Header Ads



கிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..?

- இப்னு செய்யத் -

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் தாம் விரும்பும் மதத்தைப் பின் பற்றி நடப்பதென்பது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அந்த வகையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், அலுவலங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் முதல் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அவர்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி உடைகளை அணிந்து கொள்ள பூரண சுதந்திரமுள்ளது. இச்சுதந்திரத்தை யாராவது தடை செய்ய முற்பட்டால் அல்லது இடையூறு விளைவித்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். ஆனால், ஒரு சில அதிகாரிகள் இனவாத ரீதியாக சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இவர்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து அவர்களின் மத விழுமிங்களை பின்பற்றுவதற்கு இடையூறுகளையும், தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் முஸ்லிம் ஆண்களை விடவும் பெண்களே அதிக தொல்லைகளுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

பர்தாவுக்கு தடை

முஸ்லிம் மாணவிகள் பாடசாலைகளில் கல்வி கற்வதற்காக செல்லும் போது தமது கலாசாரத்தை பேணும் வகையில் பர்தா அணிந்து கொண்டு செல்வது வழக்கமாகும். இதே போன்று பாடசாலைகளில் ஆசிரியைகளாக கடமையாற்றுகின்றவர்களில் பெரும்பாலானவர்களும் பர்தா அணிந்து கொண்டு செல்லுகின்றார்கள். மட்டுமன்றி வேறு அரச மற்றும் தனியார் அலுவலங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களும் பர்தா அணிந்து கொண்டு செல்லுகின்றார்கள்.

இவ்வாறு முஸ்லிம் பெண்கள், மாணவிகள் பர்தா அணிந்து கொண்டு செல்வதனை ஒரு சில இனவாதிகள் கேள்விக்கு உட்படுத்திய சம்பவங்கள் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. முஸ்லிம் ஆசிரியைகள், மாணவிகளுக்கு இத்தகைய சம்பவங்கள் மாற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் ஒரு சில பாடசாலைகளிலேயே இடம்பெற்றுள்ளன.

மேலும், பொதுபல சேன போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் பர்தாவுக்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2017ஆம், 2016ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் பரீட்சைகளின் போது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், இவ்வருடம் அத்தகைய சம்பவங்கள் நடைபெறவில்லை. கலாசார ஆடை பற்றிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் மாணவிகள் பற்றி குறிப்பேட்டில் எழுதுவதற்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைதான் இதற்கு காரணமா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. எவ்வாறு இருந்தாலும் இதிலுள்ள உண்மைத் தன்மையை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்தான் கூறுதல் வேண்டும்.

மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிக்கை

இதே வேளை, கடந்த 2018 ஏப்ரல் மாதம் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் பர்தாவை அணிந்து வரக் கூடாதென்று பாடசாலையின் அதிபரினால் கட்டளையிடப்பட்டது. இதனால், பெரிய சர்ச்சைகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இவ்விவகாரம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களத்தினால் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விசாரணை தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மத்திய கல்வி அமைச்சுக்கு 'முறைப்பாட்டு இலக்கம்  HRC/TCO/27/2018 ' என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் மேற்படி பர்தா சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியைதான் குற்றம் இழைத்துள்ளார் என்பது போல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் 2018 நவம்பர் 08ஆம் திகதி எழுதப்பட்டு மாகாண கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் 26.10.2018ஆம் திகதியிட்டு எமக்கு முகவரியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைப்படி விசாரணை முடியும் வரை முறைப்பாட்டாளர்கள் அவர்களது நிரந்தர சேவை இடமான தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) கடமையாற்ற வேண்டும். (இணைப்பு – 01)

