January 09, 2019

கண்­டி தீ விபத்தில் கணவன்செய்த, துணிகர நல்ல காரியம்

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டிநுவர வீதியில் நான்கு மாடி வர்த்தக கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் பரவிய தீயில் சிக்குண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அக்குடும்பத் தலைவனின் துணிகர நடவடிக்கையால், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்போடு காப்பாற்றப்பட்டனர். இந்த திகில் சம்பவம் நேற்றுக் காலை 6.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றது.

இதன்போது தீயில் சிக்கிக்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரில் 8, 7, மூன்றரை வயதுகளை உடைய மூன்று மகன்மாரையும் கட்டிடத்துக்கு கீழே கூடிய  பொலிஸ் மற்றும் பொதுமக்கள் மீட்கக் கூடிய வண்ணம் ஜன்னல் வழியே குடும்பத் தலைவர் வீசியுள்ளார். அதன் பின்னர் நான்காம் மாடியின் ஜன்னல் வழியே தான் முதலில் மூன்றாம் மாடியுடன் இருந்த இரும்புக் கம்பியொன்றுக்கு தாவி அங்கிருந்து அக்கட்டிடத்தின் ஜன்னல் ஒன்றினை உடைத்து அதனிலும் கால் வைத்து, மனைவியை ஜன்னல் வழியே குதிக்க கட்டாயப்படுத்தி அவ்வாறு குதிக்கும் போது தாங்கிப் பிடித்து அவரையும் கீழுள்ளவர்கள் மீட்கும் வண்னம்  கைவிட்ட கணவன் பின்னர் தானும் குதித்து உயிரைக் காத்துக்கொண்டார்.

இந்த திகில், சம்பவத்தில் மாடியிலிருந்து வீசப்பட்டும் குதித்தும் உயிர்களைக் காத்துக்கொண்ட  தந்தையான காமநாதன் ராமராஜா (வயது 36) , அவரது மனைவி தங்கவேலு ராதிகா மற்றும் மூத்த மகன் காமநாதன் நிசாலன், இரண்டாம் மகன் காமநாதன் சத்யஜித் மற்றும் மூன்றாவது மகன் காமநாதன் சகித்தியன் ஆகியோர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் உயிரைக் காக்குமுகமாக எடுத்த அவசர நடவடிக்கைகளின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும்  வெட்டுக் காயங்கள் மற்றும் சிறு தீக்காயங்கள் தொடர்பில் சிகிச்சை பெறவே அவ்வாறு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை தகவல்களும் பொலிஸாரும் விடிவௌ்ளியிடம் உறுதி செய்தன.

இந்நிலையில் இந்த தீ பரவல் தொடர்பில்  கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரணவீரவின் உத்தரவுக்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டி – யட்டிநுவர வீதியில் உள்ள நான்கு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத் தொகுதியான நிஸாம் கொம்ப்லெக்ஸிலேயே இந்த தீ பரவல் இடம்பெற்றுள்ளது. இந்த வர்த்தக கட்டிடத் தொகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த  காமநாதன் ராமராஜா, அந்த கட்டிடத்தின் நான்காம் மாடியிலேயே குடும்பத்தாருடன் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையிலேயே நேற்றுக் காலை 6.30 மணிக்கு பின்னர் அக்கட்டிட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படவே 4 ஆம் மாடியில் இருந்த ராமராஜா குடும்பத்தினர் ஜன்னல் வழியே கீழ் நோக்கி அவதானித்துள்ளனர்.

இதன்போதே அக்கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் பாரிய தீ பரவுவதை அவர்கள் கண்டுள்ளதுடன் கட்டிடத்துக்கு கீழே பெரும் திரளானோர் கூடியிருப்பதும், பொலிஸார் சிலரும் அங்கு வந்துள்ளதையும் அவர்கள் அவதானித்துள்ளனர். மூன்றாம் மாடியைத் தாண்டி அவர்களால் கீழ் நோக்கி வருவது பாரிய தீயினால் சாத்தியப்படாமல் போகவே அவர்கள் நான்காம் மாடியில் வசமாக சிக்கிக்கொண்டுள்ளனர்.

தீயணைப்பு படையினருக்கும், பொலிஸ் உயிர்காப்பு படைக்கும் இராணுவத்தினருக்கும் இதன்போது அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வருவதற்குள் வேகமாக பரவும் தீ நான்காம் மாடிக்கும் பரவும் அச்சநிலை ஏற்பட்டது. இந்நிலையில் துணிகரமாக செயற்பட்ட   குடும்பத் தலைவரான ராமராஜா, முதலில் தனது மூன்று மகன்மாரையும் நான்காம் மாடியிலிருந்து கீழ் நோக்கி வீசினார்.

முதலில் தனது கடைசி மகனை இரு கைகளாலும் பிடித்து ஜன்னல் வழியே கீழ் நோக்கி தந்தை வீசினார். அதற்கு முன்பதாகவே கீழே கூடியிருந்த பொதுமக்களும் பொலிசாரும் தந்தைக்கு பூரண ஆதரவு கொடுத்து உற்சாகமூட்டி அவர்களை கீழ்நோக்கி வீசுமாறும் தாம் பிடித்துக் காப்பாற்றுவதாகவும் கூறினர். இதற்காகத் துணிகள் மற்றும் மெத்தைகளையும் கீழே பொதுமக்கள் விரித்தனர்.

இந்நிலையிலேயே முதலில்  மூன்றரை வயது மகனை கீழ் நோக்கி வீசிய தந்தை அதனைத் தொடர்ந்து 7 வயது மகனையும் பின்னர் 8 வயது மகனையும் கீழே வீசிக் காப்பாற்றினார். அதன்பிறகு 4 ஆம் மாடியில்  அப்பிள்ளைகளின் தந்தையும் தாயும் மட்டுமே எஞ்சிய நிலையில் அவர்களையும் குதிக்குமாறு கீழிருந்தவர்கள்  கோரினர். எனினும், உடனடியாக அவர்கள் குதிக்கவில்லை.

முதலில் கணவன் ஜன்னல் வழியே கீழ் நோக்கி வந்து ஒரு இரும்புக் கம்பியை தாங்கிப் பிடித்து, அதிலிருந்து கீழ் மாடியின் ஜன்னல் ஒன்றினை உதைத்து உடைத்ததன் பின்னர் மனைவியை மேலே இருந்து கீழ் நோக்கி வருமாறு கணவன் கூறவே அவரும் மெதுவாக கீழ் நோக்கி வரும்போது தாங்கிப் பிடித்த கணவன் மனைவியையும் பின்னர் குழந்தையை மீட்ட பாணியிலேயே கீழ் நோக்கி கைவிட்டார்.  இதனையடுத்து மனைவியையும் கீழிருந்த மக்கள் காப்பாற்றினர்.

இதனையடுத்து ஒவ்வொரு மாடியாக இறங்கிய கணவன் 2 ஆம் மாடியில் இருந்து குதித்து தன்னையும் காத்துக்கொண்டார்.

இதன்போது குடும்பத் தலைவனான கணவனுக்கு தலையிலும் உடலிலும் சிறு தீக்காயங்களும் வெட்டுக்காயங்களும் ஏற்பட்டன. ஏனையோருக்கும்  சிறு காயங்கள் இருந்தன.   இந்நிலையிலேயே அவர்கள் ஐவரும் பொலிஸாரின் தலையீட்டுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இந்நிலையில் அங்கு கண்டி மாநகர சபையின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வருகைதந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுமையாகப் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது.

இந் நிலையில் உடன் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சேத விபரங்களின் பெறுமதியோ உறுதியான காரணமோ தெரியவரவில்லை. எனினும் மூன்றாம் மாடியில் ஏற்பட்ட எரிவாயு கசிவு  தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அதன்காரணமாக இந்த தீ பரவல் இடம்பெற்றதா அல்லது வேறு காரணிகள் உள்ளதா என்பது தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகளுக்கு அமைய தீ பரவிய கட்டிடத்தில் இன்று அரச இரசாயன பகுப்பாய்வுகள் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

2 கருத்துரைகள்:

Great work of a father...

The President should reward him for his courageous action.

Why you did not mentioned anything about the person who kept fire to this building??
(Statement was given by the Great Father about it in the Hospital)

Post a comment