Header Ads



அப்துர் ரஹ்மான் மௌனம், காப்பது நியாம்தானாம்...!

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டமை தொடர்பில் எதுவித கருத்துக்களையோ வாழ்த்துக்களையோ நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அல்லது பொறியியலாளர்  அப்துர்ரஹ்மான் இது வரை தெரிவிக்கவில்லை என சகோதரர் நிஸ்பர் என்பவரினால் ஆக்கமொன்று எழுதப்பட்டு ஊடகங்களில் பிரசுரமானதை அவதானித்தேன்.இது தொடர்பில் சில கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகும்.

   குறித்த சகோதரர் இது தொடர்பில் கருத்துச் சொல்கையில் 'விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட பொழுது மௌனம் காத்ததைப் போலவே இப்பொழுதும் என்ஜினியர் ரஹ்மான் மௌனமாக இருப்பதாக' வரலாற்றினை மிகவும் திரிபு படுத்திக் கூறியிருக்கிறார். இது தொடர்பில் முதலில் சில விடயங்களை தெளிவு படுத்துவது அவசியமாகும்.

 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலப்பகுதியில் படு மோசமாக  விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மிகத்துணிச்சலாக அதற்காக குரல் கொடுத்த ஒருவர் அப்துர் ரஹ்மான் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்பொழுது ந.தே.மு- NFGG என்கிற எதுவித அரசியல் பின்னணிகளும் இல்லாமலேயே என்ஜினியர்  ரஹ்மான் தனி மனிதனாக நின்றே இதனை சுட்டிக்காட்டியிருந்தார். வாழைச்சேனை- மூதூர் போன்ற பகுதிகளில் நடந்த மிலேட்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து BBC தழிழோசைக்கு அப்துர்ரஹ்மான் துணிகரமான செவ்வி ஒன்றினை அப்போது வழங்கியிருந்தார்.தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததையும் தாண்டி அவர் இதில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்து குரல் கொடுத்தார். முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற மிகக்காத்திரமான பணியாக அன்று அது அமைந்தது. காரணம் இன்றைய நாட்களைப்போல அப்பொழுது சமூக வலைத்தளங்களோ செய்திப்பரிமாற்றல் சேவைகளோ இருக்கவில்லை.  அப்போது பதவியிலிருந்த அரசியல்வாதிகளோ அல்லது மற்ற கிழக்குப்பிராந்திய அரசியல் பிரமுகர்களோ ( ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உட்பட) எவரும் இது தொடர்பில் அவ்வாறு எதனையும் செய்யவில்லை என்பதும் இங்கு நினைவு கூரப்பட  வேண்டியதாகும்.

  அதே போலவே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அப்போது அங்கம் வகித்த அப்துர்ரஹ்மான் வாழைச்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட இரு இளைஞர்களின் ஜனாசாவினை மீட்டெடுப்பதற்காக மிகவும் போராடினார். இறுதியில் அந்த ஜனாசாக்கள் விடுதலைப்புலிகளினால் கண்முன்னே எரிக்கப்பட்ட அநியாயத்தினை மிக வன்மையாக எதிர்த்த அவர்   தனது பதவியினை உடனடியாக இராஜினாமாச் செய்து தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.  முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விபரித்து  அன்று அவர் எழுதிய இரண்டு பக்க இராஜினாமாக் கடிதம் இன்றுவரையிலும் இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாசிசவாதப்  தாக்குதல்களை நிரூபிக்கும்  சான்றாக இன்றும் இருக்கின்றது.

   அது போலவே 2000ம் ஆண்டளவில் சுவீடனில் நடந்த இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பான ஒரு முக்கிய மாநாட்டில் ஒரேயொரு முஸ்லிம் சமூக பிரதிநிதியாக கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கான நியாயங்களை துணிச்சலாக பேசியிருந்தார். மட்டுமன்றி முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களை ஆவனப்படுத்தவதற்கான நிறுவனம் ஒன்றினை அமைத்து அதற்கான  செலவுகளையும் தானே பொறுப்பெடுத்து ஆவனப்படுத்தலை மேற்கொண்டு தனது சமூகத்திற்கான பணியினை நிறைவேற்றினார். தாய்லாந்தில் புலிகளுடன் இலங்கை அரசாங்கம் நடாத்திய பேச்சு வார்த்தைகளின் போது முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென்ற விரிவான ஆவனமொன்றினைத் தயாரித்து மர்ஹூம் கலாநிதி ஹஸ்புள்ளாஹ் சேர் மூலமாக சமர்ப்பித்தார்.

