Header Ads



திரிசங்கு நிலையில் மகிந்த – மொட்டு கட்சியிலும் இல்லையாம் - பசில் கூறுகிறார்

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த நொவம்பர் மாதம் 9ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டதும், மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 50இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டனர்.

இவர்களுக்கான உறுப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் நாடாளுமன்ற கலைப்பு  அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் நிலை சிக்கலாகியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமைய, மற்றொரு கட்சியில் உறுப்புரிமை பெற்றவரால், கட்சியில் நீடிக்க முடியாது, இதனால், மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

“சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு நாங்கள் இன்னமும் பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை வழங்கவில்லை.

அவர்கள் எம்முடன் இணைய முன்வந்தனர். விண்ணப்பங்களைக் கையளித்தனர்.  ஆனால், இன்னமும் அவர்களுக்கு உறுப்புரிமை வழங்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.