December 18, 2018

அரசியல் குழப்பத்துக்கு இப்போதைக்கு இடைவேளை விடப்பட்டிருக்கிறது, முற்றுப்புள்ளி விழுந்து விடவில்லை

தமிழகத்தின்- இன்றைய “தினமணி”யின் ஆசிரியர் தலையங்கம்...!

ரணில் விக்ரமசிங்க அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் 50 நாள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். அதிபர் மைத்ரிபால 
சிறீசேனாவின் உத்தரவுகள் அரசியல் சாசனத்துக்கு முரணானவை என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துவிட்டதன் பின்னணியில் வேறுவழியில்லாமல்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்ரமசிங்கவை அவர் மீண்டும் பிரதமராக நியமித்திருக்கிறார். 
கடந்த ஓர் ஆண்டாகவே அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இலங்கையில் கடந்த ஜனவரி 2015-இல் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் அவர்களுக்
கிடையே மட்டுமல்ல, சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து, பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்தன என்றாலும்கூட, இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதுதான் யதார்த்த உண்மை.
உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அதன் விளைவாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவு பெரும் வெற்றி அடைந்தது. அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதனால் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்த அதிபரின் எண்ணம் பொய்த்தது முதலே, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரம் காட்டத் தொடங்கினார் அதிபர் சிறீசேனா.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக, துணிந்து போர்க்கொடி தூக்கினார் அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறீசேனா. அதிபர் ராஜபட்சவை எதிர்த்து கடந்த 2015-இல் நடந்த அதிபர் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றபோது அவர் இலங்கை அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனான தலைவராக உயர்ந்தார். இவையெல்லாம் இப்போது பழங்கதையாகி விட்டிருக்கிறது.
கடந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததுபோலவே இலங்கை அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு அதிபர் சிறீசேனா முற்றுப்புள்ளி வைத்தார் என்றாலும்கூட, அதிபரான பிறகு தனது அதிகாரம் கை நழுவிப் போவதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதைத்தான் அவரது நடவடிக்கைகள் எடுத்துரைக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் தற்போது அவர் எடுக்கும் முடிவுகளும், செயல்படும் முறைகளும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த தேசிய ஐக்கிய அரசு கொண்டுவந்த அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் இலங்கை உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதிபர் சிறீசேனா தன்னிச்சையாக கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றியதும், புதிய பிரதமராக மகிந்த ராஜபட்சவை அதே நாளில் நியமித்ததும் மட்டுமல்ல, ரணில் விக்ரமசிங்கவுக்குப் பெரும்பான்மை ஆதரவு காணப்படும் நாடாளுமன்றத்தை நவம்பர் 9-ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டதும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 
அரசியல் சாசனத்தின் புதிய திருத்தங்களின்படி, நான்கரை ஆண்டுகள் நிறைவு பெறாமல் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அப்படியே கலைப்பதாக இருந்தால், நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்க முடியாது என்று இலங்கை அரசியல் சாசன சட்டப் பிரிவு 70(1) தெளிவுபடுத்துகிறது. இதன் அடிப்படையில்தான் இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிபர் சிறீசேனாவின் உத்தரவுகள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. 
முந்தைய மகிந்த ராஜபட்சவின் செயல்பாடுகளின் விளைவாக இலங்கை ஏற்கெனவே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. மிக அதிகமான வட்டிக்கு சீனாவிலிருந்து கடன் வாங்கி அதன் பாதிப்பில் சிக்கியிருக்கிறது. இந்தியாவின் நலனுக்கு எதிராக கடந்த 2014-இல் ராஜபட்ச, சீனாவின் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதனால்தான் ஏற்பட்டது. 
அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பெய்ஜிங்குக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்துதான் அதிரடி முடிவுகளை மேற்கொண்டு இலங்கையில் அரசியல் குழப்பத்துக்கு வழிகோலினார் என்பதை மறந்துவிட முடியாது. இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு ஆதரவாக சீனா செயல்படுவது தெளிவாகவே தெரிகிறது.
வேறுவழியில்லாமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், அதிபருக்கும் இவருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மறைந்துவிட்டன என்றோ, மனக் கசப்புகள் தீர்ந்து விட்டன என்றோ, ராஜபட்ச முற்றிலுமாகப் பின் வாங்கிவிட்டார் என்றோ கருதிவிடலாகாது. நாடாளுமன்றம் தனது நான்கரை ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யும்போது அதிபர் சிறீசேனா இதே அஸ்திரத்தைப் பிரயோகிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? 
இலங்கையின் அரசியல் குழப்பத்துக்கு இப்போதைக்கு இடைவேளை விடப்பட்டிருக்கிறது. முற்றுப்புள்ளி விழுந்துவிடவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment