Header Ads



எனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்


(எச்.எம்.எம்.பர்ஸான்) 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் இளைஞன் புதன்கிழமை (16) அடித்தும் கூரிய ஆயுதத்தினால் குத்தியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப் பகுதியில் மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து மூன்று இளைஞர்களினாலும் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மரணமடைந்த இளைஞனை தாக்கிய நபர்கள் சடலத்தை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியில் வசிக்கும் 21, 23, மற்றும் 25 வயதுடயவர்களாவர்.

ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைப்பு:
மரணமடைந்த சகீரின் ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பிரதேப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரேதப்பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலைக்கான பின்னணி:
கொலை செய்யப்பட்ட இளைஞனுடனும், அவருடைய நண்பர்களோடும் கொலைசெய்ததாக கூறப்படும் நபர்கள் சிறியதோர் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் அம் முரண்பாடே கொலை வரை இட்டுச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனை தெரிவித்தார். குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தி அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனை மேலும் தெரிவித்தார்.

கதறி அழும் தாய்: 
எனது மகன் என்னைக் காணாமல் இருக்க மாட்டான் வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் திரும்பி வரும்போது என்னை முத்தமிட்டுத்தான் வருவான் அவ்வாறு பாசமாய் வளர்த்த எனது மகன் இன்று மரணித்துக் கிடப்பதைப் பார்க்கும் போது என்னால் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது. மரணம் எல்லோருக்கும் வரும் விடயம்தான் ஆனால் அப்பாவியான எனது மகனை இவ்வாறு துரத்தித்துரத்தி அடித்துக் கொண்ட கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்வரை நான் போராடுவேன்.

பிரதேசவாசிகள்:
கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் கொலை செய்த குழுக்களுக்குமிடையில் ஏதோ பழைய முரண்பாடு உள்ளதால்தான் இவ்வாறு கொலை வரை இட்டுச் சென்றுள்ளது இதனால் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது இன்று எங்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொலை விழுந்தால்போல் எங்களுக்கு கவலையளிக்கிறது என்று பிரதேசவாசிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

சகீரின் அயலவர்கள்:
மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த சனூஸ்தீன் மற்றும் ரெஸ்லியா ஆகிய ஏழைக்குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான முகம்மட் சகீர் அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர் தாய் தந்தையோடு கண்ணியமான முறையில் நடக்கக்கூடியவர் எங்கள் பகுதியில் சுறுசுறுப்பாக திரிபவர் அவருடைய இழப்பு எங்களுக்கும் பேரிழப்பாகும்.

குடும்பத்தினர்கள்:
சகீர் அடித்தும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அதிரிச்சியடைந்தோம் அவர் மரணிக்கும் சிலநேரங்களுக்கு முன்னர்தான் எங்களைச் சந்தித்தார் தான் அணிந்திருக்கும் ஆடை அழகாகவுள்ளாதா என்று எங்களிடம் கேட்டார் நாங்கள் மிகவும் அழகாகவுள்ளது என்று கூறியதும் புன்னகைத்து சென்றவரை உயிரற்ற நிலையில்தான் நாங்கள் அவரைக் கண்டோம்.

ஜனாஸா நல்லடக்கம்:
கொலைசெய்யப்பட்ட சகீரின் ஜனாஸா வியாழக்கிழமை (17) மஃரிப் தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையைவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

நமது சிந்தனைக்கு: 
அண்மைக்காலமாக மானவர்கள் மற்றும் இளைஞசர்கள் மத்தியிலும் கொலைக் கலாசாரம் ஊடுருவியுள்ளதை அவதானிக்க முடிகிறது. நாட்டின் நாலாபுறமும் இவ்வாறு இளம் வயதினரின் கொலைகள் அதிகரித்து செல்கின்றன இதில் பாதிக்கப்படுவதும் கைதாகி சிறை செல்வதும் இள வயதினரே. இது தொடர்பில் பெற்றோர், குடும்பத்தினர், சமூகம் என அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியதும் இளைஞசர்களை சரியான வழியில் வழிநடாத்த வேண்டியதும் காலத்தின் தேவையாகும். 

No comments

Powered by Blogger.