   இது போன்ற காத்திரமான பங்களிப்பினை சகல வசதிகளையும் கொண்டிருந்த அரசியல் கட்சிகளோ அல்லது வடகிழக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளோ செய்யவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

 எனவே சகோதரர் நிஸ்பரினால் என்ஜினியர் அப்துர்  ரஹ்மானின் கடந்த கால சமூக, அரசியல் பங்களிப்புகள்  தொடர்பில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்  மிக அபத்தமான ஒன்றாகும்.

 இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண ஆளுநர் விடயம்  தொடர்பில்  பேசுகின்ற பொழுது பின்வரும் விடயங்கள் கவனிக்கப்படவேண்டியவைகளாகும்.

  1. ஆளுநர் பதவி என்பது ஜனாதிபதி தனது முழு அதிகாரத்தினைப் பயன்படுத்தி தனக்கு விருப்பமான, தனக்கு   மிக விசுவாசமான நபர்களை மாகாண அதிகாரங்களுக்கு பொறுப்பாக நியமிக்கின்ற ஒரு செயற்பாடே ஆகும். இங்கு ஆளுநராக பதவிக்கு வருகின்ற தனிநபர்கள் ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமைய மாகாண விவகாரங்களை கையாள முடியுமே தவிர தாங்களாகவே தீர்மானங்களை மேற்கொண்டு மாகாணங்களில் நிலவுகின்ற பிரச்சனைகளை தீர்த்துவைக்கின்ற சுயாதீனமான அதிகாரங்கள் அவர்களுக்கு கிடையாது.  ஆளுநரின் அதிகாரம் தொடர்பாகவும் தற்போது அதிகம் சிலாகிக்கப்படுகிறது. MP பதவியை விட அல்லது இராஜாங்க அமைச்சர் பதவியை விடவும் அதிக அதிகாரம் ஆளுநர் பதவியில் இருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும் அப்பதவிகளில் இருக்கின்ற சுயாதீனம் போல எந்தவொரு சுயாதீனமும் ஆளுநர் பதவியில் எந்த சுயிதீனமும்  கிடையாது. ஜனாதிபதி விரும்புவதை செய்யவும் அவர் நினைப்பவற்றை செய்து முடிக்கவுமே மாத்திரமே முடியும். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் MP பதவி என்பது மக்களுக்கு விருப்பமானவர்களை மக்கள் தெரிவு செய்து வழங்குகின்ற பதவியாகும். ஆளுநர் பதவி என்பது தனக்கு விருப்பமானவரை ஜனாதிபதி தெரிவு செய்து வழங்கும் பதவியாகும். மக்களுக்காக குரல் கொடுக்க அவசியமான  சுயாதீன நிலை  எந்தப்பதவியில் இருக்கும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

  2.  சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆளுநரை நியமிப்பது என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயமும் அல்ல. முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் அலவி மௌலானா போன்றவர்கள் ஆளுநர் பதவிகளை வகித்திருக்கிறார்கள். இப்போது மேலும்  முஸ்லிம் இருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது  பெரிய ஆரவாரத்துக்கும் புளகாங்கிதத்துக்கும் உரிய புரட்சிகரமான ஒருவிடயமாக கொள்ளத் தேவையில்லை.

