Header Ads



யாழ் - ஒஸ்மானியாவில் உயர்தரக்கல்வியும், தடைகளும்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப் படும் வரலாற்றுத் துரோகம்  நிகழ்வதற்கு முன்னரான காலப் பகுதிகளில் ஒஸ்மானியாவின் கல்வி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. 

1963 இல் ஒஸ்மானியா ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் கல்வியில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் முன்னேறத் தொடங்கியிருந்தது. இதற்கு முன்னர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். அவர்களில் பலர் இலங்கையில் முதல் முஸ்லிம் என்ற சாதனைகளுக்குச் சொந்தக் காரர்கள். முதல் முஸ்லிம் விமானி, முதல் முஸ்லிம் சிவில் சேவகர், முதல் முஸ்லிம் பெண்  எம் பி பி எஸ் பெண் வைத்தியர், நீதிபதி என அந்த பட்டியல் நீள்கின்றது. ஆனால் 1900 தொடக்கம் 1970 கள் வரை 15 இக்கும் குறைவான பட்டதாரிகளே உருவாகி இருந்தார்கள். 

1963 இல் ஒஸ்மானியா ஆரம்பிக்கப் பட்ட பின்னர் அங்கு சாதாரணதரம் வரையே வகுப்புகள் இருந்தன. இந்த காலப் பகுதியிலும் ஒரு தேக்க நிலையே காணப்பட்டது. 1974 இக்குப் பின்னர் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்ட பின்னர் கல்வியில் மிகப் பெரிய முன்னேற்றத்தை எமது சமூகம் அடைந்தது. வருடத்துக்கு ஒருவராவது ஒஸ்மானியாவிலிருந்து பல்கலைக்கழகம் சென்றனர். இது 1987 ஆம் ஆண்டு முதல் மேலும் முன்னேற்றத்தைக் கண்டது. 1988 இல் இரண்டு மாணவர்களும் 1989 இல் மூன்று மாணவர்களும் பல்கலைகழகம் புகுந்தனர். ஒஸ்மானியாவில் உயர்தரம் கற்ற நான்கு மாணவர்கள் 1991, 1992 காலப் பகுதியில் பல்கலைகழகம் புகுந்தனர்.  விளையாட்டுத்துறையில் மட்டும் பிரகாசித்து வந்த ஒஸ்மானியா 1980 களின் கடைசிப் பகுதியிலும் கல்வியிலும் பிரகாசிக்கத் தொடங்கியது. 

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்கள் பல்வேறு தடைகளை எதிர் நோக்கி வருகின்றனர் என்பதை மக்கள் அறிவார்கள். மீள்குடியேற விரும்பும் பல குடும்பங்கள் உயர்தர வகுப்பு சோனகதெருப் பிரதேசத்தில் கிடைக்காமையை காரணம் காட்டியே மீள்குடியேற்றத்தை பிற்போட்டு வருகின்றனர்.  எனவே இது சம்பந்தமான ஆரோகியமான திட்டமொன்றைத் தீட்டி நடைமுறைப் படுத்த வேண்டியது ஒஸ்மானியாவில் கல்வி கற்ற  முன்னாள் மாணவர்களினதும்  சமூகத்தின் மீள்குடியேற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும். 

ஒஸ்மானியாவில் உயர்தர வகுப்பு?

ஒஸ்மானியாவில் உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதற்காக சில ஆண்டுகள் முயன்றும் மாணவர் தொகைப் பற்றாக்குறையால அம்முயற்சி கைகூடாமல் போய்விட்டது. தற்போதைய அதிபர் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். 

ஒஸ்மானியாவில் உயர்தர வகுப்புகள் ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் அதற்கான தடைகள் சம்பந்தமாகவும் அதன் அதிபர் ஜனாப் சேகு ராஜித் அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் பின்வரும் விடயங்களை தெரிவித்தார். 

தற்காலத்தில் ஒரு சமூகத்தின்  வளர்ச்சி என்பது அந்த சமூகம் கல்வித்துறையில் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றது என்பதை வைத்துத் தான் கணிக்கப் படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 2003 ஆம் ஆண்டு பாலர் பாடசாலையாக மீள ஆரம்பிக்கப் பட்ட இந்த பாடசாலை தற்போது சாதரண தர வகுப்புகள் வரை கொண்டுள்ளது.  கடந்த 2017 இல் ஒஸ்மானியாவின் மாணவிகள் வேறு பாடசாலையூடாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அதில் மூன்று பேர் பல்கலைகழக அனுமதியைப் பெற்றுள்ளனர். இதுவரை ஒஸ்மானியவில் சாதாரணதரம் எழுதிய 6 பேர் பல்கலைகழகம் சென்றுள்ளனர். ஆனால் ஒஸ்மானியாவில் உயர்தரம் இருந்திருந்தால் அந்தப் பெருமையும் முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு கிடைத்திருக்கும். அதனூடாக மீள்குடியேற்றமும் முன்னேற்றமடைந்திருக்கும் என்று கூறினார்.

மேலும் ஒஸ்மானியாவில் உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதை ஒரு சவாலாக தான் எடுத்துச் செயற்படப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான ஒருவர் எமது பாடசாலைக்கு கிடைத்தமை அல்லாஹ் நம் மீது கொண்ட அன்பினாலாகும் என்பதை நாம் உணர வேண்டும். 

ஆனால் உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதற்கு சில தடைகள் காணப் படுகின்றன. அவற்றை இங்கு விபரிக்க முடியாது, கூடாது. அது ஏன் என்பது சிலருக்கு புரிந்திருக்கும்.  வெளியூர்களில்  சாதரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 15 மாணவர்களுக்கு புலமைச் பரிசில் அளிப்பதனூடாக அவர்களை ஒஸ்மானியாவில் சேர்த்துக் கொள்வதனூடாக  அவர்கள் மூலமாக உயர்தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை வெளிக்கொணர முடியும். 

இதற்காக சாதரணதரத்தில் 4 ஏ  க்கு மேற்பட்ட சித்திகளைக் கொண்ட மாணவர்கள் உள்வாங்கப் பட்டு அவர்களுக்கு உணவு தங்குமிடம் பகுதி நேர வகுப்புகள் என்பன வழங்கதிட்டமிடப் பட்டுள்ளது. 

இது சம்பந்தமான கூட்டங்கள் புத்தளம் நீர்கொழும்பு மற்றும் கொழும்பில் நடத்தவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டங்களுக்கு ஒஸ்மானியாவில் 1963 ஆம் ஆண்டு முதல் கல்வி கற்ற அனைத்து முன்னாள் மாணவர்களையும்  சமூக நலன்விரும்பிகளையும் கலந்து கொள்ளுமாறு அதிபர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கூட்டங்கள் எதிர்வரும் 2019 ஜனவரி 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இன்ஷா அல்லாஹ் நடத்தப் படும். திகதி இடம் நேரம் போன்ற விபரங்கள் பின்னர் அறியத் தரப் படும். எனவே  ஒஸ்மானியாவில் 1963 ஆம் ஆண்டு முதல் கல்வி கற்ற அனைத்து முன்னாள் மாணவர்களையும்  சமூக நலன்விரும்பிகளையும் வேறு பாடசாலைகளில் படித்திருந்தாலும் ஒஸ்மானியாவின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களையும் இந்த திகதிகளை  இக்கூட்டத்துக்கு சமூகமளிக்கும் தினமாக குறித்து வைக்குமாறு அதிபர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றார். 


No comments

Powered by Blogger.