இவ் அபாயா தொடர்பான பிரச்சினையானது இனங்களுக்கு இடையே இறுக்கமான நிலையை தோற்றுவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் இடைக்கால நிவாரணத்தை அமுல்படுத்தி மீண்டும் இவ்வாசிரியர் தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் தேசிய பாடசாலைக்கு சேவையாற்ற அனுமதிக்கும் போது கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் பாதிப்பு இப்பாடசாலையில் மட்டுமல்லாது வேறு பாடசாலைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும், நிரல் கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 2012/37 பிரிவு 5.6 இன் அடிப்படையில் இப்பாடசாலையின் பொது மக்களின் நம்பிக்கையினை இவ் ஆசிரியர்கள் வெல்லவில்லை என்பதும் பிரிவு 5.7 இன் டி இன் படி அடிப்படையில் பாடசாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய கொள்கைளை அமுல்படுத்த உதவவில்லை என்பதையும் பிரிவு 6.1 இன் அடிப்படையில் மோதலைத் தவிர்த்துக் கொள்வதற்கு முயலவில்லை என்பதையும் அறியக் கூடியதாகவுள்ளது.

மேலும், இலங்கை தாபன விதிக் கோவை II ஆம் தொகுதி  XI,VII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் 1.5 இல் இவர்களின் செயற்பாடுகள் தனிப்பட்ட கருமங்களுக்கும் அரச கருமங்களுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடிய நிலைமைகளையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமை மறுப்பு

மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடிதம் தொடர்புடைய ஆசிரியைகளின் அடிப்படை உரிமையை மீறும் ஒன்றாக இருக்கின்றது.  ஒருவர் தாம் விரும்பும் மதத்தையும், அதன் கலாசரத்தையும் பின் பற்றுவதற்கு அரசியல் யாப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்டையில்தான் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் இந்து பெண் ஆசிரியைகள் அவர்களின் கலாசாரத்தின் படி ஆடை அணிந்து செல்லுகின்றார்கள். மாகாண கல்விப் பணிப்பாளரின் கடிதத்தின் படி முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் இந்து பெண் ஆசிரியைகள் பர்தா அணிந்து வர வேண்டுமென்று அதிபர் பணித்தால் அந்த ஆசிரியை பர்தா அணிந்து செல்ல வேண்டுமென்பதாகவே இருக்கின்றது. இதுவொரு பிழையான வழிகாட்டுதலாகவும் இருக்கின்றது.

மேலும், மாகாண கல்விப் பணிப்பாளரின் கடிதத்தின் படி 'அபாயா தொடர்பான பிரச்சினையானது இனங்களுக்கு இடையே இறுக்கமான நிலையை தோற்றுவித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை மூலமாக குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள்தான் இன இறுக்கத்தை தோற்றுவித்த காரணகர்த்தாக்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. நாட்டில் இன இறுக்கம் நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் மிகப் பெரிய சிவில் யுத்தம் சுமார் 30 வருடங்களாக நீடித்தது. ஆதலால், மாகாண கல்விப் பணிப்பாளர் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன் வைத்துள்ளார். மேலும், முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இனவாதிகளினால் அநாகரிக்க தர்மபால காலம் முதல் நடைபெற்று வருகின்ற வரலாற்று உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது.

பாடசாலைகளுக்கு தனிப்பட்ட கலாசாரங்கள் இருக்கின்றன. மாணவர்களுக்கு சீருடை இருக்கின்றன. ஆனால், ஆசிரியர்களுக்கு சீருடை கிடையாது. அவர்கள் தங்களின் கலாசாரத்திற்கு எற்ப ஆடை அணியலாம். அந்த ஆடை ஒழுக்கத்தை பேணியதாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரி ஒருவர் எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியையாக நியமிக்கப்பட்டால் அதனை தடை செய்வதில்லை. அவர் முஸ்லிம்களைப் போன்றே உடை அணிந்துள்ளார். இந்த அனுமதி கூட அவருக்கு இருக்கின்ற அடிப்படை உரிமையாகும். நாட்டில் காமத்தை தூண்டக் கூடிய கவர்ச்சியான ஆடைகளை பெண்கள் அணிந்து கொண்டு செல்வதற்கு அனுமதி இருக்கின்ற போது கவர்ச்சியல்லாத மதவிழுமியத்தின் அடிப்படையிலான உடையை அணிந்து கொள்வதற்கு அனுமதி மறுப்பதென்பது முஸ்லிம் ஆசிரியைகளின் உரிமையை வேண்டுமென்று மறுப்பது மட்டுமல்லாது இன ரீதியான சிந்தனையுமாகும். மேலும், ஒருவர் எக்காரணம் கொண்டும் தமது மத உரிமையை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பதற்கு இடமில்லை.

