Header Ads



கிழக்கில் தலையெடுக்கும் இனவாதம்

-கலாநிதி றவூப் ஸெய்ன்-

கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதை அடுத்து கிழக்கில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளதாக சில தமிழ் அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிழக்கின் முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹ்மத் தெரிவான போதும் தமிழ் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதுபோன்ற புரளிகளை கிளப்பியமை பலருக்கு நினைவில் இருக்கும்.

கடந்த ஆண்டில் அக்கரைப்பற்று பகுதியில் முஸ்லிம் ஒருவர் தமிழர் களால் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டு சமீபத்தில் ஏறாவூர் ஐயங்கேணியைச்  சேர்ந்த ஷஹீத் என்பவர் முகத்துவார வீதி வழியாக சவுக்கடி ஊடாக ஏறாவூ ருக்குத் திரும்பியபோது கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட எத்தனிக்கப்பட்டது. அதேவேளை, முஸ்லிம் இளைஞர் ஒருவரை நிர்வாண மாக்கித் தாக்கிய சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் தேசியப் போராட்டத்தை ரணிலின் சூழ்ச்சித் திட்டத்தில் சிக்கி காட்டிக் கொடுத்த கருணா அம்மான், தற்போது ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வை பதவி விலக்க பத்தாயிரம் கையொப்பங்களை சேகரிக்கும் ‘சமூகப் பேராட்டத்தில்’ குதித்துள்ளார்.

முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் பதவி வகித்த காலத்தில் வேலை வாய்ப்பில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அரச நிருவாகத்தில் முஸ்லிம்களே இணைக்கப்பட்டதாகவும் வாதாடிய கருணா, கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கம் பரவி வருவதாக பச்சையாகவே அறிக்கை விட்டவர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆய்வாளர் சிற்றம்பலம் கூறுவதுபோன்று முஸ்லிம்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய் துருவலும் போன்று இரண்டறக் கலந்து ஐக்கியப் பட்டிருந்தனர். ஆயுதக் குழுக்களின் வருகையின் பின்னர் இந்நிலமை மாற்றமடைந்தது.

திருகோணமலை சண்முகா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிக இடமாற்றத்திற்குப் பின்னர் மீண்டும் பாடசாலை திரும்பியுள்ள முஸ்லிம் ஆசிரியைகளின் மீது அதிபர் காட்டி வரும் துவேசமும் பகையுணர்வும் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு குறித்த பாரிய ஐயப்பாட்டை உருவாக்குகின்றது.

கிழக்கில் தமிழ் அரச நிருவாகிகள், அரசியல் தலைவர்கள், கள யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாத கல்வியறிவற்ற பாமரர்கள் ஆகிய பல தரப்பினரும் முஸ்லிம்கள் குறித்து அவ்வப்போது புனைந்துரைக்கும் கட்டுக்கதைகள் இனத்துவேஷத்தை வளர்த்து வருகின் றது.

அரசியல் ஓட்டாண்டிச் தனத்தில் இருக்கும் கருணா அம்மான் போன்றவர்கள் கூறுவது போல, கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான நிருவாக அதிகாரிகள் முஸ்லிம்கள் அல்லர். கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் பொது நிருவாகத் துறை அதிகாரத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் தமிழர்களே.

அதேவேளை, முன்னாள் கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், காத்தான்குடி யில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ் லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்கள் குறித்தும் கருணா வசதியாக மறந்து போவதும் கிழக்கில் ஆளுனராக அல்லது முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படும்போது பொங்கி எழுவதும் கிழக்கில் தலை யெடுக்கும் ஆபத்தான இனவாதத்தின் குறிகாட்டிகளாகவே கொள்ளப்பட வேண்டும்.

கிழக்கில் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் தமிழர் வசம் உள்ளது. அதில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வசித்து வந்த நிலங்களும் நெற்காணிகளும் உள்ளடங்கு கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தி லேயே ஒரு பிரதேசத்தில் மாத்திரம் 4000 ஏக்கர் காணிகளை தமிழர்கள் அபகரித் துள்ளனர். புலிகள் அவற்றை முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்தனர். இம்மாவட்டத்தில் 39 முஸ்லிம் கிராமங்களிலிருந்து 1990 களில் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டனர்.

