Header Ads



பௌத்த பிக்குகளினால் முஸ்லிம்களுக்கான அச்சுறுத்தல் நீடிக்கிறதா..?

சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பல்வேறு வன்முறைக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம் பௌத்த பிக்கு ஒருவர் சிறிலங்கா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

‘வீட்டிலுள்ள அரிவாள் பலாப்பழத்தை மட்டும் வெட்டுவதற்குப் பயன்படாது, அதனைக் கூராக்கிக் கொண்டு களத்தில் இறங்குங்கள்’ என குறித்த புத்த பிக்கு அறிவுறுத்தியிருந்தார்.

செப்ரெம்பரில், பௌத்தர்களின் புனித இடமான பீதுருதாலகால மலையில் மூன்று பேர் நிர்வாணமாக நின்றவாறு அவற்றை ஒளிப்படங்கள் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்த சம்பவம் தொடர்பாகவும் பௌத்த பிக்கு குறிப்பிட்டிருந்தார். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இங்கு குறிப்பிடப்பட்ட முதலாவது சம்பவமானது ‘யூ ரியூப்’ மற்றும் ‘வற்ஸ் அப்’ போன்றவற்றில் பதிவாக்கப்பட்டன. இரண்டாவது சம்பவமானது சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புக்கள் நிறைந்த கருத்துக்கள் வெளியிடப்படுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

கடந்த ஆண்டில் பௌத்த பிக்குகளால் பல்வேறு வன்முறைப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பதிவுகள் தேசிய அரசியல், தமிழர்களுக்கு எதிரான யுத்தம் மற்றும் முஸ்லீம் எதிர்ப்புச் செயற்பாடுகளின் போது சிங்களவர்கள் கொல்லப்படுகின்றமை போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன. முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைச் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.

‘எல்லா முஸ்லீம்களையும் கொல்லுங்கள், முஸ்லீம் குழந்தையைக் கூட உயிருடன் விடவேண்டாம்’ என முகப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் ஒளிப்படங்களை பௌத்த பிக்கு ஒருவர் தனது வற்ஸ்அப்பில் வெளியிட்டிருந்தார்.

‘தென்னக்கும்புர பள்ளிவாசல் முறுதலாவ பள்ளிவாசல் என்பன இன்றிரவும் பிலிமத்தலாவ மற்றும் கண்டியிலுள்ள பள்ளிவாசல்கள் நாளையும் தாக்கப்படும்’ என இப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யூ ரியூப்பில் வெளியிடப்பட்ட பிறிதொரு காணொலியில் உயர் மட்ட பௌத்த பிக்குவான கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையைத் தூண்டியிருந்தார். ‘முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தான் போன்ற பௌத்த நாடுகளை அழித்துள்ளனர். தற்போது அவர்கள் தொழுகைக்காக இங்கு வருகின்றனர். இது அவர்களுடைய கலாசாரத்துடன் நெருக்கமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எங்களுடையதைப் போன்றே அவர்களுடைய நம்பிக்கையையும் உரிமைகொள்ள விரும்புகின்றனர்’ என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம் வர்த்தக உரிமையாளர்கள், பௌத்தர்களுக்கு வழங்கும் உணவுகளில் கருத்தடை மாத்திரைகளைக் கலக்கின்றனர் என்கின்ற குற்றச்சாட்டானது இவ்வாண்டு ஆரம்பத்தில் முகப்புத்தகம் மூலம் பரப்பப்பட்டது.

இதேவேளையில், கண்டி மெடமகுனுவரவில் வைத்து ட்ரக் சாரதி ஒருவர் போக்குவரத்தின் போது ஏற்பட்ட சிறு முரண்பாட்டின் போது தாக்கப்பட்டார். ஆனால் முஸ்லீம்கள் குறித்த சாரதியைக் கொன்றுவிட்டதாக பௌத்த பிக்குகள் பொய்யான தகவலைப் பரப்பியிருந்தனர். பௌத்தர்களைக் குறிவைத்து அவர்களைக் கொல்வதன் மூலம் பௌத்த பெரும்பான்மையை அழிப்பதே அவர்களின் நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டது.

சிறிலங்கா வாழ் சமூகங்களின் மத்தியில் குற்றங்கள் இடம்பெறுவதற்குத் தூண்டுகோலாக இருந்த 25 பௌத்த பிக்குகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது பலசேன, ராவண பலய, சிங்கள ராவய மற்றும் மஹாசொகொன் பலகாய போன்ற தீவிர பௌத்த குழுக்களே வன்முறையைத் தூண்டும் பதிவுகளை அதிகம் பதிவு செய்துள்ளனர்.

தாய்நாட்டைப் ‘பாதுகாத்தல்’ என்கின்ற விடயத்தை முதன்மைப்படுத்தி கல்வியறிவற்ற, தொழில்வாய்ப்பற்ற அடித்தட்டு இளைஞர்களை பௌத்த பிக்குகள் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். ‘இந்த இளைஞர்கள் இளமையாகவும் ஆவேசம் கொண்டவர்களாகவும் உள்ளனர்’ என மூத்த பிக்கு ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் நாட்டில் வன்முறை இடம்பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறிலங்காவில் முகப்புத்தகத்தைப் பயன்படுத்தும் 55,00,000 பாவனையாளர்களிடம் சிங்களத்தை முதன்மைப்படுத்தும் பதிவுகளைப் பதிவு செய்யுமாறும் கேட்கப்பட்டது. முகப்புத்தகப் பக்கங்கள் சில செயலற்றுப் போயின. முகப்புத்தக தகவல்கள் பொது பலசேனவால் செயற்படுத்தப்பட்டன.