முஸ்லிம் மாணவிகள் மாற்று மதத்தினர் பெரும்பான்மையாக கல்வி கற்கும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளைகளில் அவர்களின் பர்தாவுக்கு பாடசாலையின் அதிபர்களினால் தடை விதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை ஆட்சேபித்து நீதிமன்றம் சென்ற போது, நீதிமன்றம் பர்தா அணிவதற்கு அனுமதி அளித்தது.

உயர் நீதிமன்றம் 2014.07.24ஆம் திகதி வழங்கிய தீர்ப்பின் படி எந்தவொரு பிரஜையும் தமது முக அடையாளங்களை மறைக்காத வகையிலான கலாசார ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் கே.ஸ்ரீபவன் (இவரும் பிரதம நீதியரசராக கடமையாற்றியவர்), நீதியரசர் பிரிந்த ஜயவர்த்தன ஆகிய மூவர் கொண்ட குழுவே இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சண்முக இந்து மகளிர் தேசிய பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு மனித உரிமைகள் ஆணைக் குழு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு சிபார்சு செய்துள்ளது. காரணம், பர்தா அணிவது மனித உரிமையாகும் என்று மனித உரிமைகள் ஆணைக் குழு முடிவு செய்துள்ளது. இந்த நிவாரணத்தைக் கூட மாகாண கல்விப் பணிப்பாளர் மறுத்துள்ளார்.

மேலும், முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசாரப் படி பர்தா அணியலாம். அவற்றை கழற்றி வீசிவிட்டு பாடசாலைக்கு வர வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. எல்லா சமூகத்தவர்களும் தமக்கே உரித்தான பாரம்பரிய கலாசார விழுமியங்களையும், பண்பாடுகளையும் சிறப்பாக பேணிப் பாதுகாத்து அதன்படி நாட்டில் வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

பர்தா எனும் ஆடை முஸ்லிம் பெண்களது இஸ்லாமிய, கலை கலாசார ஆடையாகும். அதனை அவர்கள் அணிவதற்கு உரிமை உண்டு. எனினும் அதனை அணிய வேண்டாம் என சொல்லி தடை விதிக்க யாராலும் முடியாது என்று முன்னாள் கல்வி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் மருதாணை அல் – ஹிதாய வித்தியாலயத்தின் பழைய மாணவரான எம்.சி.புகார்டீனின் சொந்த நிதியில் (ரூபா 50 இலட்சம்) பாடசாலைக்கான கூட்ட மண்டபம் மீள நிர்மாணிக்கப்பட்டு குளிருட்டப்பட்ட ஒரு மண்டபமாக மாற்றியமைக்கப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஒரு முஸ்லிமாக இருக்கின்ற கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இருக்கின்ற பர்தா அணியும் உரிமையை சண்முக இந்து மகளிர் தேசிய பாடசாலையில் ஏற்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக மறுதலித்துள்ளார். இதன் மூலமாக அவரே ஒரு அடிப்படை உரிமை மீறல் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கும், பர்தா அணியக் கூடாதென்று உரிமை மறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அவர்களின் போராட்டத்தை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆதலால், இது விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்றந உறுப்பினர்கள் தமது கவனத்தை செலுத்த வேண்டும்.


6 comments:

  1. Fartha , Burqa and Abaya are Arabian dresses which were not worn by Muslims in the beginning of 2000. Sri Lanka is a country where Majority of the citizens are Buddhists among whom majority doesn't like this dress. We must abide to the request. Quran doesn't say anything of this dress. There are alternate dresses which are modest for them to wear. In the beginning of 2000, female Moulavi teachers attended schools in sarees without even a head cover. Muslim teacher trainees attended training college in half sarees. In the bygone communal clashes , ladies in these dresses were targeted by goons when their husbands and brothers were mere spectators.

