Header Ads



ஆப்கானிஸ்தானில் ஒரு ஜஸ்டின் ட்ரூடோ


இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள். இதில் ஒருவர் ஜி 7 நாடுகளின் தலைவர். இன்னொருவர் திருமண பாடகராக இருக்கிறார்.

ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார்.

தென் கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் மஃப்தூன். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவமைப்பு கொண்டிருப்பதால் தற்போது புகழ் வெளிச்சம் பெற்றுள்ளார்.

ஆஃப்கன் ஸ்டார் என்றொரு பிரபல பாடகர் போட்டி நிகழ்ச்சியில் 29 வயதாகும் அப்துல் சலாம் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியின் நடுவர் ஒருவர் அப்துல் சலாமுக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையிலான உருவ ஒற்றுமையை கண்டறிந்தபின்னர் தற்போது இறுதிச் சுற்றில் உள்ள எட்டு போட்டியாளர்களில் ஒருவராகியுள்ளார் அப்துல்.

''நான் சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பார்ப்பதற்கு முன்னதாக எனக்கு ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கும் அவருக்கும் இடையிலான உருவ ஒற்றுமை காரணமாக தொலைக்காட்சி போட்டியில் வெல்வதற்கு எனக்கு 50% கூடுதல் வாய்ப்பு உருவாகியுள்ளது '' என திருமண பாடகரான அப்துல் ஏ எஃ ப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானியர்கள் ஆன்லைனில் இது தொடர்பாக பல்வேறு படங்களை பகிர்ந்துள்ளனர்.

நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரும் ஆப்கன் - கனடிய இசை கலைஞருமான காஇஸ் உல்பட் பிபிசியிடம் பேசியபோது இறுதிச் சுற்றுக்காக 12 போட்டியாளர்களை பயிற்றுவிக்கும்போது உருவ ஒற்றுமையை கவனித்ததாக கூறுகிறார்.

'' எங்கள் பிரதமரைப் போலவே அவரது தோற்றம் இருந்தது. அதனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரோடு இணைந்து அவரது உருவ ஒற்றுமை குறித்து பேசி சிரித்தேன்'' என்றார்.

நடுவர் உருவ ஒற்றுமை குறித்து நிகழ்ச்சியில் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும் மஃப்தூன் அங்கே ஒரு பிரபலமாக மாறிவிட்டார்.

தற்போது அப்துல் வைரலாகிவிட்டார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள் என்றார் உல்ஃபட்.

ஆப்கன் ஸ்டார் என்பது ஆப்கானிஸ்தானில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி. தாலிபனின் வீழ்ச்சிக்கு பிறகு நான்காண்டுகள் கழித்து 2005-ல் ஒளிபரப்பானது.

அப்போதிலிருந்து இந்த நிகழ்ச்சியை தீவிரவாதிகள் குழு எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. இது இஸ்லாமுக்கு எதிரானது என அக்குழு கூறுகிறது.

ஆனால் மஃப்தூன் டாரி மற்றும் பாஸ்த்தோ மொழிகளின் காதல் ததும்பும் கிராமிய பாடல்களை, அவர் தனது மாகாணத்தின் பாரம்பரிய உடையை அணிந்து பாடும் முறை நடுவர்களையும் பார்வையாளர்களையும் ஈர்த்திருக்கிறது.

'' அவர் மிக மிக திறமையான ஒரு கலைஞர்'. அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்'' என்கிறார் உல்ஃபட்

ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பு கொண்டிருப்பதால் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோற்றாலும் வென்றாலும், திருமணத்தில் பாடும் தனது தொழிலில் இப்புகழ் மூலம் ஏற்றம் உண்டாகும் என தெரிந்துவைத்திருக்கிறார் அப்துல் மஃப்துன்.

தற்போது தன்னை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் கனடிய பிரதமரை பார்க்க விரும்புகிறார். '' ஏனெனில் அவர் உலக பிரபலம், நான் ஆப்கானிஸ்தானின் தொலைதூர பகுதியில் உள்ள சாதாரண ஏழை'' என ஏ எஃப் பியிடம் தெரிவித்துள்ளார் அப்துல் சலாம் மஃப்துன்.

No comments

Powered by Blogger.