Header Ads



நாட்டைவிட்டு ரணில் தப்பியோட வேண்டிவரும் - பாராளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பிய வாசுவின் பேச்சு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய வழிமுறை மட்டுமே தற்போது உள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணைக்குழுக்கள் திருத்த சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு குறிப்பிட்டு பேசினார். இதன் போது மன்றில் பேசிய அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பட்டலந்த விசாரணை அறிக்கை என்னவானது. விசாரணை ஆணைக்குழு பரிந்துரைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பிய போது குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் எந்த ஆணைக்குழுவையும் நிராகரிக்கவில்லை. அவர் சாட்சியளித்துள்ளார்.

உங்களின் அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் அமுல்படுத்தப்பட்டன. அத்துடன் பிரதமர் உள்ளிட்டவர்கள் கூட ஆணைக்குழுக்கள் முன்பாக சென்று வாக்குமூலமளித்துள்ளனர்.

மத்திய வங்கிபிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் முன்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட ஆஜராகி வாக்குமூலமளித்தார் என்றார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய வாசுதேவ, பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்தியிருந்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டிருக்குமெனவும் ஆகவே ரணில் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய ஒரே வழிமுறை மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டார்.

இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.