Header Ads



மகிந்த செலுத்தவேண்டிய 122 மில்லியன் ரூபா கடன் - மைத்திரி நிறுவிய ஆணைக்குழு மூலம் அம்பலம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விமானப் பயணங்களுக்கான கட்டணத் தொகையான 122 மில்லியன் ரூபா (12.2 கோடி) இன்னும் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விமானப் பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களை ஒதுக்கியிருந்தது.

இவ்வாறு மஹிந்த ராஜபக்சவிற்காக ஒதுக்கப்பட்ட விமானங்களுக்காக 122.3 மில்லியன் ரூபா கட்டணத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் - மிஹின் எயார் விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் நேற்றைய தினம் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலுவைத் தொகை இன்னமும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு செலுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் வருமான முகாமைத்துவ மற்றும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பாளர் சுமுது உபதிஸ்ஸ, ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகி சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களின் போது பிரத்தியேக விமானங்களை ஒதுக்கி சுமார் 65 தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட விமானப் பயணங்கள் சிலவற்றுக்கான கட்டணங்கள் இதுவரையில் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அரச தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களின் பொது தனியான பிரத்தியேக விமானங்கள் ஒதுக்கப்பட்டு அதில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணம் செய்யாத சில நாடுகளுக்கும் மஹிந்த பயணங்களை மேற்கொண்டதாகவும் சில சந்தர்ப்பங்களில் 26 பேர் பயணம் செய்வதற்காக ஒரு தனி விமானம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. My3 will pay this on behalf of his best friend Mahinda.

    ReplyDelete

Powered by Blogger.