கிழக்கின் தமிழ்-முஸ்லிம் சகவாழ்வு தமிழ் ஆயுதக் குழுக்களாலேயே சிதைந்தது. தொடர்ந்து இம்மாகாணத்தில் பிழைப்பு அரசியல் நடாத்த வந்த அரசியல்வாதிகளால் தமிழ்-முஸ்லிம் உறவு பெருமளவு பாதிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பு, சமஷ்டிக் கோரிக்கை, வடக்குக் கிழக்கு இணைப்பு ஆகிய விவகாரங்கள் சூடு பறக்க விவாதிக்கப் படும் இத்தருணத்தில் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் இனவாதம் தலையெடுப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை யின் அரசியல் கலாசாரம் இந்நாட்டின் மக்களை பிளவுபடுத்தியமை மிகவும் துயரம் நிறைந்தது. ஐரோப்பிய காலனித் துவத்திலிருந்து அரசியல்   சுதந்திரம் பெற்ற நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் ஜனநாயகமாகவே கருதப்பட்டது. ஐரோப்பியர்களும் கணித ரீதியில் பெரும்பான்மையாக இருந்த மக்களி டமே சுதந்திரத்தைக் கையளித்தனர். இலங்கை போன்று ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த உதாரணம் பொருந்துகிறது.

அரசியலில் பங்குபற்றுதலுக்கு வாய்ப்பளிக்கப்படாத சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை ஒரு தேசமாக முன்னிறுத்த வேண்டிய கட்டாயத்தை  சுதந்திரத்திற்குப் பிந்திய பெரும்பான்மை அரசியல் உருவாக்கியது. விளைவாக இனம், மொழி, கலாசாரம், மதம், பிராந்தியம் ஆகிய தேச வரண்முறைக் கான அளவுகோல்களை முன்னிறுத்தும் அவசரத்தில் ஒவ்வொரு இனங்களும் தனித்துச் செயல்பட ஆரம்பித்தன. தனக்குரியதையும் தனக்கானதையும் அரசியல் தளத்தில் தேடும் தேசிய இனங்களின் முயற்சிகள் இறுதியில் பாரிய சமூகப் பிளவுகளையும் பிரிவுகளையும் உருவாக்கி விட்டன.

1960களுக்குப் பின்னர் இன ரீதியான சிந்தனை எல்லாத் தளங்களிலும் வேக மாகப் பரவியது. கல்வி, பொருளாதா ரம், அரசியல், நிருவாகம் என அது எதனையும் விட்டு வைக்கவில்லை. இனப் பாடசாலைகள் தோன்றியது போல இனரீதியான அரசியல் கட்சிகளும் களத்திற்கு வந்தன. 70 களுக்குப் பின்னர் பேரின வாத அரசாங்கங்கள் பின்பற்றிய சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணுகுமுறைகள் -குறிப்பாக தமிழ் சமூகத்தை விரக்தியடையச் செய்தது. பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி தரப்படுத்தல், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட இராணுவக் கெடுபிடிகள் போன்றன தமிழ் இளைஞர்களை கொதிப்படையச் செய்தது.

1980 களில் அது ஓர் ஆயுதப் போராக வெடித்து, 30 ஆண்டு காலம் போரில் விரயமாகி யது. இலங்கையின் இனப் போர் அடிப்படையில் சிங்கள – தமிழ் சமூகங்களுக்கிடையிலானதே. தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் சிங்கள அரசின் படைகளுக்கும் இடையில் வெடித்த ஆயுதப் போர், துரதிஷ்டவசமாக முஸ்லிம்களையும் அதனுள் இழுத்துக் கொண்டது. பாரிய இழப்பும் வலிகளும் வருத்தங்களும் முஸ்லிம்கள் மீது திணிக் கப்பட்டது.

