Header Ads



நாடு 3 வகையான, அபாயங்களை எதிர்கொண்டுள்ளது - மஹிந்த எச்சரிக்கை

நாடு மூன்று வகையான அபாயங்களை, எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரையான 60 மாதத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் அரசாங்கம் பெற்றுக்கொண்டு மீளச் செலுத்துவதற்கு எஞ்சியிருந்த மொத்த கடனை விட 50 வீதம் கூடுதலான தொகையை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடந்த நான்காண்டு காலத்தில் பெற்றுக்கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

கடனை மீளச் செலுத்துவதற்காக மாத்திரம் இந்த தொகை பெறப்பட்டிருந்தால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மொத்த கடன் தொகையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொகை அதே நிலையில் இருக்க, மொத்த கடன் தொகை கடந்த நான்கு வருடங்களில் 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம், உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் தமது ஒன்பதாண்டு ஆட்சிக் காலத்தில் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 28 ரூபாவால் மாத்திரமே வீழ்ச்சி கண்டதாக அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 53 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தி வேகமும் 7.4 வீதத்தில் இருந்து 3 வீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு என்ன நடக்கப்போகின்றது என்ற நிலையற்றதன்மை காணப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தம் காரணமாக நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பு வீழ்ச்சியடையும் அபாயத்தையும் மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் வகையில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபும் மற்றுமொரு அபாயம் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபாயங்களிலிருந்து நாட்டை தாம் தலைமைதாங்கும் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பினால் மாத்திரமே காப்பாற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

2 comments:

  1. Wow super leader for srilanka.
    He forgot everythkng in the past.he so much worry abount country economie.

    ReplyDelete
  2. விஞ்ஞானி சொல்லிட்டாரு...

    ReplyDelete

Powered by Blogger.