Header Ads



கடும் பனிப்புயலினால் ஏமாற்றமடைந்த மங்கள - பேச்சுக்களும் ஒத்திவைப்பு

அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லகாடேயுடன் சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று நடத்தவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.

வொசிங்டனில் வீசிய கடுமையான பனிப்புயலினால், இந்தப் பேச்சுக்கள் பிற்போடப்பட்டதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா குழு அமெரிக்கா சென்றிருந்தது.

நேற்று இந்தக் குழுவினர் அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லகாடே உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவிருந்தனர்.

வொசிங்டனில் கடுமையான பனிப்புயலினால் அனைத்துலக நாணய நிதிய செயலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு நடக்கவில்லை என்றும், அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எந்த விபரத்தையும் அவர் வெளியிடவில்லை.

No comments

Powered by Blogger.