தமிழ் ஆயுதக் குழுக்களின் தோற்றம், சுதந்திரத்திற்கு முன்னர் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக் கிடையில் நிலவி வந்த சகவாழ்வை அச்சுறுத்தி யது. தமிழ் – முஸ்லிம் நல்லுறவை கிடப்பில் போட்டது. இப்போது மீளவும் நாம் தமிழ் – முஸ்லிம் நல்லுறவு பற்றிய கலந்துரையாடலைத் தொடங்க வேண்டி யுள்ளது. அது வெறுமனே அரசியல் திரு குதாளங்களுக்கோ குறுகிய இலாபங் களுக்கோ அல்ல.

வடக்குக் கிழக்கில் பிட்டும் தேய்காய்ப் பூவும் போல ஒற்றுமையாய் வாழ்ந்த இரு சமூகங்களுக்கிடையில் தொடர்ந்தும் காழ்ப்பும் பகைமையும் வேரூன்றியிருப்பது ஆரோக்கிய மான தல்ல. திறந்த கலந்துரையாடல்கள் மூலம் இரு சமூகங்களின் மனக் குமுறல்களை யும் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வருவதன் ஊடாக இரண்டு சமூகங்களும் இணைந்தும் இணக்கப்பாட்டுடனும் வாழ முடியும் என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது.

இன்றைய கொதிப்பான அரசியல் சூழமைவில் இந்த நகர்வு முக்கியமானது. இரு சமூகங்களைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளும் நிருவாக அதிகாரிகளும் தேர்தல் இலாபங்களுக் காகவும் தமது சொந்த அரசியல் பிழைப்பு வாதத் திற்காகவும் மென்மேலும் சமூகங் களைக் கூறுபோட எத்தனிக்கின்ற இந்தத் தருணத்தில் தமிழ் – முஸ்லிம் நல்லுறவு பற்றிய இந்த விவாதம் ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் – முஸ்லிம் உறவில் சில கசப்பான பக்கங்கள் இருக் கின்ற போதும் சில இனிப்பான பக்கங் களும் இருந்ததை நாம் நினைவுகூர வேண்டும். வரலாற்றை நேர்ப்படியாக நோக்கு வதும் நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதுமே நமக்கு முன்னாலுள்ள பணியாகும்.

இறுதிக் கட்டப் போரில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழ் அகதிகளுக்கு காத்தான்குடி பள்ளி வாயல்கள் சம்மேளனம் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்பவை மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை யும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி, மனிதாபிமான உதவிகளைச் செய்தனர்.

1983 ஜூலைக் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை தலைநகர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது வீடுகளில் வரவேற்று, அடைக்கலம் வழங்கி, சில நாட்களுக்கு விருந்தளித்துப் பாதுகாத்தனர். தமிழர்களுக்கு தொப்பி அணிவித்து முஸ்லிம்களாகக் காட்டிய சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இப்படி இனிப்பான பக்கங்களுக்கு ஏராளமான உதாரணங்களை அடுக்கிச் செல்லலாம். துரதிஷ்டமாக ஆயுத இயக்கங்களின் தோற்றத்திற்குப் பின்னர் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக் களும் முஸ்லிம்களை தூய சைவ வேளாள தாயகத்தின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். 1990 களில் பொலன்னறுவை மாவட்டத்தில் அழிஞ்சிப் பொத்தானையில் புலிகள் அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் பள்ளியில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்களை புலிகளின் இயந்திரத் துப்பாக்கிகள் வேட்டையாடியன. ஏறாவூர் படுகொலைகள், சம்மாந்துறை படுகொலைகள் என கொலைக் கலாச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னரும் கூட முஸ்லிம்களின் மீதான தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்கொடுமைகள் நிறுத்தப்படவில்லை. எல்லாவற்றுக்கும் உச்சமாக 1990 ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு லட்சம் முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டனர். ஆண்டாண்டு காலமாக தமிழர்களோடு ஒட்டி உறவாடி வந்த வடக்கு முஸ்லிம்கள் வெறுங் கையோடு வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் வெறும் 2 மணித்தியாலங்கள் என்பதை எதிர்வரும் ஒக்டோபரில் 27 ஆம் ஆண்டாகவும் நாம் நினைவுகூரப் போகிறோம்.

