Header Ads



மஹிந்த, பசில், கோட்டாபய எனும் எனும் அபாயங்களுக்கு இவ்வருடத்தில் முடிவு கட்டப்படும்

இந்த நாட்டை ஆட்கொண்டுள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு, இந்த வருடத்தில் (2019) முடிவு கட்டப்படுமென்று, பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  

2015 ஜனவரி 9ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் 4 வருடப் பூர்த்தியன்று, முன்னாள் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இந்த நாடு, முப்பெரும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.  

நாட்டின் பொருளாதாரமானது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீழ்ச்சி காணும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது எனவும் அரசமைப்பின் 19ஆம் திருத்தம் காரணமாக, நாட்டின் முழு நிர்வாகக் கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது எனவும், அரசமைப்புப் பே​ரவையில், நாட்டைப் பிரிக்கும் அரசமைப்பு வரைவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என்ற மூன்று விடயங்களை, தனது அறிக்கையில் தெரிவித்திருந்த மஹிந்த, அவையே இந்த நாடு எதிர்நோக்கியுள்ள அபாய நிலைமைகள் என்றுக் குறிப்பிட்டிருந்தார்.  

மஹிந்தவின் இந்த அறிக்கை தொடர்பில், நேற்றைய தினம் (14), தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மஹிந்தவின் இந்த முப்பெரும் அபாயங்களிலிருந்து, இந்த நாட்டை, இவ்வருடத்தில் மீட்பதாகத் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், இராணுவத் தலைமையகத்தை, வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தைத் தமது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டவர்கள்; இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களைக் கொள்வனவு செய்து, அதற்காகக் கிடைத்தப் பணத்தை, வெளிநாடுகளில் சேமித்து வைத்தவர்கள்; கடற்படையின் பணிகளை, அவன்கார்ட் நிறுவனத்துக்கு வழங்கி, அதனூடாக கோடிக்கணக்கான பணத்தைக் சூறையாடியவர்கள்; நாடொன்றால் தாங்க முடியாதளவு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, இந்த நாட்டைக் கடன் பொறிக்குள் சிக்கவைத்தவர்களே இந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினர் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

தமது குடும்பத்தினர் தவிர்ந்த வேறு எவரும் முன்னேறக் கூடாதென எண்ணி, பிரபுத்துவ அரசியல் நடத்திவரும் மஹிந்த, பசில், கோட்டாபய ஆகிய மூவருமே, இந்த நாட்டுக்கான முப்பெரும் அபாயங்களெனத் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த ராஜபக்‌ஷ அபாயத்திலிருந்து, இந்த நாடு, இவ்வருடம் மீட்கப்படும் என்றும் அதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்ததான பலமிக்கதொரு கூட்டணியொன்று, இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென்றும், அமைச்சர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.    

1 comment:

  1. It seem no one els in SLP or MOTTU party are qualified to be a President, except the Rajapaksa family...

    Really this partly is leading toward family ruling system which simply can be described "Towards Kingship"

    ReplyDelete

Powered by Blogger.