    ReplyDelete
  2. வடக்கு கிழக்கு எடுக்கப்பட்டால் முஸ்லிம்கள் நிர்வானமாக்கப்படுவது உறுதி

    ReplyDelete
  3. ஹக்கீம் அவர்கள் ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .ரணில் அவர்களை பாதுகாப்பதில் ஹக்கீம் காட்டும் வீரத்தை முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அவர் காட்டுவதில்லை .

    ReplyDelete
  4. உங்களது வலைப்பக்கத்தை நீண்ட காலமாக வாசிப்பதில் நானும் ஒருவன்...
    ஒவ்வருவரும் மத சுதந்திரம், மொழி சுதந்திரம் போன்ற பலவற்றைக் கொண்டுள்ளவர்களாக இலங்கையில் வாழ்கின்றோம். திருக்கோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இவ் வருட ஆரம்பத்தில் அபாயா தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டன. இது தொடர்பாக நிரல் கல்விஅமைச்சு (இசுருபாய) நடவடிக்கை எடுத்து அவ்வாசிரியைகளை முஸ்லீம் பாடசாலைகளில் தற்காலிகமாக இணைத்தது.
    இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் மாகாணக் கல்விப்பணிப்பாளர் கூறுவது போல் இப்பிரச்சனை மேலும் வேறுபாடசாலைகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டிருக்கும். நிரல் கல்வி அமைச்சின் கிழக்குமாகாண கடமைகளை கவனிக்கின்ற ஒரு அதிகாரி என்ற வகையில் இப்பிரச்சனையை மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிரல் கல்வி அமைச்சுக்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். இதில் அவர் எந்த முடிவையும் கூறவில்லை. நிரல் கல்வி அமைச்சின் ஆலோசனையை கேட்டுள்ளார். இதில் என்ன தவறைக் கண்டீர்கள்? குறித்த ஆசிரியைகள் மீண்டும் அப்பாடசாலைக்கு செல்லும் போது ஆர்பாட்டங்களும் சமூகவலைத்தளங்களினூடான அசிங்கமான சாடல்களும் ஏற்படும் என்பதனை மீண்டும் ஒரு தடவை பரீட்சித்து பார்க்க விரும்புகிறீர்களா? எனவே இப்பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அவர் நியாயமாகவே எழுதியுள்ளார்.
    இவர் ஒரு முஸ்லிம் அதிகாரி என்பதனால் அவ்வாசிரியைகளை மீண்டும் தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என விரும்புகிறீர்களா? அவரது இக் கடிதம் மூலம் அவ்வாசிரியைகளின் மானம் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு, பாடசாலை மாணவர்களின் கற்றலில் ஏற்படும் தடையும் தடுக்கப்பட்டுள்ளது. இதனை இக்கடிதத்தை வாசிக்கும் எவரும் யோசிப்பர்.
    அவரை நாங்கள் ஒரு மனிதனாகவே பார்க்கின்றோம், ஒரு கல்விமானாகவே பார்க்கின்றோம் அவர் பதவியேற்ற பின்னர் பல்வேறு பிரச்சனைகளும் மிக விரைவாக முடிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் இப்போது காத்திருப்பது இல்லை. அனேகமான தினங்களில் அலுவலகத்தில் இருக்கிறார். இவ்வாறன ஒருவரை மாகாணக்கல்விப்பணிப்பாளராக நியமித்தமைக்கு ஆளுனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
    நீங்கள் இதனை இற்றைப்படுத்தா விட்டாலும் வாசிப்பதினாலாவது
    உங்களை இற்றைப்படுத்திக் கொள்ளுங்கள். இதனை இற்றைப்படுத்தாவிட்டால் நீங்களும் ஒரு இனவாதியாக நாங்கள் கருதிக்கொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.