Header Ads



மைத்திரி - சஜித் இடையே உள்ள, கொடுக்கல் வாங்கல் என்ன...?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இருக்கும் கொடுக்கல், வாங்கல் என்ன என்பது குறித்து முழு நாடும் கேள்வி எழுப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்சவும் ,மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செயற்படுவதாக அனைவரும் எண்ணுவதால், மைத்திரி - சஜித் இடையிலான கொடுக்கல், வாங்கல் என்ன என்று மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்மையில், ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிரில், ஜனாதிபதி, கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவற்றை அங்கீகரிப்பது போல், சஜித் பிரேமதாச அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வாறு அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை புகழ்ந்து பேசுகிறார்.

அண்மையில் ஒரே காரில் ஜனாதிபதியும், சஜித் பிரேமதாசவும் களுகங்கை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு சென்றதுடன் இருவரும் ஒருவரை ஒருவர், புகழ்ந்து பேசுகின்றனர்.

இவற்றை எம்மால் பேசாமல் இருக்க முடியாது. இணைந்து ஒரு பயணத்தை செல்ல வேண்டுமாயின் சரியான தீர்மானத்தில் இருந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க, இவை எமக்கு புரியாமல் இல்லை, நன்றாக புரிகிறது. கூற வேண்டிய நேரம் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.