    3.  ஆளுநர் நியமனங்கள் பற்றி பேசுகின்ற பொழுது ஜனாதிபதியினால் அவை வழங்கப்பட்டுள்ள தற்போதைய  சூழல் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். கடந்த நாட்களில் இந்த நாட்டின் சட்டம், யாப்பு  என்பவற்றை அப்பட்டமாக மீறிய ஜனாதிபதி சுமார் 52 நாட்கள் வரை இந்த நாட்டினை ஒரு இருண்ட, குழப்பமான  சூழ்நிலைக்குள் தள்ளியிருந்தார். அந்த மோசமான நிலையிலிருந்து இந்த நாட்டின் நீதித்துறை மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு  விடிவினைப் பெற்றுக்கொடுத்திருந்தது. தனது முதலாவது சதி நடவடிக்கை தோற்றுப்போயுள்ள இந்த நேரத்தில் தனது அரசியல் குரோதங்களை தீர்த்துக் கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைளை ஜனாதிபதி தொடங்கியிருக்கிறார்.  அதில் ஒரு அங்கமாகவே  இவ்வாளுநர் நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் தனது அரசியல் சதி நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து  தனக்கு மிக விசுவாசமாக செயற்பட்ட பலரையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு சன்மானமளிக்கும் வகையிலுமே இப்பதவிகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகும். எனவே நாட்டை பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெரும் பின்னடைவிற்குள் தள்ளிய அரசியல் சதி முயற்சிகளை வெறுத்து அதற்கெதிராக போராடிய எவராலும் அந்த சதி முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு சன்மானமாக பதவிகள் வழங்கப்படுவதனை வாழ்த்திப் பாராட்ட முடியாது.

     4. சகல இனத்தவருக்கும் பொதுவாக கடமையாற்ற வேண்டிய  ஒரு முக்கிய பதவிக்கு ஒருவரை நியமிக்கிற போது இனவாத கண்ணோட்டத்தோடும் சந்தேகத்தோடும் அதனை நோக்குவதென்பது வட கிழக்கில் நீண்டகாலமாக நடந்தே வருகின்றது.  அடிப்படையற்ற சந்தேகம் என இதனை புறந்தள்ளவும்  முடியாது. அவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஒருவரின் கடந்தகால செயற்பாடுகள் பாரபட்சமானதாகவும்  இனவாத ரீதியிலும்  அமைந்திருக்கும் போது இந்த சந்தேகம் மேலும் பலமடைகின்றது. உதாரணமாக இனரீதியான பாரபட்சமான நடவடிக்கைகளை கொண்ட ஒரு தமிழ் அரசியல்வாதி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால்  முஸ்லிம்களின் எதிர்வினை எப்படி  இருந்திருக்கும் என்பதினை நடுநிலையாக நாம் யோசிக்க வேண்டும்.  அது தமிழ் சமூகத்திற்கு எதிரான எதிர்வினையாற்றல் இல்லை. மாறாக அது நமது கடந்த கால அனுபவங்களால் ஏற்படும் நியாயமான அச்சங்களின் பிரதிபலிப்பே அதுவாகும். இங்கே ஹிஸ்புல்லாஹ் என்ற ஒரு தனிநபர் தொடர்பில் தமிழ்த்தரப்பில் காணப்படுவதாக தெரியும் அச்சங்களுக்கு  நியாயமான வரலாற்றுக் காரணங்கள் ஏதும்  இருந்திருக்கிறதா என்பதினையும் நாம் நடுநிலையாக பார்க்கவேண்டும். அந்த வகையில் ஹிஸ்புல்லாஹ் கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டுகின்ற வகையில் முன்வைத்த கருத்துக்களும் (உதாரணம்: கோயிலை  இடித்து சந்தையை கட்டினேன் என்ற பகிரங்கமான அறிவிப்பு.) பாரபட்சமான நடவடிக்கைகளும் ('ஜனாதிபதியிடம் நேரடியாக கதைத்து எங்கள் பகுதிக்கு நான் ரோட்டுப்போடுகின்றேன்.உங்களுக்கு தேவை என்றால் நீங்களும் அப்படி செய்து கொள்ளுங்கள்'என பிராந்திய அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தமிழ்ப்பட பிரதிநிதிகளிடம்      பகிரங்கமாக கூறிய கருத்து) ஹிஸ்புல்லாஹ்வின் ஆளுநர் நியமனத்தை பாரிய பேசு பொருளாகமாற்றியிருக்கலாம்.

