதியில் கேட்கிறீர்களா?

கேள்வி:- நான் உங்களுடைய கருத்துப் பற்றியே கேட்டேன்?

பதில்:- தனிப்பட்ட ரீதியில் அந்த தீர்மானத்தினை நான் விரும்பவில்லை. மேலும் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமும் ஜனாதிபதியுடன் இணைந்து அன்று நான் எடுத்த தீர்மானத்தின் பிரகாரமும் மேற்படி தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

கேள்வி:- இவ்வாறான தீர்மானம் எடுத்தமை தொடர்பில் நீங்கள் ஜனாதிபதி மைத்திரியுடன் கலந்துரையாடினீர்களா?

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை முன்கூட்டியே அறிந்திருந்தீர்களா? 

புதில்:- இல்லை

கேள்வி:- அந்த நிகழ்வில் தாங்களும் பங்கேற்றிருந்தீர்களே?

பதில்:- அன்றையதினம் நானும், மஹிந்த அமரவீரவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்காகச் சென்றிருந்தோம். அச்சமயத்தில் தான் பதவிப்பிரமாண விடயத்தினை அறிந்துகொண்டோம். அதனையடுத்து அந்நிகழ்வில் பங்கேற்க வேண்டியதாயிற்று.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து பயணிப்பது பற்றி?

பதில்:- ஆரம்பமே தோல்வியடைந்து விட்டது.

கேள்வி:- ஆரம்பம் தோல்வியடைந்தாலும் சுதந்திரக்கட்சியும், பொதுஜன முன்னணியும் கூட்டிணைவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதே?

பதில்:- இருதரப்பினரும் இணைவது பற்றிய விடயம் தற்போது வரையில் கலந்துரையாடலில் தான் உள்ளது.

கேள்வி:- நீங்கள் இவ்வாறு கூறினாலும் சுதந்திரக்கட்சியும், பொதுஜன முன்னணியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்று அமைப்பதென தலைமைகளால் இறுதி செய்யப்பட்டுள்ளதே?

பதில்:- அவ்வாறில்லை. உங்களுக்கு முக்கியமானதொரு விடயத்தினைக் கூற விழைகின்றேன். ஒக்டோபர் 26ஆம் திகதி வரையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதை நானே பகிரங்கமாக அதிகளவில் வலியுறுத்தி வந்திருந்தேன். ஆனால், தற்போது பொதுஜன முன்னணியுடன் கைகோர்த்த பின்னர் அதற்கான எதிர்க்கருத்துக்கள் பொதுஜன முன்னணி தரப்பிலிருந்தே வெளிப்பட ஆரம்பித்துள்ளன. ஆகவே எதிர்காலத்தில் அவ்விடயம் எந்த தரப்பினரின் பக்கம் திரும்பும் என்பதை தற்போது கூறமுடியாது.

கேள்வி:- தங்கள் தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தில் இணைவதாக பேசப்படுகின்றதே?

பதில்:- நாங்கள் 21பேரும் ஆளும் தரப்புடன் இணைந்துகொள்வது என்ற நிலைப்பாட்டின் ஆரம்பத்தில் தான் உள்ளோம்.

கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் பொதுஜனமுன்னணிக்குச் சென்றுவிட்டதாக நீங்கள் கூறுகின்றபோதும், எதிர்க்கட்சித்தலைவர் நியமனத்தின்போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து அவர் ஐ.ம.சு.மு.இல் நீடிப்பதாக அல்லவா செயலாளர் மஹிந்த அமரவீரவால் எழுத்துமூல அறிவிப்பு சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது?

பதில்:- முழு நாடுமே கண்ணால் கண்ட உண்மை நாம் மறைக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் சு.கவில் இருக்கின்றார்கள் என்று கூறி நாம் முட்டாள்களாக முடியாது. மனச்சாட்சிக்கு விரோதமாக எங்களால் எப்படி அவர்கள் சு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்.

கேள்வி:- உறுப்புரிமையை பாதுகாப்பதற்காக அவ்வாறு எழுத்துமூலமான உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அவ்வாறாயின் எதிர்கட்சித்தலைவர் பதவி அவ்வாறான ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது? 

பதில்:- பெரும்பான்மை உறுப்பினர்கள் அவர்களுக்கு காணப்பட்டாலும் பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றிருப்பதால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை அவர்களுக்கு வழங்காது, சுதந்திரக்கட்சியில் உள்ள 21பேர் கொண்ட அணிக்கே வழங்கப்பட வேண்டுமெனக் கோரியிருந்தோம். ஜனாதிபதி மைத்திரிபாலவும், அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்றே ஏகோபித்து முன்மொழிந்திருந்தோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கேள்வி:- ஏகோபித்த முடிவு பின்னர் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

பதில்:- எவ்வாறு அந்த முடிவு மாற்றப்பட்டது என்பதை தான் நாங்களும் தற்போது வரையில் சிந்திக்கின்றோம்.

கேள்வி:- மீண்டும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பளராக களமிறங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதும் உள்ளீர்களா?

பதில்:- சுதந்திரக் கட்சியின் சார்பில் அவர் மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளார். ஆகவே, பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே தற்போது வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஆனாலும் அத்தரப்பினர் வேட்பாளர் குறித்து தெளிவான கருத்துக்களை கூறுவதாய் இல்லை. குமார வெல்கம போன்றவர்கள் ஜனாதிபதி மைத்திரி எவ்வளவு காலம் எங்களுடன் இருப்பாரோ என்ற தொனியில் சந்தேகக் கருத்துக்களை முன்வைப்பதானது அவரை வேட்பாளராக முன்மொழிவார்களா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.