‘முகப்புத்தகத்தில் பௌத்த தீவிரவாதப் பக்கங்கள் மற்றும் குழுக்கள் பௌத்த பிக்குகளால் தான் உருவாக்கப்பட்டன என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளின் பெயரில் முகப்புத்தகத்தில் தனிப்பட்ட கணக்குகளும் பொதுப் பக்கங்களும் உள்ளன என்பதை நாம் கண்டறிந்தோம்’ என மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தைச் சேர்ந்த அமலினி டீ சர்யா தெரிவித்தார்.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே இந்த நாட்டில் ‘மத மோதல்கள்’ ஆரம்பமானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1980களில் இவ்வாறான மத மோதல்கள் ஏற்பட்டதாகவும் அதற்குப் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 2009ன் பின்னர் மீண்டும் மத சார் மோதல்கள் இடம்பெறுவதாகவும் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ‘இனத்துவ கற்கைகளுக்கான அனைத்துலக மையம்’ தெரிவித்துள்ளது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரே பொது பலசேன போன்ற தீவிர பௌத்த அமைப்புக்களின் செயற்பாடுகள் வலுவடைந்துள்ளன. முஸ்லீம்கள் பௌத்தர்களுக்குச் சொந்தமான தாதுகோபுரங்களைக் குறிவைத்து தாக்குவதாகவும் பௌத்த கொலனிகளை அழிப்பதாகவும் தமது புனித மரமான அரச மரங்களை வெட்டுவதாகவும் எல்லா இடமும் பள்ளிவாசல்களை அமைப்பதாகவும் தீவிரவாத பௌத்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் பாரம்பரியமாக நோக்கில், சிறிலங்கா வாழ் முஸ்லீம்கள், சிங்கள பௌத்தர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்துள்ளனர்.

காலத்திற்குக் காலம் தாம் தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் எனவும் இதனால் இந்த நாட்டை தாமே ஆளவேண்டும் எனவும் சிங்கள பௌத்தர்கள் வாதிடுகின்றனர். சிங்கள பௌத்தர்களுக்கு என தனியான நாடு எதுவும் இல்லை எனவும் உலகில் சிங்கள பௌத்த இனமானது சிறுபான்மையாகக் காணப்படுவதாகவும் இதனால் தமது இனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தீவிர சிங்கள பௌத்தர்கள் கூறுகின்றனர்.

தமது இனத்தைப் பாதுகாப்பதற்கான சிங்கள பௌத்தர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில் இதனை  பௌத்த பிக்குகள் தீவிரமாக முன்னெடுப்பதால் வன்முறைகள் தோன்றுகின்றன.

‘ஆரம்ப காலங்களில் பௌத்த பிக்குகள் கிராம ஆலயங்களில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் கிராமங்களின் தலைவர்களாக நோக்கப்பட்டனர். காலப்போக்கில் ஆலயங்கள் தொடர்பற்றதாக மாறின. ஆனால் சமூகத்தில் தாம் இழந்த அடையாளத்தை மீளப் பெறவேண்டும் என பிக்குகள் விரும்பினர். இதற்கு அவர்கள் மதம் என்கின்ற கருவியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

இதனால் இவர்கள் சிறிலங்காவில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பௌத்தர்கள் அவர்களது சொந்த நாட்டில் அழிவடையப் போகின்றனர் என்கின்ற அச்சுறுத்தலை விடுக்கின்றனர்’ என சமூக விஞ்ஞானியான பத்திராஜா விளக்கம் கூறுகிறார்.

‘ஞானசார தேரரிடம் அவரது  பேச்சு முறையை மாற்றுமாறு நான் கேட்ட போது, நான் அதற்கு முன்னர் கேட்டிராத கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார்’ என பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில், சிறிலங்காவில் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தை எனக் குறிப்பிடப்படும் அனகாரிக தர்மபால பல பௌத்த பாடசாலைகளை நிறுவியதுடன் சிங்கள மொழி மற்றும் பௌத்தத்தை பலப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டார். 1972ல் சிறிலங்காவில் குடியரசு சாசனம் உருவாக்கப்பட்ட போது, அதில் பௌத்தத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது இந்த நாட்டின் தலையாய கடமை என வலியுறுத்தப்பட்டது.

வன்முறைகளைத் தூண்டும் பௌத்த பிக்குகளுக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் இனக்கல்விக்கான அனைத்துலக மையத்தின் நிறைவேற்று இயக்குநர் மேரியோ கோமெஸ் குறிப்பிட்டார்.

‘ 2009 -2015 வரையான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச பொது பலசேன அமைப்புடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணியிருந்தமை சான்றாக உள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச, 2013ல் இடம்பெற்ற பொது பலசேனவின் பௌத்த தலைமைத்துவ கற்கையான மெத் செவன நிகழ்விற்குப் பிரதம அதிதியாகவும் பங்கெடுத்திருந்தார்’ என  தெரிவித்தார்.

தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மிகவேகமான அரசியல் மாற்றம் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தீவிர பௌத்த பிக்குகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு விடுவார்களோ என்கின்ற அச்சம் நிலவுகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனவின் நிறுவுனரான ஞானசார தேரரிற்கு பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பொது பலசேன, பௌத்த சமூகத்திற்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. எல்லா பௌத்த பிக்குகளும் வன்முறையாளர்கள் என மக்கள் கருதுகின்றனர். பௌத்த பிக்குகள் சிலர் இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கு தமது அறிவைப் பயன்படுத்துகின்றனர். சிலர் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பௌத்தத்தில், தீவிரவாதத்திற்கு இடமில்லை’ என இளம் பௌத்த பிக்குவான ரத்தன நந்த பன்ரே குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில்  – Sonia Sarkar வழிமூலம்        – The telegraph மொழியாக்கம் – நித்தியபாரதி

1 comment:

Powered by Blogger.