  அது போலவே,  தனக்கு இருந்த அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி தனது அல்லது தனக்கு விருப்பமானவர்களின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் பிரதேச வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை  ஹிஸ்புல்லாவினால் கடந்த காலங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இவர் பற்றிய சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் காரணமாக இருக்கலாம். இதனை கடையடைப்புகள் மூலமாகவோ அல்லது அறிக்கைகள் மூலமாகவோ நிவர்த்திக்க முடியாது.    பாரபட்சமற்ற நீதியான எதிர்கால நடவடிக்கை மூலமாக ஆளுனர் ஹிஸ்புல்லாவினல் மாத்திரமே  இதனை முறியடிக்க முடியும்.

   5.  ஹிஸ்புள்ளாஹ்வின் ஆளுநர் பதவிக்கு எதிராக இனவாத நச்சுக்கருத்துக்களை முன்னின்று பரப்புபவர்கள் யார் என ஊன்றிக்கவனிக்க வேண்டும். கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றவர்களும் அவர்களோடு இணைந்தவர்களுமே இதனைச் செய்வதில் முன்னிற்கிறார்கள். ஹிஸ்புல்லாவும் இவர்களும்  மஹிந்த- மைத்திரி அணியைச் சேர்ந்தவர்களே. ஹிஸ்புல்லாஹ்வின் தற்போதைய கட்சியான SLFP கட்சியின் உப தலைவராக கருணா  இருக்கிறார். எனவே இவர்களின் இந்த இனவாத கருத்துக்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு SLFP கட்சிக்கே இருக்கிறது. இது தொடர்பில் SLFP வாய் திறக்கவுமில்லை.

அவ்வாறு தனது கட்சி இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது பற்றி  ஹிஸ்புல்லாஹ் அலட்டிக் கொள்ளவுமில்லை  . இனவாதத்தீயை கிழக்கில் மீண்டும் பற்ற வைத்து எதிர்வரும் தேர்தல்களில் முழு இலாபமும் பெற்றுக்கொள்வதற்கான SLFPயின் முயற்சியாகவும் இது இருக்கக்கூடும். இது ஹிஸ்புல்லாஹ் - கருணாவுடன் பேசி அரங்கேற்றப்படும் திட்டமாகவும் இருக்கலாம்.

   அத்தோடு காத்தான்குடி பள்ளிவாயில் படுகொலையில் கருணாவின் பங்கு தொடர்பில் காத்தான்குடி மக்களுக்கிருக்கின்ற வெறுப்பையும் கவலையையும் புறக்கணித்து அதே காத்தான்குடியில் வைத்து கருணாவிற்கு பொன்னாடை போர்த்தி   பாராட்டிய ஒரு வரலாறும் ஹிஸ்புல்லாவிற்கு இருக்கிறது என்பதையும் மறந்து விடலாகாது. ஆக,  கொள்கை-  சமூக நலன் என்கிற எல்லாவற்றையும் தாண்டி தமது பதவிகளுக்காக அணைத்துக்கொள்வதும் அடித்துக்கொள்வதும் இவர்களைப் போன்றவர்களின் அரசியல் இயல்பாகும். இதற்குள் முஸ்லிம் சமூகம் அநாவசியமாக இழுத்து விடப்படுகிறதா என்பதுவும் இங்கு கவனிக்கப்படவேண்டியதாகும்.

மேற்சொன்ன விடயங்களை வைத்து நோக்குகின்ற பொழுது இவ்வாளுனர் நியமனம் தொடர்பில் NFGGயும், என்ஜினியர்  அப்துர் ரஹ்மான் போன்றவர்களும் மௌனமாக இருப்பதிலும் ஒரு நியாயம் இருப்பதாகவே  தோன்றுகின்றது.
- Mohamed Ansar -


2 comments:

  1. Sabash Muhammad Ansar. Hisbullah vin political history patti anavo alifo theriyatha punnaku elutthalar allakkai Nisfar avarhale ithu ungalukkuthan ithu pothuma illatti innam konjam venuma

    ReplyDelete
  2. why this eastern peoples are to much criticizing their governor Mr.Hizbullah ?? instated of solving their main problems in there areas whether it is Tamil areas or Muslims areas? why do not try to get the maximum services from him? leave the religious matters and think how to solve your areas issues i am not in east or north but well wisher for that areas

    ReplyDelete

Powered by Blogger.