Header Ads



"பதியுத்தீன் மஹ்மூதும், ரிஷாத் பதியுத்தீனும்"

- MSM. ஜான்ஸின் - 

52 நாள் போராட்டத்தின் பின் பாராளுமன்ற ஜனநாயகம் மீள உறுதிப் படுத்தப் பட்டமை வரவேற்கத்தக்கது. அதேவேளை  ரிஷாத் பதியுதீன்  அவர்களுக்கு கைத்தொழில் , வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி  போன்ற அமைச்சுக்களுடன் நீண்டகால இடம்பெயர்த்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சும் வழங்கப் பட்டிருப்பது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். 

யுத்தம் இடம் பெற்ற காலத்தில் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்த ரிஷாத் அவர்கள் இனமத பாகுபாடு இன்றி முகாம்களில் வாழ்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான அன்றாட அத்தியாவசிய பொருட்கள் உணவுகள் போன்றவற்றை துரிதமாக கிடைக்க வழிசெய்தார். 

யுத்தம் முடிந்து மீள்குடியேற்ற அனுமதி கிடைத்ததும்,  முகாம்களில் அடைந்து கிடந்த தமிழ் மக்களை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் விதமாக உடனடியாக மீள்குடியேற்ற உதவிகளை வழங்கி அவர்களைக் குறுகிய காலத்துக்குள் மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றினார். இவ்வாறு பல அனுபவங்களைக் கொண்ட அமைச்சர் ரிஷாத் நீண்ட காலமாக இடம்பெயர்க்கப்பட்டு வீடு வாசல் சொத்துக்கள் பணம் நகை வீட்டுப் பொருட்கள் போன்ற அனைத்தையும்  இழந்து ஆயுத முனையில் அச்சுறுத்தப் பட்டு பலாத்காரமாக வெளியேற்றப் பட்ட தனது சொந்த  இன மக்களை மீள்குடியேற்றுவதை விட்டு விட்டு  அப்போது தான் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்ற அரும் பாடு பட்டார். 

அமைச்சர் ரிஷாதுடைய இவ்வாறான செயற்பாட்டை யாழ்ப்பாண முஸ்லிம்களாகிய நாம் வரவேற்கின்றோம். இறுதி யுத்த காலத்தில் ஷெல் துப்பாக்கி மல்டி பெரல் பல்குழல் ஏவுகணைத்தாக்குதல் விமானத் தாக்குதல் போன்றவற்றுக்கு இடையில் அகப் பட்டு  பல நாட்களாக தொடர்ந்து அச்சத்தின் கீழ் வாழ்ந்து உளரீதியாக உடல் ரீதியாக பல்வேறு கஷ்டங்களையும் இழப்புகளையும் சந்தித்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டது மனிதபிமான அடிப்படையிலும் இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் அடிப்படையிலும் சரியானதே. 

ஆனால் தனது சொந்த இன மக்களை மீளக்குடியேற்ற முனைந்த போது அவர் பல்வேறு சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டார். மேலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களின் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப் பட வேண்டிய விடயத்திலும் போடப்பட்ட தடைகள் நிபந்தனைகள் என்பவற்றைப் பார்க்கும் போது முதலில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு  தமிழ் மக்களை மீளக் குடியேற்ற அமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் பிழையாகத் தெரிவதிலும் நியாயமிருக்கின்றது. 

அமைச்சர் மர்ஹூம்  பதியுத்தீன் மஹ்மூத் காலத்தில் இஸ்லாம் பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தது. இஸ்லாத்தை கற்றிருந்த உலமாக்கள் உயர்தரப் பரீட்சை எழுதாதவர்களாகவும் சிலவேளை சாதாரண தரம் எழுதாதவர்களாகவும் இருந்ததால் அவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதில் தடை இருந்தது. இதற்கு ஒரு வியூகம் வகுத்தார் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள். அதன் பிரகாரம் இசை நடன ஆசிரியர்களுக்கு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டிய அவசியம் அப்போது இருக்கவில்லை. எனவே முஸ்லிம் பாடசாலைகளில் இசை நடன ஆசிரியர்கள் தேவை எனவும்  விளம்பரம் போடப் பட்டது. பத்திரிகைகளில் வந்த அந்த விளம்பரத்தில் தகுதியாக மௌலவியாக இருக்க வேண்டும் எனப் போடப் பட்டதால் மௌலவிகள் எப்படி இசை நடனம் கற்பிப்பது என்று பதியை கேள்வி கேட்டு துளைத்து விட்டார்கள்.   