புத்தளத்திலும் அனுராதபுரத்திலும் அகதிகளாய் வாழும் இம்மக்களை வடக் கில் குடியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டணியும் முதலமைச்சருமே இன்று வரை தடையாக இருந்து வருகின்றனர்.

ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் பகையுணர் வோடு பார்ப்பதற்கு இரு சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதி களே மூல காரணம் என்பதையும் தமிழ் – முஸ்லிம் பங்குபற்றுனர்கள் ஏற்றுக் கொண்டனர். கடந்த கால கசப்பான  அனுபவங்களை அங்கு சிலர் பகிர்வ தற்கு முனைந்த போதும் பகை மறப்பின் தேவை வலியுறுத்தப் பட்டதன் விளைவாக  ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டது. தமிழ் முஸ்லிம் நல்லுறவை வளர்ப்பதற்கான  ஒரு செயலணியை உருவாக்க வேண்டும் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது.

பரஸ்பர முன்னேற்றத்தில் இரண்டு சமூகங்களும் பங்களிக்க வேண்டியுள் ளது என்பதும் ஏற்கப்பட்டது. ஆறாத காயங்கள், தீராத வருத்தங்கள் இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் இன்னும்   நீடிக்கின்றது என்பது துரதிஷ்டமானதே. எனினும், எதிர்காலத் தலைமுறைகளை யேனும் இனவாதச் சிந்தனையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் அங்கு கருத்தொருமைப்பாடு ஏற்பட்டது.

வடக்கு கிழக்கின் அரசியல் சூழ மைவு தொடர்ந்தும் இனத் தேசியத்தை அடிப்படையாகக் கொண் டால் தமிழ் முஸ்லிம் நல்லுறவு  சாத்தியமில்லை என்பது ஒரு பொதுவான புரிதலாகும். அரசியல் நிருவாகத் தலைமைகள் தமது சில வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் தத்தமது சமூக வாக்குகளைத் தக்க வைப்பதற்கு முயல்கின்றனர். அது இன விரிசல்களையும் பகை முரண்பாடு களையும் வளர்க்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருணா அம்மான் விடுத்த அறிக்கையொன்று பத்திரிகைகளில் வெளிவந்தது. கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு அனைத்துத் தமிழ் தரப்புகளும் ஒன்றுபட வேண்டும் என கருணா அறைகூவல் விடுத்திருந்தார். இத்தகைய உணர்ச்சி பூர்வமான கோசங்கள் தமிழ் – முஸ்லிம் நல்லுறவைக் கெடுப்பதற்கே எண்ணெய் ஊற்றும் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இன்று நாம் வலியுறுத்தும் தமிழ் – முஸ்லிம் உறவு அரசியல் தேவை களுக்கு அப்பால் இரண்டு சமூகங்களினதும் உடனடியான சமூகவியல் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் – முஸ்லிம் நல்லுறவு பற்றிய கருத்தாடலை இரு சமூகங்களையும்    சேர்ந்த புத்திஜீவிகளும் செல்வாக்குள்ள சமூகத் தலைமைகளுமே முன்னெடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் இதை செய்யப்  போவதில்லை. அரசியல் ரீதியில் ஏராளமான சிக்கல்கள் இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் உள்ளன. அவற்றை இரு தரப்பு நலன்களின் அடிப்படையில் தாண்டிச் செல்ல வேண்டிய கட்டாயம் இன்றுள்ளது.

இந்த அடிப்படை உண்மைகளை கவனத்திற் கொண்டு தமிழ் முஸ்லிம் நல்லுறவை ஊக்குவிப்பதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவது இன்றைய உடனடித் தேவையாகும். இது குறித்து நாம் சிந்திப்போமா?

1 comment:

Powered by Blogger.