Header Ads



தீர்ப்பு பாதகமாக வந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்கும்

உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு காரணமாக நாட்டின் அதியுயர் ஆவணமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் அதியுயர் தன்மைக்கும் மீண்டும் கௌரவம் கிடைத்துள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியினர் மட்டுமல்ல, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியமை உட்பட முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்க நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்த 62 லட்சத்தும் மேற்பட்ட பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று -14-  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நளின் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியை பெற முடியாது போயிருந்தால், பிரதம நீதியரசர்களை விரட்டியடிக்கவும் நீதிபதிகளுக்கு திராவகம் வீசவும் ஊடகவியலாளர்களின் கை,கால்களை உடைக்கவும் அவர்களை கொலை செய்யும் வெள்ளை வான் கலாசாரம் நாட்டில் மீண்டும் ஏற்பட வாய்ப்பிருந்தது.

நிலைமை இவ்வாறிருக்கும் போது கற்பாறையில் மலம் கழித்த பூனைகள் போல் மாறியுள்ள அரசியல் சூழ்ச்சியை முன்னெடுத்த சூழ்ச்சியாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்து கூறியவை மற்றும் செய்தவைகள் வெட்கத்திற்குரியது. இரண்டு வருடங்களுக்கு தேர்தலை ஒத்திவைத்துக்கொண்டதாக கம்மன்பில கூறுகிறார். கம்மன்பில தான் மிகப் பெரிய சட்ட அறிஞர் என எண்ணுகிறார்.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற அரசியலமைப்புச் சட்ட ஷரத்தை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதே நடந்தது.

கடந்த சில தினங்களாக கம்மன்பில, தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களை எமது சட்டத்தரணிகள் தேடி வருகின்றனர். இவர்கள் தமது கருத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அவதூறை ஏற்படுத்தியுள்ளனரா என்று ஆராய்ந்து வருகின்றனர். இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.