உலமாக்களிடம் சாதாரண தரச் சித்தியில்லை. எப்படி உள்வாங்குவது. அதனால் தான் இசை நடன ஆசிரியருக்கு விண்ணப்பம் கோரியுள்ளோம். முதலில் ஆசிரியத் தொழிலை பெற்றுக் கொள்ளுங்கள். அங்கு போய் இசை நடனம் கற்பிக்க வேண்டியதில்லை. இஸ்லாத்தை கற்றுக் கொடுங்கள் என்றுக் குறிவிட்டார். அதன் பிரகாரம்  1960களின் இறுதிப் பகுதியில் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இசை நடன் ஆசிரியர்களாக உள்நுழைந்து இஸ்லாம் பாடம் கற்பித்தனர். 

அதே போன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முஸ்லிம் சேவையும் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களாலேயே வேறாக்கப் பட்டது. இவ்வாறு பல முஸ்லிம் பாடசாலைகளையும்  தனது வியூகங்கள் மூலம் பதி உறுவாக்கியுள்ளார். 

அதேபோன்று அமைச்சர் ரிஷாத்தும் வியூகங்களை வகுக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லிலும் நொட்டை பிடித்து அதைப் பெரும் தடையாக்க சிலர் வருவார்கள். அவ்வாறானவர்களின் கேள்விகளை தவிடு பொடியாக்கி காரியத்தில் வெற்றிபெற சில வாசகங்கள் எமக்கு அவசியம் தேவைப் படும். 

பல்வேறு முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பல்வேறு முஸ்லிம்கள் இருந்த போதிலும் அவர்கள் யாரும் யாழ்ப்பாண முஸ்லிம்களினதோ அல்லது வடக்கு முஸ்லிம்களினதோ எந்தத் தேவையையும் நிறைவேற்ற முன்வராதது வரலாற்றில் சிவப்பு  எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய விடயம். இவர்களுக்கு மாற்றமாக அமைச்சர் ரிஷாத் அவர்கள் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் கரிசனையுடன் செயல்பட்டு வருகின்றதுடன் யாழ்ப்பாணம் உட்பட மன்னர் முல்லைத் தீவு வவுனியா போன்ற வடக்கின் அனைத்து  மாவட்டங்களிலும் பதியுத்தீன் மஹ்மூதைப் போல்  அதிக சேவை செய்த அமைச்சராக ரிஷாத்  பதியுத்தீன் விளங்குவதாலேயே பழைய விடயங்கள் மற்றும் சில வியூகங்கள் சிலவற்றை இங்கு ஞாபகப் படுத்துகின்றோம்.

3 comments:

  1. கிடைத்திருக்கும் இந்த குறுகிய கால பதவி மூலம் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  2. உன்மையில் இப்படியான மாஸ்ட்டர் ப்ளான்களே தற்காலத்தில் மனிதன் வாழ்வதற்கு வழிவகுக்கும்...

    ReplyDelete
  3. இந்த மர்ஹூம் டாக்டர் பதியுதீனுடன் என்னால் அறிந்தவரை இதுவரை எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளையோ தலைவர்களையோ ஒப்பிட முடியாது என்பதை அன்னாரை மிக நெருக்கமாக இருந்தவர்கள் நன்கு அறிவார்கள். இந்த நாட்டு மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கும் ஆற்றிய மிக உயர்ந்த சேவைகளை இன்னும் பலநூறுவருடங்களுக்கு வரும் யாரும் செய்யும் வாய்ப்புக்கிடைக்குமோ என்பதும் பெரும் சந்தேகம்.அல்லாஹ் அன்னாரைப் போன்ற தியாகிகளையும் தலைவர்களையும் உருவாக்கித் தருவானாக என அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.