Header Ads



தீர்வுக்காக காத்திருக்கும், தம்புள்ளை பள்ளிவாசல்

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரம் நீண்ட காலம் மறக்கடிக்கப்பட்டிருந்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இவ்விவகாரம் தேர்தல் அண்மிக்கும் காலங்களில் பேசு பொருளாவதனை நாம் கண்டிருக்கிறோம்.

2019 ஆம் ஆண்டு ஓர் தேர்தல் வருடம் என அரசாங்கம் உறுதி செய்திருக்கிறது. மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்று பலவாறாகப் பேசப்பட்டுவரும் கால கட்டத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் சூடுபிடித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளை தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளி தாக்குதலுக்குள்ளானது. தம்புள்ளை ரங்கிரி ரஜமகா விகாரையின் அப்போதைய அதிபதி இனாமலுவே தேரரின் தலைமையிலான குழுவினரே பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.

பொதுபலசேனாவின் ஆதிக்கம் உச்ச நிலையினை அடைந்திருந்த காலம் அது. தம்புள்ளை பள்ளிவாசல் பள்ளிவாசலே அல்ல. அது கோழிகள் அடைக்கும் ஒரு கூடு என இனவாதிகள் விமர்சித்தார்கள். பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்ளுமாறு அவர்கள் அதிகாரத்தொனியில் உத்தரவிட்டார்கள்.

பள்ளிவாசலுக்கு காணி உறுதியிருந்தது. முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலை அகற்றிக்கொள்ள முடியாது என்று உறுதியாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள் கிளர்ந்தெழுந்து பள்ளிவாசலைக் காப்பாற்றிக்கொள்ள அறிக்கைகள் விட்டன.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. ஆனால் பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவுற்றன. பள்ளிவாசல் நிர்வாகம் அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழந்தது. இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலுக்கு அருகில் மாற்றுக்காணி வழங்கப்பட்டால் இடம்மாறிக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தது.

இறுதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் காணியொன்று தம்புள்ளையில் புனித பூமி எல்லையில் இனம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டாலும் அதற்கும் தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிகாரை நிர்வாகம் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து அந்தத் தீர்வும் செயலிழந்தது.

இவ்வாறான நிலையில் பள்ளிவாசல் விவகாரம் மீண்டும் வெளிக்கிளம்பியிருக்கிறது. பெரும்பான்மை இனவாதிகள் பள்ளிவாசலை தம்புள்ளையிலிருந்தும் அகற்றிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்களின் அசமந்தப் போக்கே இதற்குக் காரணம். தம்புள்ளை மேயர் தம்புள்ளையில் தொடர்ந்தும் இன நல்லுறவு நிலவ வேண்டுமென்றால் பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார். இல்லையேல் அசாதாரண நிலைமைகள் உருவாகலாம் என எதிர்வு கூறியுள்ளார். பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்கு தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத இருதரப்பு அரசியல்வாதிகளையும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிரந்தரத் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை சுமுகமாக தீர்ப்பதாக உறுதியளித்துள்ளமை ஒரு திருப்பு முனையாகக் கருதலாம். ஜனாதிபதி இந்த உறுதிமொழியை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை. எம்.சலீம்தீனிடம் தெரிவித்திருக்கிறார். சர்வதேசமயப்படுத்தப்பட்ட தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இரு சமூகமும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உடனடியாக களமிறங்க வேண்டும். தம்புள்ளை பள்ளி வாசல் 41.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ளது. தம்புள்ளை நகரிலே பள்ளி வாசலுக்கு மாற்றுக்காணி பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதியிடம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

இதுவே பள்ளிவாசல் நிர்வாகத்தினதும், சமூகத்தினதும் அபிலாஷையாக இருக்கிறது. நாமும் இதற்காகக் குரல் கொடுப்போம்.
-Vidivelli

1 comment:

  1. ஹிஸ்புல்லாஹ் வை கேட்டால் மோசடி செய்து, மிக இலகுவாக காணியை பெற்றுதந்துவிடுவாரே.

    “இன்ஸடன் தீர்வு”

    ReplyDelete

Powered by Blogger.